கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கார்காலக் குறிப்புகள் - 20

Tuesday, August 29, 2023

 

ஹொலிவூட் 1920களில் மெளனப் படங்களில் இருந்து, பேசும் படங்களுக்கு மாறுகின்ற காலகட்டதைப் நுட்பமாய்ப் பேசுகின்ற திரைப்படம். அந்தக் கதையை விளிம்புநிலை மனிதர்களின் பார்வையினூடு முன்வைக்கின்றது. ஒரு மெக்ஸிக்கன் குடியேறி ஹொலிவூட் என்னும் பிரமாண்டத்தில் பங்கு பெறுவதற்காக வருவதையும், அவன் அங்கே விளிம்புநிலை நடிகையாக இருக்கும் நியூ ஜேர்ஸியைச் சேர்ந்த பெண் மீது காதல் கொள்வதையும் முக்கிய களமாகக் கொண்டு அவர்கள் எவ்வாறு ஹொலிவூட்டில் முக்கியமானவர்களாக மாறி, பின் வீழ்ச்சியடைகின்றார்கள் என்பது முக்கிய கதைக்களன் என்றாலும், அதனூடு ஹொலிவூட்டில் நடக்கும் பல்வேறு மாற்றங்களை -கறுப்பினத்தவர்கள் மீதிருக்கும் இனவாதத்தையும், அவர்களின் திறமைக்காக மீறல்கள் நிகழ்வதையும், வணிக நோக்கத்திற்காக அந்த 'கறுப்பு' அடையாளம் சுரண்டப்படுவதையும்- உயர்குடிகளின் பகட்டான போலியான வாழ்க்கை முறையையும் அற்புதமாக இப்படம் சித்தரிக்கின்றது.



அதிலும் மெளனப்படக் காலங்களில் மிகப்பெரும் நடிகனாக ஒரு ஸ்டூடியோவில் விகசித்துக் கொண்டிருக்கும் நாயகன், பின்னர் பேசும் படங்களில் நடிக்கும்போது வீழ்ச்சியடைவதை (சார்ளி சப்ளினுக்கும் இது நிகழ்ந்தது) ஒரு முக்கிய உபகதையாக இது சொல்கின்றது. வீழ்ச்சியடையும் நாயகன், அவனுக்காக திரைக்கதை எழுதும் பெண்மணியிடம் 'நீயும் என்னை கைவிட்டுவிட்டாயா?' என வினாவுகின்ற காட்சியில், அந்த எழுத்தாளப் பெண், 'உனக்கான காலம் முடிந்துவிட்டது. அதை தெளிவாக விளங்கிக் கொள்' என்பாள். நீயும், நானும் புகழ் என்னும் வெளிச்சத்தில் ஒரு பொழுது பிரகாசித்தவர்கள். ஆனால் நம்மை இயக்குபவர்கள் இருட்டில் நிற்பவர்கள். ஒரு வீடு எரியும்போது எல்லாமே சாம்பலாகிப் போனாலும், கரப்பான்பூச்சிகள் தப்பியோடிவிடும். அவை இருளுக்குள் அஞ்ஞானவாசம் இருந்து அடுத்த சந்தர்ப்பங்களுக்காய் காத்திருக்கும். அவ்வாறுதான் இந்த ஸ்டூடியோக்களும், அதன் தயாரிப்பாளர்களும்.

மக்கான காலம் முடிந்துவிட்டது மட்டுமின்றி, இதைப் போல நானும், நீயும் சந்தித்து இபபடி உரையாடுவதைப் போல, நூற்றுக்கணக்கானவர்கள் புகழின் உச்சியில் இருந்து வீழ்ச்சியுறுவதைப் பற்றி எதிர்காலத்திலும் பேசத்தான் போகின்றார்கள். 'நமக்கான காலம் முடிந்துவிட்டது' என்ற உண்மையை முதலில் ஒப்புக்கொள். ஆனால் ஒரு காலத்தில் நாம் ஒளிர்விட்டு ஒளிர்ந்தவர்கள். அதை எதிர்காலத்தில் யாரோ ஒருவன் கடந்தகாலத்தைத் துழாவும்போது நம்மை கண்டுபிடிப்பான். நமது பொற்காலத்தை நாம் இங்கே இல்லாதபோது 50 வருடங்களின் பின்னால் திரும்பக் கொண்டுவருவான். இந்தக் கசப்பான உண்மையை ஏற்றுக்கொள்வதுதான் நாம் இனி செய்ய வேண்டியது என்பாள் அந்த திரைக்கதை எழுத்தாளர்.

தமிழில் அசோகமித்திரன் இந்தப் பின்னணியில் வேலை செய்திருக்கின்றார். சில புனைவுகளையும் எழுதியிருக்கின்றார் என்பதும் நினைவுக்கு வந்தது. நாயகன், ஹெமிங்வேயைப் போல துப்பாக்கியால் தன் முடிவைத் தேடிக் கொள்கின்றான். திரையுலகின் உச்சத்துக்குப் போல நியூ ஜேர்ஸி நாயகி இளமையிலே புகழ் வெளிச்சத்தில் இருந்து இல்லாமற் போகின்றாள். அவள் மீது காதல் பித்துப் பிடித்த மெக்ஸிக்கோ குடியேறி மீண்டும் 20 வருடங்களுக்குப் பிறகு மனைவி பிள்ளையுடன் அந்த ஸ்டூடியோவை வந்து பார்க்கின்றான். ஒருகாலத்தில் அந்த ஸ்டூடியோவின் முக்கிய அச்சாக சுழன்ற அவனுக்கு வாயிலைத் தாண்டி உள்ளே போக அனுமதியில்லை. காலம் தன் அச்சில் எதையும் பொருட்படுத்தாது  சுழன்று கொண்டிருக்கின்றது.

 ***********


(Jul 08, 2023)


0 comments: