-பசுமையின் மாபெரும் வெளி-
நான் அந்த மலையை நோக்கிப் போனபோது இன்னும் எவ்வளவு தூரம் போகவேண்டும் என்ற நினைப்பே எனக்குள் முதலில் தோன்றியது. மதியத்துக்குப் பிறகு மழை வந்துவிடும் அதற்குள் குறிப்பிட்ட இடத்துக்கு சென்றுவிட வேண்டும் என்று சொல்லப்பட்டிருந்தது. மழை வந்துவிட்டால் மலைக்குப் போவது கடினமாகிவிடும். ஆனால் நான் அந்த நகரத்துக்குள் நுழைவதற்குள்ளேயே மழை தொடங்கிவிட்டிருந்தது.
இடையில் இந்த ஒற்றையடிப்பாதையில் கொஞ்சம் சறுக்கினாலே ஓட்டோ அதலபாதாளத்தில் விழுந்துவிடும் என்று அந்த ஓட்டோக்காரர் பயங்காட்டினார். எட்டிப் பார்த்தபோது எனக்கு பசுமைதான், காதலிகளின் முகங்களைப் போல அழகாய்த் தெரிந்தது. அதலபாதாளம், அவர்கள் காதலின் நிமித்தம் தந்த வலிகளைப் போல மறைந்து இருக்கலாம். அதைப் பற்றிய கவலை இப்போது எனக்கேன் என நிம்மதிப் பெருமூச்சை விட்டேன்.
வழியெங்கும் மரங்களின் கிளைகள் பரவி போகும் பாதையைக் குறுக்கிடச் செய்தன. தலையைப் பத்திரமாக உள்ளே வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டேன். எப்போதும் பாதை இப்படித்தானா எனக் கேட்டேன். இல்லை, இப்போது மழையின் நிமித்தம் கிளைகளெல்லாம் வளைந்து இப்படி வரவேற்புக் கோபுரங்கள் ஆகிவிட்டன என்றார் அந்தச் சாரதி.
நெடுநேரம் காடுகளில் தொலையும்போதும், கடலில் கரையும்போதும் இவ்வாறான எண்ணம் அடிக்கடி எழும். மேலும் எப்போதும் இந்த இயற்கை நமக்காய்க் காத்திருக்கின்றது. ஆனால் நாம் அதை அனுபவிக்கத் தயாராக இருக்கின்றோமா என்பதுதான் முக்கிய வினா. நாம் வாழும் வாழ்விற்கு நிகரான சமாந்தரமான/இணையான வாழ்வுகள் நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன. அது எவ்வாறானாயினும் நமக்குப் பிடித்த ஒரு வழித்தடத்தில் சென்றுகொண்டிருக்கின்றோமா என்பதுதான் நாம் நம்மை நோக்கிக் கேட்கவேண்டியது.
தமக்குப் பிடித்தவற்றுக்காய், தாம் வாழ விரும்பும் வாழ்க்கைக்காக லெளதீக வாழ்வினைத் துறந்து போனவர்களின் மனோதிடத்தை இவ்வாறான பொழுதுகளில் வியப்பதுண்டு. ஏனெனில் விரும்பிய ஒன்றைச் செய்யத் தொடங்கும்போது எத்தனை விடயங்களை/பொறுப்புக்களை நினைத்து ஒவ்வொருவரும் கவலைப்பட வேண்டியிருக்கின்றது. நமக்குள் இருந்து நம்மை அச்சுறுத்தும் நம் சொந்த பயங்களைத் தாண்டுவதென்பது அவ்வளவு எளிதானதல்ல.
என் எல்லா எண்ணங்களையும் கொஞ்சம் ஒதுக்கிவை என்று சொல்வதுபோல மழை விடாது பொழிந்து கொண்டிருந்தது. பசுமை எங்கும் விரிந்து கிடந்தது. பாக்குகளும், மிளகுகளும், ஈரப்பலாக்களும், தென்னைகளும் ஒன்றையொன்று மீறி செழிப்பாக வளர்ந்திருந்தன. சரிவான நிலத்தில் கட்டப்பட்டிருந்த வீடே எனது தற்காலிகத் தங்குமிடம். அருகே சுனை பாய்ந்து கொண்டிருந்தது. அதிலிருந்தே குடிப்பதற்கு நீரும், குளிப்பதற்கான நீரும் வந்து கொண்டிருந்தன.
நான் நின்ற வீட்டினர் தமிழும் சிங்களமும் கலந்த ஒரு பின்னணியுள்ள குடும்பம். பிள்ளைகள் சிங்களத்திலேயே படிக்கின்றார்கள், ஆனால் தமிழ் பேசுகின்றார்கள். அடுத்தடுத்த தலைமுறையில் அவர்கள் முற்றாக சிங்களவர்கள் ஆகிவிடுவார்கள் என நினைக்கின்றேன். அவர்கள் வேட்டையின் மரபை இன்னும் கைவிடாதவர்கள். இப்போதும் காட்டுப்பன்றியும், முள்ளம்பன்றியும், உடும்பும் பிடிக்க வேட்டைக்குத் துப்பாக்கியோடு போகின்றவர்கள்.
ஆங்கிலேயர் காலத்தில் தமிழகத்தின் தென்பகுதியில் இருந்து இவர்களின் கொள்ளுத்தாத்தா இந்த மலைப்பகுதிக்கு வந்திருக்கின்றார். தான்தோன்றித்தனமாய் பல பகுதிகளுக்கு அலைந்தவர், எவ்வாறு எதன்பொருட்டு அவர் இலங்கையின் இந்தப் பகுதிக்கு வந்தாரென்று தெரியவில்லை. இந்த மலையில் முன்னொருகாலத்தில் தேயிலை/இறப்பர் தோட்டம் ஆங்கிலேயரினால் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே அது எஸ்டேட் ஆக விரிந்தபோது பின்னாளில் பல நூற்றுக்கணக்கானோர் வந்து குடியேறியிருக்கின்றார்கள். இவர்களின் கொள்ளுத்தாத்தா ஆங்கிலேயரோடு வேட்டைக்குப் போகின்றவராகவும், வீடுகளை நிர்மாணிக்கின்றவராகவும், தொழிலாளிகளை வழிநடத்துபவராகவும் இருந்திருக்கின்றார். அவரின் கீழ் சில நூறுபேர் கட்டுமானத்தில் வேலை செய்தனர் என்றனர். எனவே அவரின் பெயரில் இம்மலைகளில் மட்டுமில்லை, நகரத்திலும் நிலபுலங்கள் இருந்திருக்கின்றது.
பின்னர் ஆங்கிலேயர் இந்த எஸ்டேட்டை கைவிடுகின்றனர். இங்கிருந்த தொழிலாளர்களும் வேறு வேறு இடங்களுக்குப் இடம்பெயர, இந்தக் குடும்பமும் அதன் வாரிசுகளும் மட்டும் இந்த மலையில் தங்கிவிட்டார்கள். இப்போது அவர்களின் நிலப்பரப்புகள் சுருங்கிவிட்டன. எவரெவரோ இவர்களின் நகரத்து நிலங்களை சுவீகரித்தும் விட்டார்கள். ஒருவகையில் வாழ்ந்து கெட்ட குடும்பம் என்று சொல்லலாமோ என்னவோ? ஆனால் அவர்களுக்கு இன்னமும் தாங்கள் இந்த மலைகளுக்கு உரியவர்கள் என்று கூறுவதிலும், வேட்டையின் நுட்பம் தெரிந்த பெரும் வேட்டைக்காரர்கள் என்பதிலும் ஒருவித கம்பீரமும் பெருமையும் இருக்கின்றது.
வெளியே கொஞ்ச தூரம் நடந்தாலே மலை அட்டைகள் எம்மையறியாமலே ஏறிவிடுகின்றன. நான் சப்பாத்துபோட்டு அருகில் இருந்த இடங்களுக்கு நடந்தபோது இரத்தம் உறிஞ்சும் அட்டைகள் என்னோடும் நேசம் கொண்டன. எப்போதும் கையில் உப்பு கலக்கப்பட்ட போத்தல்களோடு திரிய வேண்டியிருந்தது. உப்புக்கரைசலை ஊற்றினால் -நம்மால் பலன் பெற்றுவிட்டு, நீ யாரென்று பின்னாட்களில் கேட்டு முகஞ்சுழிக்கும் 'உத்தமர்'கள் போல- அட்டைகளும் சட்டென்று உடல் சுருங்கி நம்மைவிட்டு அகன்று விடுகின்றன.
அந்த மாலை வளர்ந்தோருக்கான இரவு. நான் வாங்கிப் போன செம்மது அவர்களுக்கு கேலிக்குரிய குடிவகை. நாமெல்லாம் வேட்டையில் மட்டுமில்லை, குடியிலும் பெருங்குடியர்கள், இதெல்லாம் உதவாது என்றார்கள். எனவே அரக் (சாராயம்) முழுப்போத்தலை உள்ளூர் வாசத்துடன் இறக்கினோம். மலையின் உச்சியில் ஒரு நாடோடி, கித்துள் கள் கொண்டுவர, மதியம் மலையேறிச் சென்று அதை அருந்தி மாலை சூரியன் மறையும்வரை மலைச்சிகரத்தில் போதையோடு கழித்த நாட்கள் பற்றி கதையதையாக அவர்கள் சொன்னார்கள். இது வெறும் மலை மட்டுமில்லை எதுவும் எளிதாக விளையும் பொன்னான பூமியுங்கூட. அங்கே சிவமூலிகைகளும் தேடினால் கிடைக்கும். அன்னமாய் மேலுலகையும், பன்றியாய் கீழுலகையும் கடுமையாய்த் தேடியவர்க்கு அருள்பாலித்தவன் நமது சிவன். தேடலைப் பொறுத்துக் கிடைக்கும் மூலிகை, அந்த மாலைக் குளிருக்கு வெம்மையின் உச்சம் ஏற்றுபவை.
இந்த மனிதர்களுக்கு இந்த மலையே வாழ்வு. அதற்குள் மிளகும், பாக்கும், ஈரப்பலாக்காய்களும், வாழைகளும், அவக்காடோக்களும் போதுமென்றளவுக்கு விளைகின்றன. வேட்டைக்காலங்களில் நல்ல சுவையான இறைச்சிகள் கிடைக்கின்றன. என்ன வேண்டும் இந்த வாழ்வுக்கு என்ற அலட்சியத்தோடும் கம்பீரத்தோடும் திரியும் வாழ்வு அவர்களுக்கு. என்றாலும் அவர்களுக்குள்ளும் பிரச்சினைகள் இருக்கின்றன. அதை அலசு ஆராய்வதால் என்ன பயன்? நாம் அங்கு போய் வாழவா போகின்றோம்? எந்த மனிதர்கள்தான் சிக்கல்கள் இல்லாது இருக்கின்றனர்.
எனக்கு அந்த மலைக்கும் காட்டுக்கும் இடையில் குடில் அமைத்து வாழும் ஆசை எழுந்தது. ஆனால் என்னால் ஒருநாள் கூட தனித்து அங்கே வாழமுடியாது என்பதும் புரிந்தது. ஐயோ, இந்த சுனைநீர் இவ்வளவு குளிருகின்றதே நீராட வேறு வழியிருக்கா என்று யோசிக்கும் சாதாரண ஒருவன் நான். இவர்கள் இந்த நிலப்பரப்பில் தகவமைத்துக் கொள்ள எவ்வளவு காலம் ஆகியிருக்கும். அது வாழையடி வாழையாக வாழ்ந்து வந்த பரம்பரைக்கு, இந்த மலை எங்கள் மலையென்று கொடுத்த மாபெரும் வைராக்கியம் அல்லவா? ஒரு நேரச் சாப்பாடு இல்லையென்றால் கனிதரும் மரங்களைத் தேடியோ அல்லது துப்பாக்கி தூக்கிக் கொண்டு வேட்டையாடப் போகும் அவர்களைப் போன்ற சாகசக்காரனோ அல்ல நான்.
நான் அந்த இயற்கைக்குள் இருந்து வாசித்து எழுத விரும்புகின்றவன். என் தனிமையை நீ கெடுக்கிறாய் எனச் செல்லமாய்க் கோபித்தபடி என் காதலியின் கதகதப்பான அரவணைப்புக்குள் உறங்க விரும்புகின்ற சாதாரணமானவன். எனவே இந்த மலையில் என்றென்றும் வாழும் என் கனவு வெறும் பகற்கனவே. ஆனாலும் அடிக்கடி இவ்வாறான மலைகளையும் காடுகளையும் தேடிப் போகவே என்றும் பிரியப்படுவேன்.
மலைகளினதும் காடுகளினதும் கதைகளை, மனிதர்கள் தம் இரத்தமும் வியர்வையும் கலந்து சொல்கின்றபோதே அவை மாமலைகளாகவும், பெருங்காடாகவும் மாறுகின்றன.
மாமலைகளையும் பெருங்காடுகளையும் கடந்து செல்லுமொருவன், தன் மூதாதையர் சுதந்திரமாய் உலாவித் திரிந்த குறிஞ்சித்திணையினதும், முல்லைத்திணையினதும் ஒருதுளி வாழ்வையேனும் அகத்தில் தரிசிக்கவே செய்வான்.
அதுவே இயற்கை அவனுக்கு அளிக்கும் மாபெரும் கொடை!
**********************************
(நன்றி: 'அம்ருதா' - ஆவணி, 2023)
0 comments:
Post a Comment