கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கார்காலக் குறிப்புகள் - 18

Tuesday, August 22, 2023

 Biopics

*************

டந்த சில நாட்களாகப் பார்த்த திரைப்படங்கள் எல்லாம் Biopic ஆக இருந்தது தற்செயல்தான். சல்வடோர் டாலியின் 'Dali Land ', எல்விஸ் பிரிஸ்லியின் 'Elvis' ஆகிய திரைப்படங்களையும், ஆர்னால்ட் ஸ்வாஸ்நேக்கரின் 'The Schwarzenegger' அன்னா நிக்கோல் ஸ்மித்தின் 'Tragic Beauty: Anna Nicole Smith' போன்ற ஆவணப்படங்களையும் பார்த்திருந்தேன்.

அமெரிக்காவில் பல பாடகர்கள், நடிகர்கள் புகழின் உச்சத்தில் போய் அழிந்து போவது ஓரு இயல்பு போல ஆகிவிட்டது. மைக்கல் ஜாக்சன், பிரின்ஸ், விட்னி ஹியூஸ்டன் போன்றவர்களின் இழப்புக்கள் எதனால் ஏற்பட்டது என்று தெளியும்போது எல்விஸ் பிரின்ஸியினதும், அன்னா ஸிமித்தினதும் சடுதியான இளம் வயது மரணங்கள் எப்படி ஏற்பட்டிருக்கும் என்பது எளிதாக விளங்கும். இதையெல்லாம் தெரிந்து கொண்டே தம்மைத் தாமே அழிக்க இந்தப் புகழ் வெளிச்சங்களுக்கு விட்டில் பூச்சிகளைப் போல இன்னமும் பலர் பறந்து போய்க் கொண்டிருக்கின்றனர்.

அதேவேளை டாலியும்
, ஸ்வாஸ்நேக்கரும் ஒருவகையில் தப்பி 70 ஐத் தாண்டி வாழ/வாழ்ந்து கொண்டிருக்க முடிந்திருக்கின்றது. டாலியையும், ஸ்வாஸ்நேக்கரையும் ஒரு புள்ளியில் எளிதாக இணைத்துப் பார்க்க முடிகிறது. அவர்கள் இருவருக்கும் இருந்த திறமைகளுக்கு அப்பால், தமது திறமை/படைப்பை விற்கும் சாமர்த்தியம் தெரிந்திருக்கின்றது. Surrealismஐ தனது படைப்பில் அதன் உச்சத்திற்குக் கொண்டு சென்றாலும், டாலி தன் eccentric தன்மையால் அவரது காலத்தைய கலைஞர்களை விட பெரும் பணம் சம்பாதிக்கும் ஒருவராக தன்னை மாற்றிக் கொண்டவர். ஆர்னால்ட்டும் தனது திறமையை விற்கும் தகுதியுடையவர். ஆகவேதான் அவர் தான் திரைப்படங்களில் நடிக்க முன்னரே ஒரு மில்லியனராக நான் மாறிவிட்டேன். எனக்குப் பணம் பெரும் விடயமாக இருக்கவில்லை என்கின்றார்.

நேற்று எங்கள் நகருக்கு புதிய நகரபிதாவைத் (Toronto Mayor) தேர்ந்தெடுத்திருந்தனர். அதற்கு முன் தொடர்ச்சியாக மூன்று முறை வென்றவர் இடைநடுவில் தனது பதவியை இராஜினாமாய்ச் செய்யவேண்டியதாகப் போய்விட்டது. காரணம், அவர் அந்தப் பதவியில் இருந்துகொண்டு தன்னோடு வேலை செய்த ஒரு பெண்ணோடு உறவுகொண்டிருந்தது பொதுவெளிக்கு வந்து விட்டமையாலாகும். எல்லா ஆண்களும் அவமானப்பட்டு வெளியேறும் பொதுவான இடமாக இதுவே இருக்கின்றது. திருமணம் செய்தவர்களை அதிகம் ஈர்க்கும் ஒரு டேட்டிங் தளமான Ashley Madison னின் தாரக மந்திரமே 'Life is short. Have an affair'. அதில் கிட்டத்தட்ட 65 மில்லியன் அங்கத்தவர்கள், 45இற்கும் மேற்பட்ட நாடுகளில் இருக்கின்றார்கள் என்கின்றார்கள்.

எங்கள் நகரபிதாவைப் போலவே
, ஸ்வாஸ்நேக்கரும் 'Life is short. Have an affair' என்று அவரது மனைவி நான்கு பிள்ளைகளுடன் இருக்கும்போது, அவரின் வீட்டு வேலைக்கு வந்த பெண்ணோடு உறவு கொண்டு, அது வெளிச்சத்துக்கு வந்து அவருக்கும் விவாகரத்தானது. தனக்கு எல்லாம் எப்படி வேண்டும் என்று மிகவும் கணக்கிட்டு உடல் வளர்த்தோன் (body builder), நடிகர், அரசியல்வாதி என பல்வேறு பரிமாணங்கள் எடுக்கும் ஆர்னால்ட் திருமணத்துக்கு மீறிய உறவையும் கணக்கிட்டுச் செய்தாரா, இல்லையா என்பது அவரது தனிப்பட்ட விடயம். ஆனால் genuine ஆக அவர் இந்த ஆவணப்படத்தில் இது குறித்துப் பேசுகின்றார். ஆனால் அதே சமயம் இவற்றை 'அந்தந்த நேரத்து நியாயம்' என்று ஆண்களைப் போல பெண்களும் தமது இவ்வாறான பலவீனங்களை வெளிப்படையாகப் பேச அவர்களுக்குரிய வெளிகள் இருக்கின்றனவா என்பதே கேள்வி. அது அன்னா நிக்கோலுக்கு, ஆர்னோல்ட் போல இல்லை என்பதே கவனிக்க வேண்டியது.

அன்னா மூத்த மகனின் இழப்பின் துயரத்தில் இருக்கும்போதே
, அவருக்கு பிறந்த புதுக்குழந்தையின் தகப்பன் யாரென்ற செய்திகள்/நீதிமன்ற விசாரணைகள் தொடங்கிவிட்டன. அவரின் புகழின் சரிவோடு, மகனின் சடுதியான இழப்பு, அன்னாவை அவர் தன் முடிவைத் தேடிச்செல்வதை விரைவுபடுத்துகின்றது. மகன் இறந்த சில மாதங்களில் அன்னா தனக்கான முடிவை, மர்லின் மன்றோவைப் போலத் தேடிக் கொள்கின்றார்.

ஆக புகழும், பெரும் பணமும் இங்கே எல்விஸ், அன்னா போன்றவர்களுக்கு எந்த நிம்மதியையோ, சந்தோசத்தையோ பெரிதாகக் கொடுக்கவில்லை. பாடகர்கள், நடிகர்களை விட அவர்களுக்குரிய முகவர்கள், தயாரிப்பாளர்கள் அரங்கின் முன்னணியில் வராமல் செழிப்பானதொரு வாழ்க்கையை வாழவும் கூடும். அவர்களுக்கு இவர்கள் தங்க முட்டையிடும் வாத்துக்கள். எப்போது இந்தப் பாடகர்கள்/நடிகர்களை விட இன்னும் அதிக தங்க முட்டையிடும் வாத்துக்கள் வருகின்றனவோ அவர்களைத் தேடிப் போகவும் இவர்கள் தயங்கமாட்டார்கள். ஒரு காலத்தில் மில்லியனராக இருந்த டாலி கூட கடைசிக்காலத்தில் மிகவும் கஷ்டப்பட்டார் என்றுதான் டாலியோடு கூட இருந்த ஒரு இளைஞனின் பார்வையில் 'DaliLand' இல் சித்திரிக்கப்படுகின்றது.

நமக்குச் சிறந்த வாழ்க்கையென சட்டகங்கள் இட்டு காட்டப்படுபவை எல்லாம் தோற்ற மயக்கங்கள்தானோ? அப்படியெனில் எது எமக்கான வாழ்க்கை என்பதற்கு எந்த முன்னுதாரணமும் இல்லை என்று எடுத்துக் கொள்ளலாமா? அதேவேளை சர்ச்சைகள் நிறைந்த, tragedy ஆன முடிவை நோக்கிச் செல்லும் வாழ்க்கையைத் தேடுவதுதானா மனிதர்களின் ஆழ்மன இச்சையாக இருக்கின்றதா என்ற கேள்வியையும் நாம் கேட்டுப் பார்க்க வேண்டியிருக்கிறது.

****************


(June, 2023)

0 comments: