கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கார்காலக் குறிப்புகள் - 17

Sunday, August 20, 2023

 

சகீனாவின் முத்தம்

************

"ற்செயல் என்பது கிடையாது. சில நிகழ்வுகளின் முந்தைய தொடர்பு விதிகள் நமக்குப் புலப்படுவதில்லை. அவ்வளவுதான்." என்ற வரிகளோடு தொடங்குகின்றது 'சகீனாவின் முத்தம்' என்கின்ற இந்த நாவல். அதற்கேற்ப இந்நாவலில் தற்செயல் போல நிகழ்கின்ற பல சம்பவங்களுக்கு ஏதோ காரண காரியங்கள் இருக்கின்றன. பெருநகரத்தில் வசிக்கின்ற வெங்கட் என்கின்ற வெங்கட் ரமணனின் பார்வையில் கதை சொல்லப்படுகின்றது.

வெங்கட்டிற்கு விஜி என்கின்ற மனைவியும், 20 வயதில் இருக்கின்ற ரேகா என்கின்ற மகளும் இருக்கின்றனர். நாவலின் தொடக்கத்தில் ஒரு அரசியல் கட்சி சார்ந்த குழு வெங்கட்டின் மகள் ரேகாவோடு பேச வேண்டும் என்று வீட்டுக்கு வந்து வெங்கட்டை அதட்டுகின்றனர். ரேகாவோ வெங்கட் பிறந்த தொலைதூர ஊரான சிறு கிராமத்துக்குச் சென்றிருக்கின்றார். அவ்வாறு சென்ற ரேகாவைக் காணவில்லை என்று வெங்கட்டும், விஜியும் பதட்டப்பட்டு அந்த ஊருக்குப் புறப்படுகின்றார். அந்தப் பயணத்தோடு வெங்கட் தன் சிறுவயது அனுபவங்களையும், அவரின் குடும்ப வரலாற்றையும் வாசகர்க்குச் சொல்லத் தொடங்குகின்றார்.

பெருநகரில் மத்தியதர வர்க்கமாய், மனைவி பிள்ளையோடு வெங்கட் வாழ்ந்தாலும், அவரின் கதைசொல்லலில் அவரையறியாமலே அவர் இந்த சமூகத்தின் அனைத்துப் பிற்போக்குத் தனங்களின் பிரதிநிதியாக இருப்பதைக் காண்கின்றோம். ஒரு தேர்தலின்போது பெண்கள் இப்படித்தான் ஆடைகள் அணியவேண்டும் என்கின்ற அரசியல்வாதிக்கு எதிராக மனைவியும், மகளும் இருந்தாலும், வெங்கட் அந்த அரசியல்வாதிக்கு -நேரடியாகச் சொல்லாவிட்டாலும்- வாக்குப் போடுகின்றார்.

இந்த ஆடை பற்றி குடும்பத்தில் நடக்கும் விவாதத்தின்போது வெங்கட்டின் மனைவி விஜி தன் தோழியான அனகாவின் கதையைச் சொல்வார். அனகாவின் கணவன் வியாபாரம் செய்பவன். ஆசிரியராக இருக்கும் அனகாவை வேலையை விட்டுவிட நச்சரிப்பவன். சேலை இல்லாமல் வேறு ஆடை அணிய விடாதவன். அவனோடு வாழ்வதென்பதே அவமானம் என்று அனகா சொல்கின்றாள். மேலும் 'அவனுடன் படுப்பது என்றால் மிகவும் அசிங்கமாகத் தோண்டும். அவன் கைபட்டாலே போதும் வாந்தி வரும். என்ன செய்வது என் தலையெழுத்து' என்று சொல்லி அனகா அழுகின்றாள்.

அவ்வாறு ஆடைகளின் கட்டுப்பாட்டைக் கொண்டுவரும் ஒரு 'கலாசார காவலனே' தேர்தலில் வெல்கின்றான். இதனால் விஜியும், ரேகாவும் கோபமடைகின்றனர். ரேகா அப்போது சொல்கின்றாள், 'அம்மா இவனுக்கு ஓட்டுப்போட்ட இத்தனை இலட்சம் பேரில் பாதிக்கு மேல் ஆண்களாக இருப்பார்கள். திருமணம் ஆனவர்கள் நிச்சயம் இதில் கால்வாசிப் பேர் இருப்பார்கள். அவர்கள் மனைவிகளின் பாடு என்னவாகும்' என்கின்றாள்.

அதற்கு விஜி கொடுக்கும் பதில்தான் சுவாரசியமானது: 'அனகாவின் கணவனைப் போல எல்லாவற்றையும் திறந்து வைப்பது ஒருவகை. ஆகக்குறைந்தது எதை சகித்துக் கொண்டிருக்கின்றோம் என்பதாவது தெரிந்திருக்கும். ஆனால் இரகசியமாகச் சாணி திங்கும் இந்த துரோகிகள்தான் மிகவும் அசிங்கம். வாய் நாறடித்தாலும் திங்கவில்லை என்று வெட்கமில்லாமல் பொய்சொல்லி சாதிப்பார்கள்' என்கின்றார்.

உண்மையில் இதுதான் இன்று சமூக வலைத்தளங்களில் மட்டுமில்லை, யதார்த்ததிலும் நடந்துகொண்டிருக்கின்றது. தம்மை முற்போக்கானவர்களாய்க் காட்டிக் கொண்டிருக்கும் பலரின் முகமூடிகளுக்குப் பின்னால் இருப்பது படுபிற்போக்குத்தனமே. இதை இந்த நாவலில் பல்வேறு தளங்களில் வெங்கட் என்கின்ற பாத்திரத்தின் மூலம் விவேக் ஷான்பாக் காட்டுகின்ற இடங்கள் ஆழமானவை.

ரேகா காணாமல் போய்விட்டார் என்று தேடிக் கொண்டிருக்கும்போதுதான் ரமணன் என்கின்ற வெங்கட்டின் மாமாவின் கதை சொல்லப்படுகின்றது. வெங்கட்டின் தாயின் தம்பியான ரமணனை அவனுக்குப் பெற்றோர் இல்லாது போகின்ற சின்ன வயதிலேயே நுட்பமாக அவனுக்குரிய சொத்தை வெங்கட்டின் தகப்பனாரும், சித்தப்பாவும் சுவீகரிக்கின்றார். வெங்கட்டின் தாயோ அவர் இறக்கும்வரை தம்பிக்குரியதை தம்பிக்குக் கொடுத்துவிடவேண்டும் என்று ஞாபகப்படுத்திக் கொண்டிருப்பார்கள்.

நகரத்தில் படித்துக் கொண்டிருக்கும் ரமணன் ஊருக்கு வரும்போதெல்லாம் ஓர் எளிய மனிதனாக இருப்பான். நகரில் இருந்து அவன் எழுதும் கடிதங்கள் எல்லாம் எளிதில் வாசிக்க முடியாத எழுத்தில் எழுதப்பட்டிருக்கும். ஒருநாள் ரமணனின் கடிதம் வருகின்றது. அதில் தன்னை பொலிஸ் தேடிக் கொண்டிருக்கின்றது என்றும்
, இனி அவர்கள் என்னை உயிருடன் விடமாட்டார்கள் என்றும், முகவரி உள்ள தனது கடிதங்கள் உள்ளிட்ட எல்லா அடையாளங்களையும் அழித்துவிடச் சொல்கின்றான். தனக்கிருக்கும் ஒரு சொத்தான தோட்டக்காணியை மட்டும் தனது காதலி தேடி ஊருக்கு வந்தால் அவளுக்குக் கொடுக்கும்படியும், இல்லாவிட்டால் தங்கள் வீட்டில் வேலை செய்யும் நான்கு வேலைக்காரர்களுக்கு அதைப் பகிர்ந்துகொடுக்கும்படியும் சொல்கின்றான்.

நேரடியாக இந்த நாவலில் அடையாளப்படுத்தபடாவிட்டாலும் நக்சலைட்டாக ஆகிவிட்டான் என்பது புரிகின்றது. பிறகு ரமணன் கூறியதுமாதிரியே பொலிஸ் அவனைத் தேடி ஊருக்கு வருகின்றது. இவையெல்லாம் ரேகா ஒரு துப்பறியும் பத்திரிகைக்குக் கட்டுரை எழுதுவதற்காகத்தான் காணாமல் எங்கேயோ போய்விட்டாள் என்கின்றபோது வெங்கட்டுக்கு நினைவில் வருகின்றன.

அவரது குடும்பத்து பல இரகசியங்கள் இப்போது வெளிவரத் தொடங்குகின்றன. விஜியும், ரேகாவும் தன்னை விட்டு விலத்திப் போகின்றனர் என்று தெரிகின்றது. அதைவிட வெங்கட் தன்னை ஒரு முற்போக்காளன் என்று சொல்லிக் கொண்டாலும் அவனின் பிற்போக்குத்தனங்களினால் இது நிகழ்கின்றது என்பதை அறிந்தாலும், அநேக ஆண்கள் போல தன்னை அவர் திருத்திக் கொள்ளவும் தயாரில்லை.

ரேகா எதற்காகக் காணாமற் போனாள், மீண்டும் நகர் திரும்பும்போது ஏன் வெங்கட்டின் வீட்டில் திருடர்கள் உட்புகுந்தார்கள், ரமணனின் காதலி அவர்களைத் தேடி வந்தாளா போன்றவை அறிவதன் மூலம் நாவலில் தொடக்கத்தில் சொல்லப்பட்டது போல "தற்செயல் என்பது கிடையாது. சில நிகழ்வுகளின் முந்தைய தொடர்பு விதிகள் நமக்குப் புலப்படுவதில்லை" என்பதை மீண்டும் நாங்கள் நினைவூட்டிக் கொள்ளலாம்.

ஒரேவிதமான யதார்த்தக் கதைகளை விதந்தோத்துகின்ற இன்றைய தமிழ்ச்சூழலில் இது வித்தியாசமான வாசிப்பைத் தருகின்றது. கடந்து போன காலங்களை மட்டுமில்லை, நம் சமகாலத்தையும் எப்படி விமர்சனரீதியாக அணுகிப் பார்க்கலாமென்பதற்கு இந்த நாவல் நல்லதொரு உதாரணம். விவேக் ஷான்பாக் கன்னடத்தில் எழுதியதை கே. நல்லதம்பி தமிழில் அழகாகத் தந்திருக்கின்றார்.

தாறுமாறான கையெழுத்தில் எழுதப்படும் ரமணனின் கடிதத்தை வாசிக்கும்போது 'சகீனாவின் முத்தம்' என்று இருப்பதைக் கண்டு வெங்கட்டின் குடும்பம் ரமணன் தன் காதலி சகீனா முத்தம் கொடுத்ததைப் பற்றி எழுதியிருக்கின்றான் என்று நினைக்கின்றனர். ஆனால் பின்னர் அந்த வரிகளைச் சரியாக வாசிக்கும்போது ரமணன் சொல்லியிருப்பது 'சாவிலிருந்து முக்தி அடைவது எளிது' என்பதை அவர்கள் அறிகிறார்கள்.

ஒரு போராளியாகப் போயிருக்கின்ற ரமணன் தன் முடிவை உணர்ந்து சொல்கின்ற வரிகள் இவை. சகீனாவின் முத்ததிற்கும், சாவிலிருந்து முக்தி அடைவது எளிதிற்கும் இடையில் இருப்பது, காலவெள்ளத்தில் கரைந்து போய் மறக்கடிக்கப்பட்ட ஒரு மனிதனின் பெரும் போராட்ட வாழ்க்கை!

*******************

('சகீனாவின் முத்தம்' - விவேக் ஷான்பாக், தமிழில் கே.நல்லதம்பி)

(Jun, 2023)

மாத்தளை

Thursday, August 17, 2023

 -பசுமையின் மாபெரும் வெளி-


நான் அந்த மலையை நோக்கிப் போனபோது இன்னும் எவ்வளவு தூரம் போகவேண்டும் என்ற நினைப்பே எனக்குள் முதலில் தோன்றியது. மதியத்துக்குப் பிறகு மழை வந்துவிடும் அதற்குள் குறிப்பிட்ட இடத்துக்கு சென்றுவிட வேண்டும் என்று சொல்லப்பட்டிருந்தது. மழை வந்துவிட்டால் மலைக்குப் போவது கடினமாகிவிடும். ஆனால் நான் அந்த நகரத்துக்குள் நுழைவதற்குள்ளேயே மழை தொடங்கிவிட்டிருந்தது. 


அநேகமாய் நடந்தே அந்த மலையில் வசிப்பவர்கள் நகரத்துக்குக் கீழிறங்கி வருவார்கள். ஒன்றிரண்டு ஓட்டோக்காரர் மட்டும் அந்த உயரத்துக்கு மேலே ஏறி வரச் சம்மதிப்பார்கள். ஒரு ஓட்டோ என்னை ஏற்றிக்கொண்டு மலைக்கு மழையிடையே ஏற்றிக் கொண்டு போனது. ஓட்டோ ஏறமுடியாத இடங்களும் உண்டு. அப்போது இறங்கி நடந்தால்தான் ஓட்டோ ஒருமாதிரி அந்த செங்குத்துப் பாதையில் மேலே ஏறிப் போகும். 


இடையில் இந்த ஒற்றையடிப்பாதையில் கொஞ்சம் சறுக்கினாலே ஓட்டோ அதலபாதாளத்தில் விழுந்துவிடும் என்று அந்த ஓட்டோக்காரர் பயங்காட்டினார். எட்டிப் பார்த்தபோது எனக்கு பசுமைதான், காதலிகளின் முகங்களைப் போல அழகாய்த் தெரிந்தது. அதலபாதாளம், அவர்கள் காதலின் நிமித்தம் தந்த வலிகளைப் போல மறைந்து இருக்கலாம். அதைப் பற்றிய கவலை இப்போது எனக்கேன் என நிம்மதிப் பெருமூச்சை விட்டேன்.


வழியெங்கும் மரங்களின் கிளைகள் பரவி போகும் பாதையைக் குறுக்கிடச் செய்தன. தலையைப் பத்திரமாக உள்ளே வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டேன். எப்போதும் பாதை இப்படித்தானா எனக் கேட்டேன். இல்லை, இப்போது மழையின் நிமித்தம் கிளைகளெல்லாம் வளைந்து இப்படி வரவேற்புக் கோபுரங்கள் ஆகிவிட்டன என்றார் அந்தச் சாரதி.



யணங்களின்போது மட்டுமல்ல, வாழ்க்கையின் எல்லாக்கட்டங்களிலும் எதையோ இழந்துதான் எதையாவது பெறவேண்டியிருக்கும் என நினைப்பதுண்டு. அடையப்படுவதின் பெறுமதி, இழப்பதை விட மேன்மையுடையதாக இருக்கும்போது மனது நிறைவடைதலின் பூரிப்பில் ததும்பும். அந்தக் கணங்களில், நாம் இழந்தவையும் நமக்கான அடைதல்களுக்குத் துணை செய்தவையே என்ற நன்றியுணர்வு பெருகும். ஒரு காதலின் பிரிவின் வலியைத் தாண்டி இன்னொரு அழகிய காதலைக் கண்டடையும்போது, கடந்து வந்த காதலியை, அவர் பிரியாவிடை தராவிட்டால் இந்தப் புது அனுபவத்துக்கு நுழைந்திருக்கவே முடியாதென்று, அவர் மேல் ஒரு நன்றியுணர்வு தோன்றுவதற்கு நிகர்த்தது இது.


நெடுநேரம் காடுகளில் தொலையும்போதும், கடலில் கரையும்போதும் இவ்வாறான எண்ணம் அடிக்கடி எழும். மேலும் எப்போதும் இந்த இயற்கை நமக்காய்க் காத்திருக்கின்றது. ஆனால் நாம் அதை அனுபவிக்கத் தயாராக இருக்கின்றோமா என்பதுதான் முக்கிய வினா. நாம் வாழும் வாழ்விற்கு நிகரான சமாந்தரமான/இணையான வாழ்வுகள் நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன. அது எவ்வாறானாயினும் நமக்குப் பிடித்த ஒரு வழித்தடத்தில் சென்றுகொண்டிருக்கின்றோமா என்பதுதான் நாம் நம்மை நோக்கிக் கேட்கவேண்டியது.


தமக்குப் பிடித்தவற்றுக்காய், தாம் வாழ விரும்பும் வாழ்க்கைக்காக லெளதீக வாழ்வினைத் துறந்து போனவர்களின் மனோதிடத்தை இவ்வாறான பொழுதுகளில் வியப்பதுண்டு. ஏனெனில் விரும்பிய ஒன்றைச் செய்யத் தொடங்கும்போது எத்தனை விடயங்களை/பொறுப்புக்களை நினைத்து ஒவ்வொருவரும் கவலைப்பட வேண்டியிருக்கின்றது. நமக்குள் இருந்து நம்மை அச்சுறுத்தும் நம் சொந்த பயங்களைத் தாண்டுவதென்பது அவ்வளவு எளிதானதல்ல.


என் எல்லா எண்ணங்களையும் கொஞ்சம் ஒதுக்கிவை என்று சொல்வதுபோல மழை விடாது பொழிந்து கொண்டிருந்தது. பசுமை எங்கும் விரிந்து கிடந்தது. பாக்குகளும், மிளகுகளும், ஈரப்பலாக்களும், தென்னைகளும் ஒன்றையொன்று மீறி செழிப்பாக வளர்ந்திருந்தன. சரிவான நிலத்தில் கட்டப்பட்டிருந்த வீடே எனது தற்காலிகத் தங்குமிடம். அருகே சுனை பாய்ந்து கொண்டிருந்தது. அதிலிருந்தே குடிப்பதற்கு நீரும், குளிப்பதற்கான நீரும் வந்து கொண்டிருந்தன.


இரவும் பகலுமாய் எந்நேரமும் சுனையின் சத்தம் கேட்டுக்கொண்டிருந்த இடத்தில் இருந்து வானமளையும் மலையையும், காடுகளையும் பார்த்துக் கொண்டிருந்தேன். பெரும் கருங்கற்பாறைகள் வீட்டைச் சுற்றி இருந்தன. அவை 60-70 ஆண்டுகளுக்கு முன் மலையின் உச்சியிலிருந்து மண்சரிவின்போது உருண்ட வந்த பாறைகள் என்றனர். அப்போது இந்த அடிவாரத்தில் இருந்த சிலர் இறந்திருக்கின்றனர். ஒரு தாயும் பிள்ளையும் உணவூட்டிக் கொண்டபோது மரணித்திருக்கின்றனர் எனச் சொல்லப்பட்டது. எனக்கு அது பங்களாதேஷில் பூகம்பம் வந்தபோது கட்டியணைத்தபடி இறந்த ஒரு இணையை இது நினைவூட்டியது. எந்தக் கணத்திலும் மரணம் நம்மை ஆரத்தழுவும் என்று அறிந்தும், அறியாத பாவனைகளோடு இந்த இயற்கையை அடக்கியாள முடியுமென்று இன்னமும் நம்பும் பிடிவாதக்காரர்கள் நாம்.


நான் நின்ற வீட்டினர் தமிழும் சிங்களமும் கலந்த ஒரு பின்னணியுள்ள குடும்பம். பிள்ளைகள் சிங்களத்திலேயே படிக்கின்றார்கள், ஆனால் தமிழ் பேசுகின்றார்கள். அடுத்தடுத்த தலைமுறையில் அவர்கள் முற்றாக சிங்களவர்கள் ஆகிவிடுவார்கள் என நினைக்கின்றேன். அவர்கள் வேட்டையின் மரபை இன்னும் கைவிடாதவர்கள். இப்போதும் காட்டுப்பன்றியும், முள்ளம்பன்றியும், உடும்பும் பிடிக்க வேட்டைக்குத் துப்பாக்கியோடு போகின்றவர்கள். 


ஆங்கிலேயர் காலத்தில் தமிழகத்தின் தென்பகுதியில் இருந்து இவர்களின் கொள்ளுத்தாத்தா இந்த மலைப்பகுதிக்கு வந்திருக்கின்றார். தான்தோன்றித்தனமாய் பல பகுதிகளுக்கு அலைந்தவர், எவ்வாறு எதன்பொருட்டு அவர் இலங்கையின் இந்தப் பகுதிக்கு வந்தாரென்று தெரியவில்லை. இந்த மலையில் முன்னொருகாலத்தில் தேயிலை/இறப்பர் தோட்டம் ஆங்கிலேயரினால் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே அது எஸ்டேட் ஆக விரிந்தபோது பின்னாளில் பல நூற்றுக்கணக்கானோர் வந்து குடியேறியிருக்கின்றார்கள். இவர்களின் கொள்ளுத்தாத்தா ஆங்கிலேயரோடு வேட்டைக்குப் போகின்றவராகவும், வீடுகளை நிர்மாணிக்கின்றவராகவும், தொழிலாளிகளை வழிநடத்துபவராகவும் இருந்திருக்கின்றார். அவரின் கீழ் சில நூறுபேர் கட்டுமானத்தில் வேலை செய்தனர் என்றனர். எனவே அவரின் பெயரில் இம்மலைகளில் மட்டுமில்லை, நகரத்திலும் நிலபுலங்கள் இருந்திருக்கின்றது. 


பின்னர் ஆங்கிலேயர் இந்த எஸ்டேட்டை கைவிடுகின்றனர்.  இங்கிருந்த தொழிலாளர்களும் வேறு வேறு இடங்களுக்குப் இடம்பெயர, இந்தக் குடும்பமும் அதன் வாரிசுகளும் மட்டும் இந்த மலையில் தங்கிவிட்டார்கள். இப்போது அவர்களின் நிலப்பரப்புகள் சுருங்கிவிட்டன. எவரெவரோ இவர்களின் நகரத்து நிலங்களை சுவீகரித்தும் விட்டார்கள். ஒருவகையில் வாழ்ந்து கெட்ட குடும்பம் என்று சொல்லலாமோ என்னவோ? ஆனால் அவர்களுக்கு இன்னமும் தாங்கள் இந்த மலைகளுக்கு உரியவர்கள் என்று கூறுவதிலும், வேட்டையின் நுட்பம் தெரிந்த பெரும் வேட்டைக்காரர்கள் என்பதிலும் ஒருவித கம்பீரமும் பெருமையும் இருக்கின்றது. 


வெளியே கொஞ்ச தூரம் நடந்தாலே மலை அட்டைகள் எம்மையறியாமலே ஏறிவிடுகின்றன. நான் சப்பாத்துபோட்டு அருகில் இருந்த இடங்களுக்கு நடந்தபோது இரத்தம் உறிஞ்சும் அட்டைகள் என்னோடும் நேசம் கொண்டன. எப்போதும் கையில் உப்பு கலக்கப்பட்ட போத்தல்களோடு திரிய வேண்டியிருந்தது. உப்புக்கரைசலை ஊற்றினால் -நம்மால் பலன் பெற்றுவிட்டு, நீ யாரென்று பின்னாட்களில் கேட்டு முகஞ்சுழிக்கும் 'உத்தமர்'கள் போல- அட்டைகளும் சட்டென்று உடல் சுருங்கி நம்மைவிட்டு அகன்று விடுகின்றன.


ங்கே ஓரு பதின்மன் இருந்தான். சிங்களத்தில் படித்துக் கொண்டிருந்தாலும் தமிழ் மீதான ஆர்வத்தில் வீட்டுச் சுவரில் பாரதியார் கவிதையை எழுதி வைத்திருந்தான். அவனோடு பேசிக் கொண்டிருந்தேன். உரையாடல் எப்படி வளர்ந்ததோ தெரியாது என்னையறியாமல் என் பதின்மங்கள், காதல்கள், பயணங்கள் எனப் பகிரும்படியாக அந்த இரவு நீண்டது. அந்த மலையிலிருந்து இறங்கி நீண்டதூரம் நடந்து படிக்கப்போகும் அவன் எனக்குப் பலரை நினைவுபடுத்தியிருக்கலாம். வெள்ளையுடையுடன் சேற்றில்/மழைநீரில் அசுத்தமாகாது, அவ்வளவு தூரம் அவன் நடந்துபோவதே எனக்கு வியப்புத்தான். ஆகவே அவனிடம், நீ கற்கின்ற இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி உன் வாழ்க்கையை, உன் மூதாதையரின் கதையை எப்படியேனும் பதிவு செய் என்றேன். ஏனெனில் எல்லோருக்கும் இது வாய்ப்பதில்லை. நான் இங்கே தங்கி நின்ற சில நாட்களிலே எவ்வளவை அவதானிக்கின்றேன். நீ இங்கே வாழ்ந்து கொண்டிருப்பவன். இந்த இயற்கையோடு உள்ளுறைந்து கிடப்பவன். நான் அந்நியன். எதைச் சொன்னாலும், எழுதினாலும் நகரத்துக்காரனின் ஆதிக்கம் இருக்கும், உனக்கது அப்படியல்ல என்று எதையெதையோ எல்லாம் அவனிடம் பேசிக்கொண்டிருந்தேன். அடுத்த நாள் மாலையில் அவன் தங்கை முறையானவள் வந்து வெசாக் கூடுகள் செய்து தரச் சொல்லி இவனிடம் கேட்டாள். இவன் கொஞ்சம் சலித்தபடி மூங்கில்கள் வெட்ட மலையேறிப் போனான். நாளை ஒளியேறும் இவர்களின் பரிசுத்தமான வெசாக்கூடுகளிலே எனக்கான புத்தர் உள்ளுறைந்து இருக்கின்றான்.


அந்த மாலை வளர்ந்தோருக்கான இரவு. நான் வாங்கிப் போன செம்மது அவர்களுக்கு கேலிக்குரிய குடிவகை. நாமெல்லாம் வேட்டையில் மட்டுமில்லை, குடியிலும் பெருங்குடியர்கள், இதெல்லாம் உதவாது என்றார்கள். எனவே அரக் (சாராயம்) முழுப்போத்தலை உள்ளூர் வாசத்துடன் இறக்கினோம். மலையின் உச்சியில் ஒரு நாடோடி, கித்துள் கள் கொண்டுவர, மதியம் மலையேறிச் சென்று அதை அருந்தி மாலை சூரியன் மறையும்வரை மலைச்சிகரத்தில் போதையோடு கழித்த நாட்கள் பற்றி கதையதையாக அவர்கள் சொன்னார்கள். இது வெறும் மலை மட்டுமில்லை எதுவும் எளிதாக விளையும் பொன்னான பூமியுங்கூட. அங்கே சிவமூலிகைகளும் தேடினால் கிடைக்கும். அன்னமாய் மேலுலகையும், பன்றியாய் கீழுலகையும் கடுமையாய்த் தேடியவர்க்கு அருள்பாலித்தவன் நமது சிவன். தேடலைப் பொறுத்துக் கிடைக்கும் மூலிகை, அந்த மாலைக் குளிருக்கு வெம்மையின் உச்சம் ஏற்றுபவை.


இந்த மனிதர்களுக்கு இந்த மலையே வாழ்வு. அதற்குள் மிளகும், பாக்கும், ஈரப்பலாக்காய்களும், வாழைகளும், அவக்காடோக்களும் போதுமென்றளவுக்கு விளைகின்றன. வேட்டைக்காலங்களில் நல்ல சுவையான இறைச்சிகள் கிடைக்கின்றன. என்ன வேண்டும் இந்த வாழ்வுக்கு என்ற அலட்சியத்தோடும் கம்பீரத்தோடும் திரியும் வாழ்வு அவர்களுக்கு. என்றாலும் அவர்களுக்குள்ளும் பிரச்சினைகள் இருக்கின்றன. அதை அலசு ஆராய்வதால் என்ன பயன்? நாம் அங்கு போய் வாழவா போகின்றோம்? எந்த மனிதர்கள்தான் சிக்கல்கள் இல்லாது இருக்கின்றனர்.


எனக்கு அந்த மலைக்கும் காட்டுக்கும் இடையில் குடில் அமைத்து வாழும் ஆசை எழுந்தது. ஆனால் என்னால் ஒருநாள் கூட தனித்து அங்கே வாழமுடியாது என்பதும் புரிந்தது. ஐயோ, இந்த சுனைநீர் இவ்வளவு குளிருகின்றதே நீராட வேறு வழியிருக்கா என்று யோசிக்கும் சாதாரண ஒருவன் நான். இவர்கள் இந்த நிலப்பரப்பில் தகவமைத்துக் கொள்ள எவ்வளவு காலம் ஆகியிருக்கும். அது வாழையடி வாழையாக வாழ்ந்து வந்த பரம்பரைக்கு, இந்த மலை எங்கள் மலையென்று கொடுத்த மாபெரும் வைராக்கியம் அல்லவா? ஒரு நேரச் சாப்பாடு இல்லையென்றால் கனிதரும் மரங்களைத் தேடியோ அல்லது துப்பாக்கி தூக்கிக் கொண்டு வேட்டையாடப் போகும் அவர்களைப் போன்ற சாகசக்காரனோ அல்ல நான். 


நான் அந்த இயற்கைக்குள் இருந்து வாசித்து எழுத விரும்புகின்றவன். என் தனிமையை நீ கெடுக்கிறாய் எனச் செல்லமாய்க் கோபித்தபடி என் காதலியின் கதகதப்பான அரவணைப்புக்குள் உறங்க விரும்புகின்ற சாதாரணமானவன். எனவே இந்த மலையில் என்றென்றும் வாழும் என் கனவு வெறும் பகற்கனவே. ஆனாலும் அடிக்கடி இவ்வாறான மலைகளையும் காடுகளையும் தேடிப் போகவே என்றும் பிரியப்படுவேன். 


மலைகளினதும் காடுகளினதும் கதைகளை, மனிதர்கள் தம் இரத்தமும் வியர்வையும் கலந்து சொல்கின்றபோதே அவை மாமலைகளாகவும், பெருங்காடாகவும் மாறுகின்றன. 


மாமலைகளையும் பெருங்காடுகளையும் கடந்து செல்லுமொருவன், தன் மூதாதையர் சுதந்திரமாய் உலாவித் திரிந்த குறிஞ்சித்திணையினதும், முல்லைத்திணையினதும் ஒருதுளி வாழ்வையேனும் அகத்தில் தரிசிக்கவே செய்வான். 


அதுவே இயற்கை அவனுக்கு அளிக்கும் மாபெரும் கொடை!


**********************************


(நன்றி: 'அம்ருதா' - ஆவணி, 2023)

காதலின் வரலாற்று அடையாளம்

Wednesday, August 16, 2023

 

Mt. Lavinia 


ரு காதல், அந்தக் காதலியின் பெயரால் ஒரு நகரையே உருவாக்குமா? அப்படி உருவாகிய நகரில், அந்தக் காதலனும் காதலியும் கழித்த அதே மாளிகையில் நானொரு பொழுது இருந்தேன்.


அவன் இலங்கையின் முதல் ஆங்கிலேயக் கவர்னராக இருந்தான். தனது பதவியேற்பு விழாவில் நடனம் ஆட வந்த நடனக்காரி மீது மையல் கொண்டான். அவ்வளவு உக்கிரமான காதல் அது. அவன் நாட்டின் உயர்ந்த பதவியில் இருப்பவன். அவளோ இலங்கையில் ஒதுக்கி வைக்கப்பட்ட தலித் சமூகத்துப் பின்னணியில் வந்தவள். நாடுகளைப் பிடிப்பதில் இரும்பு மனிதன் எனப்பட்ட ஒருவன், மண்ணிற வர்ணம் மேனியில் ஒளிரும் ஒரு பெண்ணின் முன் சரணடைகின்றான். கொழும்பு பெருநகரில் இருந்து அலைகள் கொஞ்சும் கடற்கரையில் ஓர் அரண்மனையைத் அவளுக்காகக் கட்டத் தொடங்குகின்றான்.


அவனது நடனக்கார காதலியை அந்தஸ்து காரணமாக அவ்வளவு எளிதில் அவன் சந்திக்க முடியாது. எனவே தனது அரண்மனையில் இருந்து 600 மீற்றருக்கும் நீளமான ஒரு சுரங்கப் பாதையை அவளுக்காக அமைக்கின்றான். காதலியின் வீட்டு கிணற்றிலிருந்து தொடங்கி அந்தப் பாதை அவனின் அரண்மனையில் செம்மது சேமிக்கும் நிலவறைவரை நீள்கின்றது.


காதலி இரகசியமாக இரவுகளில் இந்தச் சுரங்கத்தினூடாக வந்து அவனோடு பொழுதைக் கழித்து விட்டு சூரியன் உதயமாக முன்னர் சென்றுவிடுவாள். அந்த உக்கிரக் காதல் 5 வருடங்களுக்கு மேலாக நீண்டது. சூரியன் அஸ்தமிக்காத இராஜ்ஜியம் காலனித்துவப்படுத்திய ஒரு தீவில், ஓர் அரசனுக்குரிய அதிகாரத்தில் இருந்தவனை ஒரு தலித் பெண் தன் நடனமாடிய கால்களில் சரணடைய வைத்தாள் என்பது ஓர் அதிசயமல்லவா?


இந்தக் காதல், பின்னாளில் இளமை துள்ளும் சிலியின் இராஜதந்திரியாக வந்து ஒரு அருந்தியப் பெண்ணை அவளின் விருப்பமின்றி கொழும்பில் புணர்ந்து போய்விட்ட பாப்லோ நெரூதாவின் உடல் வேட்கையைப் போன்றதல்ல.  இது அவ்வளவு பரிசுத்தமானது காதலி தலித்தாக இருந்ததை உதறித்தள்ளி, உரிய இடத்தை காதலின் பொருட்டு கவர்னரின் நேசம் கொடுத்துமிருந்தது.


46 வயது திருமணமாகாத இந்த கவர்னரின் காதலை, உள்ளூர்ச் சாதிமான்களாலும், பிரிட்டிஷ் அதிகாரத்தாலும் தாங்க முடியாது போயிருக்கின்றது. ஆகவே கவர்னரை திரும்பவும் மால்டாவுக்கு (Malta) மீள்க என்று ஆணையை பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியம் பிறப்பிக்கின்றது. காதலியைத் தன்னோடு கூட்டிச் செல்லமுடியாத துயரோடு கவர்னர் திரும்புகின்றான். காதலிக்கு பின்னர் என்ன நடந்ததென்று பல்வேறு கதைகள் சொல்லப்படுகின்றன.


அவள், காதல் பிரிவுத் துயரத்தில் மலையுச்சியில் இருந்து குதித்துத் தற்கொலை செய்தாள் என்பது ஒரு கதை. இன்னொன்று, அவள் இன்னொரு நகரான காலிக்குப் போய் அங்கே வீடு வாங்கி, வசதியாக அமைதியாக இறுதிக்காலத்தில் வாழ்ந்தாள் என்பது இன்னொரு கதை. எந்தக் கதையானாலும் அவளின் அந்தக் காதல் அவ்வளவு அழகானது. அது எப்படியெனில் அந்த கவர்னர் பிறகு எவரையும் திருமணம் செய்யாமலே அவளின் நினைவோடு அப்படியே ‘பிரமச்சாரி’யாக இறுதிவரை இருந்திருக்கின்றான் என்று வரலாறு எழுதியிருக்கின்றது.




நான் இந்த காதல் மாளிகையின், இப்போது ஹொட்டலாக மாற்றப்பட்டிருக்கும் ஓர் அறையில் இருந்து அலையடிக்கும் கடலைப் பார்த்தபடியிருக்கின்றேன். இந்தக் காதலனும் காதலியும் துள்ளித் திரிந்து காதல் சரசம் செய்த நினைவின் சுவடுகளை எனக்குள் வரைந்து பார்க்கின்றேன். நளினமான அவளின் நடன உடலில் எத்தனையெத்தனை மீன்கள் துள்ளி ஓடியிருக்கும். எத்தனையோ நாடுகளைக் கடந்துவந்த ஒருவன், அந்தப் பெண்ணின் மேனியில் தன் நிம்மதிக்கான வரைபடத்தைக் கண்டுபிடித்தான் என்பது ஓர் அதிசயமல்லவா? மனிதர்கள் பிரமாண்டமாய் கட்டும் கட்டடங்களை உலக அதிசயம் என்கின்றார்கள்; எனக்கென்னவோ இப்படி நாம் நினைத்துப் பார்க்கவே முடியாத வெவ்வேறு தேசத்து மனித மனங்கள் நேசத்தின் ஆழத்தில் பிணைந்துகொண்டு வாழ்வைக் கொண்டாடுவதுதான் பேரதிசயமாக இருக்கிறது.


ஹொட்டலின் மேற்றளத்திற்குப் போகின்றேன். இப்போது சூரியன் தகதகவெனப் பொன்னிறத்தில் மேற்கில் சாயத் தொடங்குகின்றான். என்றோ ஒருநாள் இப்படி ஆதவன் கடலோடு அணையத் தொடங்குவதை, என்னைப் போல அந்தக் காதலனும் காதலியும் அணைத்திருந்தபடி பார்த்திருப்பார்கள் அல்லவா. அப்போது அவர்கள் தங்கள் காதல் நாளை என்னவாகும் என்று யோசித்திருப்பார்களா? அப்படி யோசித்திருந்தால் அவர்கள் இந்த உக்கிரமான சாகசக் காதலுக்குள் இறங்கியிருக்கவேமாட்டார்கள். உடல் வேட்கை மட்டும் அந்தக் கவர்னருக்கு இருந்திருந்தால் நாங்கள் இப்போது நூற்றாண்டுகள் கடந்தும் இந்தக் காதலைப் பேசிக் கொண்டிருக்கமாட்டோம்.


என் அன்றைய கனவுகளில் இந்தக் காதலனும் காதலியும் சுழன்று ஆடியபடி இருந்தார்கள். சிலவேளைகளில் அது என் கனவில்லாது, நனவிலி மனம் அசைபோட்டதோ தெரியாது. கடந்த நூற்றாண்டுகளில் எத்தனை சுரங்கங்கள் மனிதர்களால் கட்டப்பட்டிருக்கின்றன. ஆனால்  காதலுக்கென ஒரு சுரங்கம் அமைத்த  இந்த கவர்னர் ஒரு வியப்பல்லவா? பின்னர் வந்த நூற்றாண்டில் அந்தச் சுரங்கம் மூடப்பட்டு, ஒரு பகுதி மட்டும் மிச்சமாக இருக்க, அதன் மீது பெருநகர் கட்டப்பட்டுவிட்டது. ஆனால் அந்தக் காதல் என்றும் அழிக்கப்படாது ஒரு காதலியின் பெயரால் நிமிர்ந்து நிற்கின்றது.


அந்த நகர் Mount Lavinia. அந்த நடனத் தாரகை காதலியின் பெயர் Lavinia!


நான் காலை தூக்கங் கலைந்தபோது மழை பெய்யத் தொடங்கியிருந்தது. எனக்குப் பிடித்தமான சாம்பல் நிறத்தை வானம் போர்த்தியிருந்தது. பெருங்கடலில் மழைத்துளிகள் வீழ்ந்து கலப்பதைப் பார்ப்பது என்பது பேரானந்தமானது. பின்னர் அந்தப் பேரின்ப நிலை மாறி மனது கதகதப்பான தியான நிலையானது. 


கடற்கரையில் நடக்கவேண்டும், நீச்சல்குளத்தில் குளிக்கவேண்டும் என்று முதல் நாளிரவு திட்டமிட்ட எல்லாவற்றையும் ஒதுக்கிவைத்து மணிக்கணக்காய் மழைபெய்யும் பரவச நிலையை அனுபவிக்கின்றேன்.


இந்த வாழ்வில் ஒரு மழைத்துளியென நானும் என் வாழ்வும் நாளை சுவடுகளற்றுக் கரைந்து போகும் என நினைக்கையில் எனக்குள் எழுவது அச்சமா, அமைதியா என்பதை நான் உணரேன். ஆனால் இந்தக் கணத்தில் அந்தக் காதலின் நூற்றாண்டுகாலத் தொடர்ச்சியென என்னை நான் எண்ணிக் கொண்டேன்.


ஆகவேதான் அன்பே, கடல் பார்க்கும் அறைக்குள் இருந்து ஏதெனக் காரணம் தெரியாது விழிக்குள் மழைபெய்ய நானுன்னை நேசத்துடன் இப்போது அணைக்கின்றேன்!


***************************


(Sir Thomas Maitland என்கின்ற இலங்கைக்கான முதலாவது ஆங்கிலேய ஆளுநர் (1805-1811), தாழ்த்தப்பட்ட ரொடிய சமூகத்தைச் சேர்ந்த நடனக்காரியான Lavinia Aponsuwa வை காதலிக்கின்றார். அந்தக் காதலியின் பெயரால் ஆளுநரின் ஆணையின்படி Mount Lavinia என்றழைக்கப்பட்ட நகர் பின்னர் சிங்களத்தில் கல்கிஸ என மாற்றப்பட்டாலும், ஆங்கிலத்தில் Mount Lavinia என்றே இப்போதும் அழைக்கப்படுகின்றது. அது காதல் கொடுத்த மாபெரும் அடையாளம்)


நன்றி: 'அம்ருதா', ஆவணி-2023


கார்காலக் குறிப்புகள் - 16

Monday, August 14, 2023

 

'ர்தா' தமிழில் அண்மையில் வெளிவந்த முக்கியமான ஒரு அரசியல் புனைவு என்பேன். பர்தாஎன குறிப்பிடுவதால் அதை ஒரு குறிப்பிட்ட மத/இன அடையாளத்துக்குள் மட்டும் அடைக்கத் தேவையில்லை. பெண்களின் ஆடைகளின் அரசியல்என்ற விரிந்த எல்லைக்குள்ளும் வைத்துப் பார்க்கக்கூடியதாக இருப்பதால்தான் பர்தா’ வாசிப்பில் முக்கியமாகின்றது. தமக்கான ஆடைகளைத் தேர்வு செய்வதென்பதில் முஸ்லிம் பெண்கள் மட்டுமில்லை, தமிழ்ப் பெண்கள் உள்ளிட்ட பலரும் சிக்கல்களை எதிர்நோக்கியபடி இருக்கின்றார்கள். இலங்கையில் ஒரு பல்கலைக்கழகத்தில் தமிழ்ப்பெண்கள் சேலை மட்டும் அணியவேண்டும் என்று சொல்லப்பட்ட்திலும், தமிழகத்தில்துப்பட்டா போடுங்கள் தோழிஎன்ற சொல்லாடல்களின் பின்னும் ஆடைகளின் அரசியலே இருந்திருக்கின்றது.

இங்கு ஒரு பெண் பர்தா/ஹபாயாவோ, சேலையோ, துப்பட்டவோ அணிய வேண்டுமா இல்லையா என்பதல்ல கேள்வி. எந்த ஆடையானாலும் அதைத் தேர்ந்தெடுப்பதற்கான சுதந்திரம் பெண்களுக்கு அவர்கள் இருக்கும் சூழலில் இருக்கின்றதா என்பதே முக்கியமான கேள்வியாகும் பெண்களாக இல்லாத ஆண்களாகிய நாம் அந்தத் தேர்ந்தெடுக்கும் உரிமைக்காய் பெண்களுக்கு தோழமையுணர்வுடன் இருக்கலாமே தவிர, ஆண்களாகிய நாம் இன்னின்ன ஆடைகள் சரியா/தவறா என்று விவாதிக்கும் எல்லைக்குப் போவதில் அர்த்தமேதும் இருக்கப்போவதில்லை. அதையேதான் ஆடைகளின் அரசியல்என்ற என் ஒரு கட்டுரையில் முன்னொரு பொழுது விவாதித்திருக்கின்றேன். இலங்கை/இந்தியா போன்ற நாடுகளில் மட்டுமில்லை, கனடா போன்ற மேற்கத்தைய நாடுகளிலும் இந்தச் சிக்கல்களை பெண்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கின்றது. யோர்க் பல்கலைக்கழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்புப் பற்றிய கலந்துரையாடலில் ஒரு பொலிஸ் அதிகாரி ‘slut மாதிரி ஆடைகள் அணிந்தால் பாலியல் வன்முறை நடக்கத்தான் செய்யும்என்ற கூறியதற்கு எதிராகப் பெண்கள் கிளர்ந்தெழுந்து அதே பெயரில் (Slut Walk) எதிர்ப்புப் பேரணிகளை நடத்திக் காட்டியிருந்தனர்.

ஓர் அரசியல் பிரதியை, பிற இனங்களினால் ஒடுக்குநிலையாக்கப்பட்ட சமூகம் தனக்குள் சந்திக்கும் ஒரு முக்கிய பிரச்சினையை, அதன் வீரியத்தோடும், அதேசமயம் தன் சமூகத்தை பிறரிடமும் விட்டுக்கொடுக்காது நிதானமாய் எழுதுவது என்பதை மாஜிதாவின் இந்த பர்தாநாவல் நமக்குக் கற்றுத் தருகின்றது. இன்றைக்கு ஈழப்போராட்டம் சார்ந்து எழுதும் பல படைப்பாளிகள் கற்றுக்கொள்ளவேண்டிய புள்ளியும் இதுவென்பேன். ஈழத்தமிழரின் அரசியல்/சாதிப் போராட்டங்களைப் பற்றி எழுதப்படும் பல பிரதிகள், ஈழத்தமிழரை ஒருபோதும் அநியாயம் செய்யாத தமிழராகவோ அல்லது முற்றிலும் அநியாயம் செய்தவர்களாவோ நிதானமற்று எழுதப்படும்போது பிரதிகளின் நம்பகத்தன்மை மட்டுமின்றி, இந்த உண்மைகளை நன்கு அறிந்த நமக்கு எரிச்சலும் வந்துவிடுகின்றது.

கிழக்கில் இருக்கும் முஸ்லிம் சமூகத்தில் எப்படி பர்தா உள்நுழைந்து அதனோடு சேர்ந்து ஹபாயாவும் பிற்காலத்தில் இணைகின்றதென்பதை துண்டு துண்டான காட்சிகள்/சம்பவங்களினூடாக பர்தாமுன்வைக்கின்றது. அதை எப்படி முஸ்லிம் பெண்கள் எதிர்கொண்டார்கள் / ஏற்றுக்கொண்டார்கள் / எதிர்ப்புக்காட்டினார்கள் என்பதை நாம் இதை வாசிப்பதனூடாக அறிந்துகொள்கின்றோம். இந்நாவலின் கதைசொல்லியான சுரையாவின் பெற்றோரான பீவியையும், ஹாயத்து லெப்பையையும் கூட அவர்கள் பர்தா/ஹபாயாவை சுரையாவின் மீது திணிக்கின்றவர்களாக இருந்தாலும், அவர்களையும் நாம் காலவோட்டத்தின் இயல்பில் வைத்துப் புரிந்துகொள்கின்றோம். 


சுரையா, அவரின் உம்மா பீவி, புலம்பெயர்ந்த நாட்டிலே பிறந்த சுரையாவின் மகள் ராபியா மூவருமே பர்தா/ஹபாயா பற்றி வெவ்வேறு விதமான பார்வைகளைக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் வெவ்வேறு பார்வைகளைக் கொண்டிருந்தாலும், இந்த மூன்று தலைமுறைப் பெண்களும் அது பர்தாவோ இல்லை வேறெந்த உடையோ அதைத் தேர்ந்தெடுக்கும் உரிமை தமக்கு நிச்சயம் வேண்டுமெனத்தான் வெளிப்படையாகவோ அல்லது உள்மனதிலோ விரும்பியிருப்பார்கள் என்பது வாசிக்கும் நமக்கு தெளிவாகத் தெரிகிறது.

பர்தாவை வாசித்துக் கொண்டிருக்கும்போது,  வேலைக்குப் போனால் இலங்கையில் கட்டாயம் சேலை அணிந்து செல்லவேண்டும் என்ற ஒரு காரணத்துக்காகவே புலம்பெயர்ந்து வெளிநாட்டுக்கு வர விரும்பிய என் தோழியொருவர் நினைவுக்கு வந்தார் (அவ்வாறே இலங்கை பஸ்களில் நடந்த பாலியல் சுரண்டல்களால், அதைக் கடைசிவரை பாவிக்காத பல தோழிகளின் கதைகள் நானறிவேன்). அதேபோல் என் நெருங்கிய தோழிகளில் இருவர் சேலையை ஒருபோதும் அணிய விரும்பாதவர்களாக இருந்திருக்கின்றார்கள் என்பதும் நினைவுக்கு வந்தது. இந்த என் தோழிகளைச் சமூகம் வற்புறுத்தி அணியச் சொல்லியிருந்தால் அவர்களுக்கும் சேலை இன்னுமொரு பர்தாவாகவே நிச்சயம் ஆகியிருக்கும். ஆகவேதான் நான் 'பர்தா' என்ற இந்தப் புனைவை ஒரு மதத்திற்குள் அடக்காது, ‘பெண்களின் ஆடைகளின் அரசியல்என்ற விரிவான தளத்தில் வைத்து உரையாட முடியும் எனச் சொல்கின்றேன்.

இந்தப் புனைவில் இலண்டனில், இலங்கையில் நடந்த ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்களுக்கு எதிர்ப்பும், பலியானவர்களுக்கு அனுதாபமும் தெரிவிக்கும் நிகழ்வொன்றோடு தொடங்கின்றது. எந்த அடிப்படைவாதமும் முதலில் பெண்களின் உடல்கள்/ஆடைகள்/நடமாட்டங்களைக் கண்காணிப்பதோடு தொடங்கி மனிதவுயிர்களைக் காவு கொள்கின்றதாகக் கூட மாறக்கூடுமென்பதை மறைமுகமாக மாஜிதா நாவலின் உள்ளே, பர்தா/ஹபாயாவை அணிய வற்புறுத்தும் பல்வேறு முஸ்லிம் இயக்கங்களின் செயற்பாடுகள் ஊடாகச் சொல்லவும் செய்கின்றார். இன்று அவ்வாறான ஒரு அடிப்படைவாதத்தை இறக்குமதி செய்ய இந்தியாவின் ஆர்,எஸ்.எஸ்/பிஜேபி சார்பானவர்கள் இலங்கை மண்ணில் வந்திறங்குவதையும் நமக்கான எதிர்கால எச்சரிக்கையாகப் பார்க்க வேண்டும்.

இந்தப் புனைவில் புலம்பெயர்ந்த மண்ணில் பிறந்த சுரையாவின் மகளான ராபியாவிற்கு பர்தா/ஹபாயா என்பது வேறு ஒரு அர்த்தத்தை இறுதியில் கொடுக்கின்றது. அவ்வாறான ஒரு கலாசார அடையாளத்தை, புலம்பெயர்ந்த மண்ணில் பிறந்த தமிழ்ப்பிள்ளைகளுக்கு, என் தோழிகளைப் போல சேலையின் அரசியல் தெரியாதுபுதிய அடையாளத்தையும் பெருமையையும் கொடுப்பதைப் பார்த்திருக்கின்றேன். இங்கே நாம் எந்த ஆடை சரி/பிழை என்று விவாதிப்பதைவிட, இந்த ஆடைகளின் அரசியலைத் தெரிந்து தமக்கான தேர்வுகளைப் பெண்கள் எடுக்கும் வெளிகள் இருக்கின்றனவா என்பதைப் பற்றியே நாம் விரிவாக உரையாடவேண்டும்.

அந்தவகையில் மாஜிதாவின் 'பர்தா' பல்வேறு உரையாடல்களை நாம் நிதானமாகச் செய்வதற்கான வெளிகளைத் தருகின்றது. முக்கியமாய் பலநூறு பக்கங்களில் எழுதிக்கூட நம் மனதைத் தீண்டாத எத்தனையோ நாவல்கள் இருக்கும்போது, மிகக் கச்சிதமாக 130 பக்கங்களில் எழுதப்பட்ட பர்தா நம்மை எங்கெங்கோ யோசிக்க சிந்தனைகளை இழுத்துச் செல்கிறது என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.

********************


(Feb 18, 2023)

பவளமல்லிப்பூ குறிப்புகள்

Wednesday, August 09, 2023

 

 

மேஷ் பிரேதனிடம் மார்க்சிசம், பின்னமைப்பியல், பின்நவீனத்துவம் பற்றிக் கதைத்துக் கொண்டிருந்தபோது, தெரிதாவின் "Specters of Marx" பற்றிப் பேச்சு வந்தது. அநேகமான பின்னமைப்பியல்வாதிகள் மார்க்ஸை ஏற்றுக்கொண்டு அவரைத் தாண்டி, அவருக்குப் பிறகான காலங்களில் நிகழ்ந்த நிகழ்வுகளை முன்வைத்து தமது சிந்தனைகளை விரித்தெடுத்திருந்தனர். ஆனால் இன்றைக்கும் இவற்றை நன்கு தெரிந்தும், தமிழ்ச்சூழலில் இருக்கும் மார்க்சியர்கள் தெரிதா, ஃபூக்கோ, பார்த் போன்ற பின்னமைப்பியல்வாதிகளை மார்க்ஸியத்துக்கு எதிர்முனையிலே வைத்துப் பேசிக்கொண்டிருக்கின்றனர். எனது ஸென் ஆசானான தாய் (Thich Nhat Hanh) மிக இளவயதிலேயே துறவு பூண்டாலும், இறுகிப்போன புத்தயிஸத்தைக் கண்டு மடாலயத்தில் இருந்து வெளியேறி இன்றைய காலத்துக்கேற்ற Engaged Buddhismஐ முன்வைத்தவர். அதன் தீ அணையாமல் இறுதிவரை பார்த்ததோடல்லாது அதை அடுத்த தலைமுறைக்கும் கடத்தியவர். அவ்வாறு ஒரு Engaged Marxism தான் நமக்கு இப்போது வேண்டியிருக்கிறது. அதற்கான ஆரம்பப் புள்ளிகளை ஃபிராங்க்போர்ட் மார்க்ஸியர்கள் (Frankfurt School) செய்ய முயன்றிருந்தனர்.

இன்றைக்கும் ஒடுக்கப்படும் இனங்களை/விளிம்புநிலையினரை முன்வைத்து நடக்கும் உரையாடல்களை மார்க்ஸிலிருந்தே ஏற்றோ/முரண்பட்டோதான் ஆரம்பிக்க வேண்டியிருக்கின்றது. ஒரு படைப்பாளியாக நாம் நெருக்கம் கொள்ளவும், நட்புடன் கைகோர்த்துச் செல்லக் கூடியதாக இருப்பதும் மார்க்ஸிசமே. ஆகவே செங்கொடி என்பது நமக்கோர் முக்கியமான அடையாளமே. ஆனால் நான் இங்கே இறுகிப்போன மரபு மார்க்ஸியர்களையோ, இடதுசாரித்துவம் என்ற பெயரில் நிகழ்த்தப்பட்ட அநீதிகளை நியாயப்படுத்திக் கொண்டிருப்பவர்களைப் பற்றியோ பேசவில்லை. 

0000000000

 

குப்பிளான ஐ.சண்முகன்


வன் தனிமையான வாழ்வையே விரும்பினான். இந்த உலகின் பாசங்கள், நேசங்கள், சோகங்கள், உணர்ச்சிக் குமுறல்கள் எல்லாவற்றினின்றும் ஒதுங்கி வாழ முற்பட்டு தனிமையில் இன்பங் காண விழைந்தான்என்று கருணாகரனை, கதைசொல்லி அவனுக்கென்று ஓர் உலகம்’ (1969) கதையில் நமக்கு அறிமுகப்படுத்துகின்றார். கருணாகரன் இயற்கையில் தோய்ந்து தனிமையில் வாழ விரும்புகின்றவன். அவ்வாறு இருக்க விரும்புகின்ற கருணாகரனுக்கு ஒரு காதல் வந்து அதில் திளைத்தும் வாழ்கின்றான். பின்னர் வர்க்க நிலையால் காதல் பிரிவும் வருகின்றது. ஏழையென்பதால் குடும்பம் அவனை வற்புறுத்த, வேலை தேடி வேற்றூருக்குச் செல்கின்றான். அங்கே போனவன் இயற்கையையும் தனிமையையும் விரும்பி வேலையை விட்டுவிட்டு எங்கேயோ காணாமற் போகின்றான் என்பதோடு இந்தக் கதை முடியும். எளிமையான கதை ஆனால் அவ்வாறிருக்க விரும்பும் மனிதர்களுக்கு இந்த உலகம் எதை வெகுமதியாகக் கொடுக்கின்றது என்பதற்கு 50 வருடங்களுக்கு முன் வினா எழுப்பப்பட்டிருக்கின்றது. இன்றும் ஒரு மனிதன் இயல்பாக இருக்க முடியாது, அலைக்கழிக்கப்பட்டபடி, தனக்கான வாழ்வை வாழ முடியாதேயிருக்கின்றான்.

அரியத்தின் அக்காவுக்கு (1971) கதை ஒரு கடிதம் வடிவிலானது. கதிர்காமத்துக்கும், மாணிக்கக் கங்கைக்கும் போய் இயற்கையில் திளைத்த இளங்கோவும், அவனது நண்பர்களும், மீண்டும் இயந்திரத்தனமான நகர வாழ்விற்குத் திரும்பவேண்டுமா என சலித்தபடி பஸ் ஏறுகின்றார்கள். அந்தப் பயணத்தின்போது அரியம் என்று சிறுமியின் பெயர் தெரியாத அக்காவின் மீது இளங்கோவுக்கு மையல் வருகின்றது பஸ் அம்பாந்தோட்டை, மாத்தறை என கடும் வரட்சிப் பிரதேசத்தில் பயணித்தாலும், அரியத்தின் அக்கா மீது ஏற்படும் நேசம் இளங்கோவுக்கு மகிழ்வளிக்கிறது. எனினும் பஸ் தரித்து நிற்கும்போது அரியத்தின் அக்கா இளங்கோவின் நண்பனோடு பேச, அரியத்தின் அக்காவுக்கு தன் மேல் காதலில்லை என்று நினைத்து அவளோடு பேசாது, ஓர் ஊடலோடு அந்தப் பஸ் பயணம் மட்டுமில்லை, பிறகு மாத்தறையில் இருந்து கொழும்புக்கான ரெயின் பயணமும் முடிந்துவிடுகின்றது. காலம் பிந்தி அரும்பிய காதலும் கருகிப்போக இளங்கோ எழுதுகின்ற ஓர் மடலே கதையாகின்றது.

அதுமட்டுமின்றி ரெயில் பயணம்’ (1968), ‘பிரிவதற்குத்தானே உறவு’ (1969), ‘உணர்ச்சிகள்’ (1970) என இந்தக் கதைகளில் வருகின்ற கதைசொல்லி பெண்களைத் தற்செயலாகச் சந்திக்கவோ அல்லது சந்தித்தாலும் மெளனத்தால் கடந்துசெல்கின்ற ஒருவராகவே இருக்கின்றார். ஆனால் இப்பெண்கள் மீது மென்காதல் வயப்படுகின்றார். பிறகு அதே மென்சோகத்துடன் அந்த அனுபவங்களைக் கடந்து போகவும் செய்கின்றார். இவ்வாறான மென்னுணர்ச்சிகளுக்கு மிக முக்கியம் கொடுத்து எழுதிய ஒரு அழகியல் படைப்பாளியாக குப்பிழான் ஐ.சண்முகனை நான் கொள்வேன்.

50 ஆண்டுகளுக்கு முன் இயற்கையிலும், ஏகாந்தத்திலும், மனோரதிய மனோநிலையிலும் வாழ விரும்பிய ஆண் பாத்திரங்கள், இப்போது வாசிப்பவர்களையும் எழுத்தின் வழி ஈர்ப்பதென்பது அவ்வளவு எளிய விடயமல்ல.

கோடுகளும் கோலங்களும்என்ற தலைப்பில் 1976இல் அலை வெளியிட்ட பத்துக் கதைகளும், பிறகு அந்தப் பத்துக்கதைகளோடு மிகுதிக் கதைகளையும் சேர்த்து 1983இல் வெளிவந்த சாதாரணங்களும், அசாதாரணங்களும்கதைத் தொகுப்பும், குப்பிழான் ஐ.சண்முகத்தின் முக்கிய படைப்புக்கள் என்பேன். பின்னரான காலங்களில் வந்த ஒரு பாதையின் கதைபோன்றவை என்னை அவ்வளவு வசீகரிக்கவில்லை.

குறைந்தளவு எழுதினாலும், பாதிக்கக்கூடியவற்றை எழுதினால் எப்போதும் நினைவில் நிறுத்தக்கூடிய ஓர் மரபு ஈழத்துக்கு உரியதென்று பல்வேறு கட்டுரைகளில் சொல்லியிருப்பேன். குப்பிழான் ஐ.சண்முகத்தை அவரின் 'கோடுகளும், கோலங்களும்மற்றும் சாதாரணங்களும், அசாதாரணங்களும்ஆகிய தொகுப்புக்களின் மூலம் நான் என்றும் நினைவுகூர்வேன்.

அவருக்கு என் அஞ்சலிகள்!

0000000000


பிரமிள் வாழ்ந்த வீடு...

பிரமிள் தனது பெற்றோருடன் திருக்கோணமலையில் வாழ்ந்தவர். அவரின் தகப்பன் சுருட்டு வியாபாரியாக இருந்திருக்கின்றார். பண நெருக்கடி காரணமாக பிரமிளின் தாயார் இந்த வீட்டை (இப்போதிருக்கும் வீடல்ல) அன்றைய கால மதிப்பில் 5,000 ரூபாயிற்கு ஈடு வைத்திருக்கின்றார். ஒழுங்கான ஈட்டுப் பத்திரம் இல்லாததாலோ என்னவோ, இந்த இடம் அடகு வைக்கப்பட்டவர்களால் பின்னர் சுவீகரிக்கப்பட்டிருக்கின்றது. இப்போது இது ஒரு தனியார் வைத்தியசாலையாக இயங்குகிறது. பிரமிள், சிவராமலிங்கம் என்றே இங்கே இருப்பவர்களால் நினைவு கூரப்படுகின்றார். அவரின் தாயார் அன்னலட்சுமி பின்னர் யாழ்ப்பாணத்தில் சிலகாலம் வாழ்ந்து காலமாகியிருக்கின்றார்.

பிரமிள் இங்கு இருக்கும்போதே ஓவியராகவும், சிற்பக் கலைஞராகவும் மிளிர்ந்திருக்கின்றார். அவர் மிக நுட்பமாக குறைந்த வளங்களை வைத்து சிற்பங்களைச் செதுக்குவதைப் பலர் கண்டிருக்கின்றனர். வீட்டு வளவு நிறைய பூமரங்கள் இருந்திருக்கின்றது. வீதியால் போகின்றவர்கள் (அருகில் காளி கோயிலும் இருக்கின்றது) தாகந் தீர்ப்பதற்காய் ஒரு பெரியபானையில் தினமும் பிரமிள் தண்ணீர் வைப்பாராம். தனது வீட்டை விட்டு வெளியே போகப் பிரியப்படாத, எப்போதும் நான்கு முழ வேட்டியணியும் பிரமிள், சிலவேளைகளில் தலைகீழாக (யோகா?) நின்றெல்லாம் காட்டி ஒரு eccentric வாழ்க்கையும் வாழ்ந்திருக்கின்றார்.

இவை அனைத்தும் அவரைப் பார்த்த, அவரோடு பழகிய எங்கள் சித்தப்பா சொல்லக் கேட்டது.

**********


Pages & Coffee

Monday, August 07, 2023

 

சில ஊர்களின் தனித்துவப் பெயர்கள் என்னைக் கவர்ந்திழுப்பதுண்டு. அப்படித்தான் இந்தக் கஃபேயின் பெயரும் என்னை அப்படி ஈர்த்திருந்தது. ஆனால் ஒவ்வொரு முறையும் நான் அந்த கஃபேயிற்குப் போகும்போது மூடிவிடுவார்கள். ஒரு கஃபேயை மாலை ஏழு மணிக்குள் கதவடைப்பது என்பது மிக்க அநியாயம். இவர்களுக்கு இரவு என்பது ஏழு மணிக்குப் பிறகுதான் இன்னும் இளமையாக இருக்கும்’  என ஒருவரும் சொல்லியிருக்க மாட்டார்கள் போலும். இறுதியில் உள்ளே நுழையும் சந்தர்ப்பம் நேற்று அமைந்தது. கஃபேயின் பெயரைப் போல நிறையப் புத்தகங்கள் சுற்றிலும் அடுக்கப்பட்டிருந்தன.


சில இடங்கள் எவ்வளவு அழகாக இருந்தாலும், அதற்குள் இருக்கும் அதிர்வுகள் நமக்குப் பொருந்தாதிருக்கும்.  எந்தக் கணத்தில் என்றாலும் எம்மை அமைதியிழக்கச் செய்து வெளியேற்றிவிடும் பதற்றத்தை அவை தன்னகத்தே கொண்டிருக்கும். இந்த கஃபேயிற்குள் நுழைந்தபோது வேறொரு அதிர்வு வந்திருந்தது. கொழும்பில் சில கஃபேயிற்குள் சேகுவரா, மார்க்ஸ், முகமது அலி, ஜான் லெனன் என நமக்குப் பிடித்தவர்களைக் கொண்டு அலங்கரித்திருப்பார்கள். முன்னர் இவர்கள் உண்மையான இடதுசாரிப் பின்னணியில் வந்திருப்பார்களோ என்ற தோற்றமயக்கமுற்று கஃபேக்களை நிறுவியவர்களின் பின்னணியை அறிய ஆவலுறுவதுண்டு. இப்போது கப்பிட்டஸிஸ்ட் மட்டுமில்லை, மார்க்சியர்கள் கூட இறுதியில் நவ தாராளவாதத்தில் வந்து சேரும் நுட்பமான இடங்களைக் கண்டு ஏமாறாமல் இருக்கக் கற்றுக் கொண்டாயிற்று. மேலும் நாமென்ன புரட்சி செய்யவா கஃபேக்களுக்குப் போகின்றோம், முதலீட்டியத்தின் முக்கிய கூறான நுகர்வோரின் ஓர் அங்கமாக எப்போதோ ஆகியும் விட்டோம் அல்லவா?

Latte & Waffle இற்கு உத்தரவு கொடுத்துவிட்டு அங்கிருந்து ஜே.கிருஷ்ணமூர்த்தியின் நூலொன்றை எடுத்து வாசிக்கத் தொடங்கினேன். ஜே.கே நம்மைச் சரியாக நமது பின்னமைப்பியல்வாதிகளின் நூல்களைப் போலக் குழப்புவார். ஆனால் சரடொன்றைக் கண்டுபிடித்துவிட்டால் நமக்குச் சுவாரசியமாகிவிடுவார். நான் எடுத்து வாசிக்கத் தொடங்கிய பக்கங்களில் விடுதலை/விடுபடுதல்பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். அதைப் பேசுவதற்கு முன் நமது பயங்களைப் பற்றி பேசுதல் முன்நிபந்தனை என்றபடி எங்கோ இழுத்துக் கொண்டு சென்றார்.

பின்னர் சட்டென்று எவற்றிலிருந்து விடுதலையை நமது மனம் வேண்டுகின்றது என்று கேள்வி கேட்கத் தொடங்கினார். நமது மனதுக்கு உவப்பான சந்தோசம், பேருவுகை போன்றவற்றிலிருந்து விடுதலையை நாம் ஒருபோதும் கேட்பதில்லை. துயரம், வலி போன்ற நமக்குப் பிடிக்காத உணர்ச்சிகளில் இருந்து மட்டுமே நாம் விடுபடுதலை வேண்டுகின்றோம். அப்போது நாம் ஒரு பக்கத்தை எடுத்து மற்றதை விலத்துகின்றோம். ஆனால் மகிழ்ச்சியும், துயரமும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள். ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிக்க முடியாது. ஒன்றைத் தக்கவைத்து, மற்றதில் விடுபடுதல் சாத்தியமானதுமல்ல, அது உண்மையான விடுதலையுமல்ல. மனதில் எதுவும் எஞ்சியிருக்காத தனிமையிலிருந்து வருவதே விடுதலை என்கிறார். ஹிப்பிக்கள் இந்தச் சமூகத்திலிருந்து வெளியேறி அலைந்து திரிந்தது முக்கிய நிகழ்வென்றாலும், அவர்கள் அதை தாங்கள் வாழும் சமூகத்திலிருந்து எதிர்ப்புத் தெரிவிக்கின்றோம் என்று நினைப்போடு செய்ததால் அது முழுமையான விடுதலை இல்லை, ஏனெனில் அங்கே ஏதோ ஒன்று இன்னும் மிஞ்சியிருக்கின்றது என்கின்றார் ஜேகே.



வ்வாறு வாசித்து மனம் விடுதலையை அலசிக் கொண்டிருந்தபோது, வாங்கிய Latteஇற்காக பணம் செலுத்தப் போனேன். அங்கு நின்ற பெண், ‘நீங்கள் எழுதுகின்றவரா?’ எனக் கேட்டார். முதன்முதலாக ஒரு கஃபேயில் randomமாக ஒரு பெண் இப்படிக் கேட்கின்றாரே என வியப்பாக இருந்தது. அத்தோடு நிறுத்தாமல் என்ன எழுதுவீர்கள், புத்தகங்களின் பெயர்கள் என்ன என்றெல்லாம் கேட்டார் (இதற்காகவே இந்தக் கஃபேக்கு 7 மணிக்கு முன்னர் அடிக்கடி வரவேண்டுமென நினைத்தேன்).

நான் இப்படி அன்போடு அந்தப் பெண் ‘குசலம்விசாரித்ததில் கரைந்து போய் நிற்பதை, மறுகரையில் இருந்த என் தோழி மோப்பம் பிடித்திருக்க வேண்டும். ஜே.கேயின் விடுதலையை நான் வாசிக்கத் தொடங்கியபோது அவருக்கு Modern Love Chennai இன் மார்கழியை என் அலைபேசியில் Amazon Prime ஊடு பார்க்கக் கொடுத்திருந்தேன். என்னையும் கூடச் சேர்ந்து அதைப் பார்க்கக் கேட்டபோது, என் மருமகளின் வயதில் இருப்பவர்க்கான எபிசோட்டை நான் பார்க்கமாட்டேன் என நிராகரித்திருந்தேன். ஆனால் அவ்வப்போது வாசிப்பின் இடையில் எட்டிப் பார்த்தபோது அதன் மலை/மழை பின்னணி, அந்த அப்பாவித்தனமான பதின்மக்காதல், எதிர்ப்பால் உடல் மீது வரும் முதன்முதலான ஈர்ப்பு எல்லாம் நாமெல்லோரும் கடந்து வந்திருக்கக் கூடியதுதான் என நினைத்துக் கொண்டேன்.

Modern Love Chennai  இல் வரும் நம்மாளின் எபிசோட் பார்ப்பதென்றால், வேண்டுமெனில் நானும் சேர்ந்து பார்க்கின்றேன் என்றேன். அது தியாகராஜன் குமாரராஜா. எனக்கு அவரின் திரைப்படங்கள் பிறரைப் போல அவ்வளவு கவர்ந்ததில்லை. ஆனால் அவரின் எளிமையும், ஒருவகை நாடோடித்தன்மையும் பிடிக்கும். அண்மையில் மிஷ்கின் கூட நானொரு குழந்தமையைக் கொண்ட ஒருவனைச் சந்தித்தேன், அவன் பின்னர் கொண்டு வர மறந்ததேனெனச் சொல்லி தான் வரைந்த ஓவியத்தை அனுப்பினான் என்று குமாரராஜா பற்றிச் சொல்லியிருப்பார்.

கஃபேயில் ஒலித்த ஒரு எப்ஃ.எம்மில் consensual sex பற்றிய உரையாடல் போகும்போது நினைவோ ஒரு பறவைபார்க்கத் தொடங்கினோம். இலங்கையில் ஆங்கில வானொலிகள் மிக முன்னோக்கிய நிலையில் இருந்ததை வேறு சந்தர்ப்பங்களிலும் கண்டிருக்கின்றேன். கனடாவிலிருக்கும் நம் தமிழ் வானொலி ஆட்கள் இவற்றைப் பார்த்தாவது உருப்படியான நிகழ்ச்சிகளை அலுப்பில்லாது செய்வது எப்படியெனக் கற்க வேண்டும். 

நம்மாள் ஏமாற்றவில்லைஆனால் இந்தளவுக்குக் காதலை இழுத்திருக்கத் தேவையில்லை. காதல் இப்படி அவ்வளவு அழகாக எல்லோருக்கும் வாய்க்குமா தெரியவில்லை. ஆனால் கற்பனைகள் விரிய விரிய எல்லாவற்றுக்கும் அழகு கூடிவிடுகின்றன. நாம் அதற்குள் நுழையும்போது ஒரு படைப்பின் பாத்திரங்களாய் நாங்கள் உணரவும் தொடங்கிவிடுவோம். அப்போது அந்தக் காதலை நாங்களும் வாழத் தொடங்குகின்றோம்.

மற்ற எபிசோட் போலில்லாது இது நீண்டதென்பதால், இது முடிவதற்குள் கஃபேயை மூடிவிடப்போவதாகச் சொன்னார்கள். நல்லவேளையாக அதன் ஒருபகுதியாக வெளியே தேமாப்பூ மரம் சூழ சில பெஞ்சுகள் இருக்க நாம் அங்கே போய் அதை முழுதாய்ப் பார்த்தோம்.

பிறருக்கு தேமாப்பூ, எனக்கு அது வெள்ளையாக இருக்கும்போது பாதிரிப்பூதான். மரத்திலிருந்து உதிர்ந்த சில பாதிரிப்பூக்களை எடுத்து தோழிக்குக் கொடுத்தேன். அவர் அதைச் சூடிக்கொண்டு நான் உனக்கு, உன் பிரியமுள்ள புத்தரா என்றார். நீங்கள் புத்தரென்றால், நான் இன்னமும் பாவங்கள்செய்தபடி புத்தரின் காலடிக்கு வந்துவிடாத ஆமிரபாலி என்றேன்.

இவ்வாறு இந்த மாலை/இரவு ஒருவகைப் பேருவுகையைக் கொண்டு வந்திருந்தது. புத்தகங்கள் சூழ, யன்னலுக்குள் மரங்கள் அசைவதைப் பார்த்து, ஜேகேயின் நூலை வாசித்து அசைபோட்டபடி, ‘நினைவு ஒரு பறவையாக அவ்வப்போது சிறகடிக்க நான் அமைதியையும் உணர்ந்தேன்.

சிலவேளைகளில் கணங்களில் நிகழக்கூடிய விடுதலைதான் எனக்கு வாய்த்திருக்கின்றதோ என்னவோ. ஓஷோ தியானத்தில் வரும் Valleys and Peaks , சிலவேளைகளில் நாங்கள் love making இன் போது அந்தக் கணநேரத்து Peaks களை உணரமுடியும் என்கின்றார். நினைவோ ஒரு பறவையில் நாயகி orgasm இன் பொழுது தனக்குள் short term memory loss ஆகி தான் இன்னொரு பிரபஞ்சத்தில் நுழைந்துவிடுவதான பிரமை வருகின்றது என்கின்றாள்.

ஏதோ ஒருவகையில் நாம் நமது நாளாந்த நெருக்கடியிலிருந்து கொஞ்சப் பொழுதாவது விடுதலையாக வேண்டும்.

எழுதுகின்றவனா எனக்கேட்டு என் பொழுதுக்கு வர்ணமூட்டிய ந்தப் கஃபே பெண்ணுக்கு ஒரு புன்னகையைப் பரிசளிக்க வேண்டும். ஜேகேயை வாசித்து, என் அத்தனை குழப்பங்களோடும்  நான் அவரைப் புரிந்துகொள்ள rephrase செய்ததைப் பொறுமையாகக் கேட்ட என் தோழியை நேசத்துடன் அரவணைக்க வேண்டும். இவையும் கணங்களில் நிகழக்கூடிய விடுதலைதான்.


இந்த இரவு இன்னும் இளமையாகவே இருக்கின்றது!

*************************************


(May, 2023)


பாவாவின் (Geoffrey Bawa) 'லுனுகங்க'

Wednesday, August 02, 2023

 

பாவாவின் வடிவமைப்புகளுக்கு ஒரு தனித்துவம் இருப்பதுபோலஅவருக்கு தேமாப்பூக்கள் அளவிறந்த ஈர்ப்பு இருக்கின்றது. அவர் வடிவமைத்த கட்டடங்கள் ஓவ்வொன்றின் அருகாமையிலும் இந்த தேமாப்பூ மரங்கள் விரிந்து நிற்கும். இவ்வாறே பாவாவின் சகோதரரான Bevis Bawa வின் பெந்தோட்டையில் இருக்கும் வீட்டிற்கும்தோட்டத்திற்கும் போனபோதுஇந்த தேமாப்பூ மரங்களே தனித்து அந்த வீட்டுக்கு முன்னாள் நின்றன. ஜிப்ரி பாவாவைப் போல அவரது சகோதரரும் தோட்டக்கலை வல்லுனர் ஆவர் (Landscape Architect).


ஜிப்ஃரி பாவா கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக (1948-1998) லுனுகங்காவோடு தொடர்புபட்டவர் எனவே தொடர்ச்சியாக இந்த வீட்டின் அமைவிடங்களை மட்டுமில்லைஅது சூழ்ந்திருந்த நிலப்பரப்பையும் மாற்றிக்கொண்டேயிருந்தவர். பாவாவிற்கு எப்போதும் பாவித்து எறியப்படும் பொருட்கள் மீது அதிக ஈர்ப்பு இருந்திருக்கின்றது. அவரின் தோட்டத்தை அழகுபடுத்தும் பெரும்கலயங்கள் ஏற்கனவே ஆங்கிலேயரால் கைவிடப்பட்ட சீனத்துப் பொருட்கள். அவ்வாறே முன்பு புகையிரத நிலையங்கள் பாவிக்கப்பட்ட மரப்பெஞ்சுகளையும் எடுத்துக் கொண்டு வந்து பாவித்திருக்கின்றார்.

 

Geoffrey Bawa ஒரு தலைசிறந்த architect என்பது நம் அனைவர்க்கும் தெரியும். அவர் 1919இல் இலங்கையில் பிறந்துஇங்கிலாந்தில் சட்டத்தில் பட்டம் பெற்றவர். பின்னர் 2ம் உலக மகாயுத்தகாலத்தில் இலங்கைக்கு வந்து சட்டத்துறையில் வேலை பார்க்கின்றார். எனினும் தாயாரின் மறைவையடுத்துதனது தொழிலைக் கைவிட்டு ஐரோப்பாஅமெரிக்கா எனப் பயணிக்கத் தொடங்கினார். இத்தாலியில் வீடு வாங்கி அங்கேயே வாழ நினைத்த பாவாவை இலங்கை மீண்டும் இழுத்துக் கொண்டு வருகின்றது.


அப்போது (1948) இல்பெந்தோட்டைக்கு அருகில் இந்த  15 ஏக்கர் நிலப் பரப்பை வாங்குகின்றார். அதற்கு லுனுகங்கா என பாவா பெயரிடுகின்றார். சிங்களத்தில் உப்பு ஆறு என்று அர்த்தம் வரக்கூடியது. பாவா இந்த இடத்தில் இத்தாலியன் தோட்டமொன்றை வீடொன்றுடன் சேர்த்து அமைக்க முயல்கின்றார். எனினும் காடு அடர்ந்த இந்த இடத்தில் அவரது முயற்சிஅவருக்கு தோட்ட/வீடு வடிவமைக்கும் அறிவு இல்லாததால் தோல்வியடைகின்றது. பின்னர் பாவா மீண்டும் இங்கிலாந்துக்கு architecture படிக்கச் சென்றுபட்டத்துடன் தனது 38வது வயதில் இலங்கைக்குத் திரும்புகின்றார்.

பாவாவின் வடிவமைப்பில் இருக்கும் பல கட்டடங்கள் இப்போது பொதுமக்களின் பார்வைக்கு இல்லை. அவை இப்போது சுற்றுலாப் பயணிகளுக்கான சொகுசான விடுதிகளாக இங்கே மாற்றப்பட்டிருக்கின்றன. பாவா அன்றைய காலத்தில் 15 ஏக்கராக நிலத்தை வாங்கியபோதுஅதற்கான வருடாந்த வரியை நிறையச் செலுத்தவேண்டியிருந்தது. எனவே இந்த நிலத்தை ஒரு பண்ணையாக மாற்றியிருக்கின்றார். வேளாண்மை செய்யும் நிலத்துக்கு வரி குறைவு. அன்று கோழிப்பண்ணையாக இருந்த இடம்பின்னர் கண்காட்சிக் கூடமாக இருந்துஇப்போது பயணியர் தங்கும் விடுதியாகிவிட்டடது.

இந்த நிலப்பரப்பைப் போல 10 ஏக்கர் நிலப்பரப்பை அருகிலுள்ள வாவிக்கு நடுவிலும் வாங்கியிருக்கின்றார். இன்றுவரை அதில் எதுவும் நிர்மாணிக்காமல் பறவைகளுக்கான காடாக அதை அப்படியே விட்டு வைத்திருப்பது மகிழ்வு தரக்கூடியது.

 

ங்களுக்கு வழிகாட்டியாக வந்தவர் (ஒரு தமிழர்) பாவாவிற்கு விருப்பமான இடங்களை ஒவ்வொன்றாகச் சொல்லிக் கொண்டு வந்தார். பாவா காலையில் தேநீர் அருந்தும் இடத்துக்குத் தொலைவில் வாவி இருந்தாலும் அதைப் பார்க்கும்படியாக்க நிலப்பரப்பை அவர் மாற்றி அமைத்திருக்கின்றார். அதுபோலவே இன்றும் நிறையத் தேமாப்பூக்கள் அழகு சேர்க்கநெல் விதைக்கும் நிலன்கள் இருக்கின்றன. பாவா உள்ளே அமைத்திருக்கும் குளம் வண்ணத்துப்பூச்சியின் வடிவிலானது. இந்த நிலப்பரப்பு ஒருகாலத்தில் தேயிலை/இறப்பர் தோட்டமாக இருந்தாலும் பாவா நிறைய பழமரங்களை நட்டு வளர்த்திருக்கின்றார். அந்தப் பராம்பரியம் பாவா காலமாகி 20 வருடங்களான பின்னும் தொடர்கின்றது.  எனவே போகும் வழியெங்கும் ஏதேனும் ஒரு பழத்தை நாங்கள் சுவைத்துக் கொண்டு போகமுடியும். நான் நாவல்பழம்வெரலுஈச்சம்பழம் இன்னும் பெயர் நினைவில் நிற்கா சில சிங்களப்பெயருள்ள பழங்களைச் சுவைத்துப் பார்த்தேன்.

பாவா இறுதிவரை திருமணம் செய்யாதிருந்தவரென்றாலும்அவருக்கு இருபாலினரிலும் காதலர்கள் இருந்திருக்கின்றனர் என எமது வழிகாட்டி சொன்னார். பாவா தன் காதலர்களுடன் தனிமையில் இருக்கும் இடத்தோடு எமது லுனுகங்கா பயணம் முடிந்தது. பாவா கடைசிக்காலங்களில் ஸ்ட்ரோக் வந்து கோமாவிற்குள் போனவர்.   லுனுகங்காவிலிருந்து கொழும்புக்குச் சென்று கடைசி சில வருடங்கள் இந்தச் சிக்கலுடன் உயிர் வாழ்ந்தவர்.


அவரின் இறுதிவிருப்பப்படியே அவரின் அஸ்தி லுனுகங்காவில் வீசப்பட்டது. அதற்கென ஒரு சிறு அடையாளம் ஒரு மரத்தின் கீழ் எவ்வித பெயர்/வாசகமின்றி இருக்கின்றது. அந்த மரத்தின் (பெயர் மறந்துவிட்டேன்) பூக்கள் அவ்வளவு வாசனையானது. அந்த வாசத்தைப் போல பாவாவும் நீண்டகாலம் மக்களின் மனங்களில் இருந்து மறையாது வாழக்கூடும்.

 

********************


(May, 2023)

 


கார்காலக் குறிப்புகள் - 15

Tuesday, August 01, 2023

 

'ஒரு அறிவுஜீவியின் பகல்நேர வேடம்'

1.


நான் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தபோது, இன்னொரு வளாகத்தில் கற்கும் சகமாணவியைப் பற்றிய செய்தியொன்று அப்போது பத்திரிகையில் வெளிவந்திருந்தது. அவர் சட்டக்கல்லூரி மாணவர். கல்விச் செலவுக்காக நிர்வாண விடுதியில் நடனம் ஆடிக் கொண்டிருப்பதாய் அதில் சொல்லியிருப்பார். அவர் வெளிப்படையாக தனது புகைப்படத்துடன் தன்னை அந்தப் பத்திரிகையில் முன்வைத்தது எனக்கு ஒருபக்கம் அதிர்ச்சியாகவும், இன்னொருபக்கம் வியப்பாகவும் இருந்தது. பிறகான காலத்தில் வளாகங்களில் படித்த சில பெண்கள் தங்களுக்கு sugar daddyக்கள் இருக்கின்றார்கள் என்று வாக்குமூலம் கொடுத்த செய்திகளை வாசித்தெல்லாம் எளிதாகக் கடந்து வந்திருக்கின்றேன். சமூகம்/வறுமை/குடும்பப் பொறுப்பு/தனிப்பட்ட விருப்பு என்று எத்தனையோ காரணங்கள் பின்னிப்பிணைந்து இதன் பின்னணியில் இருப்பதை இவை குறித்த ஆய்வுக்கட்டுரைகளை வாசித்தால் நமக்குப் புலப்படும்.

கே.மீராவின் ‘அந்த மரத்தையும் மறந்தேன் மறந்தேன் நான்நாவலில், ஒரு சட்டத்துறை மாணவியான ராதிகா வாசகர்க்கு அறிமுகப்படுத்தப்படுகின்றார். அவரின் சிக்கலான பின்னணி இங்கே விபரிக்கப்படுகின்றது. ராதிகா எப்போது நினைத்தாலும் அவரைப் பைத்தியம் வைக்கச் செய்யும் பத்து வயது நினைவொன்று அவருக்குள் உண்டு. சித்திரம் வரைதலில் ஆர்வமுள்ள ராதிகாவை, அவர் பத்து வயதில் இருக்கும் அவரின் தந்தை இன்னொரு ஊருக்கு ஓவியப்போட்டிக்காய் அழைத்துச் செல்கின்றார். போட்டி முடிந்து வரும் ராதிகாவை தெருவின் மூலையில் நிற்கச் சொல்லிவிட்டு, தந்தை சிறுநீர் கழிக்கச் சென்றுவிட்டு வருவதாகச் சொல்கிறார். ஆனால் அவர் பாருக்குச் சென்று குடித்து, அந்த ஊரின் பிரபல்யமான பரத்தையான பார்வதியைத் தேடிப் போகின்றார். அந்தவேளையில் நிகழும் பொலிஸ் சுற்றிவளைப்பால், ராதிகாவின் தந்தையைப் பொலிஸ் பிடித்துக்கொண்டு போகின்றது. தனித்து தெருவில் பரிதவித்து நிற்கும் பத்துவயதுச் சிறுமியை ஒரு மரம்வெட்டி தன் வீட்டுக்குக் கூட்டிச் செல்கின்றான். கஞ்சியும் மரவள்ளியும் சாப்பிடக் கொடுத்துவிட்டு, ராதிகா அரைத்தூக்கத்தில் இருக்கும்போது அந்த மனிதன் பாலியல் வன்புணர்வைச் செய்கின்றான்.

பிறகான காலத்தில் தகப்பன் ராதிகாவுக்கு இவ்வாறு நிகழ்ந்தது அறிந்து பைத்தியமாகின்றார். அவரால் வேலை செய்ய முடியாததால், ராதிகாவையும், அவளின் தம்பியையும், நோயுற்ற கணவனையும் காப்பாற்ற ராதிகாவின் தாய் இன்னொரு ஊருக்கு வேலைக்குப் போகின்றார். ராதிகா சட்டம் இரண்டாமாண்டு படிக்கும்போது தாய் சடுதியாக இறந்து போகின்றார். தாய் செய்துகொண்டிருந்த பொறுப்பு அனைத்தும் இப்போது ராதிகாவின் தலைமீது விழுகின்றது. தம்பி, தந்தை எல்லோரையும் காப்பாற்றவேண்டிய பாரிய சுமை. தாயின் மரணத்துக்குப் பின்னரே தாய் செய்துகொண்டிருந்தது பாலியல் தொழில் என்பது தெரிகின்றது. ராதிகாவும் தொடர்ந்து படிப்பதற்காகவும், குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காகவும் தாய் செய்த அதே தொழிலுக்குச் செல்கின்றார்.

அங்கேதான் முதன்முதலில் கிறிஸ்டியைச் சந்திக்கின்றார். ராதிகாவின் முதல் வாடிக்கையாளர் கிறிஸ்டி, ஆனால் அவ்வளவு மூர்க்கமாக அவன் ராதிகாவோடு நடந்துகொள்கின்றான். அடுத்த செமஸ்டரில் சட்டக்கல்லூரியில் கிறிஸ்டியை மீண்டும் காண்கின்றாள். கிறிஸ்டி அதே கல்லூரியில் பெரிய இயக்கமொன்று நடத்துபவனாக இருக்கின்றான். திரைப்பட விழா நடத்த பணம் கேட்க ராதிகாவிடம் வருகின்றான். உன்னை எங்கையோ பார்த்திருக்கின்றேன் என்று கிறிஸ்டி ராதிகாவிடம் சொல்கின்றான். அவனுக்கு இப்போது ராதிகா யாரென்பது நினைவுக்கு வருகின்றது. தன்னிடம் கொடுப்பதற்கு பணமில்லை என ராதிகா சொல்கின்றபோது ஒரு வேசியின் ஒழுக்கம்எனத் திட்டுகின்றான். அதற்கு ராதிகா, ‘ஒரு அறிவுஜீவியின் பகல்நேர மரியாதை வேடம்எனச் சுள்ளெனப் பதிலளிக்கின்றாள்.

ராதிகாவால், பரத்தையான பார்வதியைப் போல ஆக முடியாதென்பது அவளுக்குத் தெரிகின்றது. சட்டப்படிப்பைக் கைவிட்டு வீட்டு வேலைகளுக்குப் போகத் தொடங்குகின்றாள். கல்லூரிக்கு வருவதை நிறுத்திய ராதிகாவைத் தேடி, கிறிஸ்டி வருகின்றான். நீ எப்படியெனினும் படிக்கவேண்டும் என்று ராதிகாவைத் தொடர்ந்து படிக்க வைக்கின்றான்.



2.


இப்போது ராதிகா ஒரு வழக்கறிஞர். அவள் அஜித் என்கின்ற அவளின் தகுதிக்குப் பொருத்தமில்லாத ஒருவரைத் திருமணம் செய்துவிட்டாள். 1989இல் சட்டக்கல்லூரியில் படித்த அப்பாவியான ராதிகா இப்போது கதை நிகழும் காலமான 2005இல் இல்லை. அவளைத் தேடி கிறிஸ்டி ஒரு விசித்திரமான வழக்கைப் பதிவுசெய்யவேண்டுமென வருகின்றான்.

பழைய நினைவுகள் ராதிகாவிற்குள் ஊற்றெடுக்கின்றன. கிறிஸ்டி அவளின் நேசத்துக்குரிய காதலனாகவும் இருந்திருக்கின்றான். அப்போது எவருடனும் பகிரமுடியாத சிறுவயது துர்நினைவை பத்து வருடங்களின் பின் ராதிகா கிறிஸ்டியோடு மட்டுமே பகிர்ந்துகொள்கின்றாள். நான் அன்று ஒரு மரம் போல குளிர்ந்து மரத்துப் போனேன்என்று அத்துர்நினைவின் ஒரு துளியும் மறக்காது ராதிகா நினைவுகூர்கின்றாள்.

கிறிஸ்டி நல்லதொரு காதலனாக இருக்கின்றான்; ஆனால் அவனுக்குள்ளும் மூர்க்கமான ஓர் ஆண் ஒளிந்திருக்கின்றான். காதலும் காமமுமாக கிறங்கிய வாழ்வில், ஓர் நாள் ராதிகா கருவுருகிறாள். எவ்வளவு சொன்னாலும் கிறிஸ்டி ஒரு குழந்தைக்குத் தன்னால் தந்தையாக முடியாது என்று அடம்பிடிக்கின்றான். நீ எது சொன்னாலும் எனக்குக் குழந்தை வேண்டும் என்கின்ற ராதிகாவை விட்டுப் பிரிகின்ற கிறிஸ்டி, ஒருநாள் சடுதியாகத் தோன்றி ஒரு மலைப்பிரதேசத தேவாலயத்தில் அவளை மணம் முடித்துக் கொள்கின்றான். ஆனால் திரும்பிவருகையில் கிறிஸ்டி மூர்க்கமாகி ராதிகாவின் ஆடைகளைக் கிழித்து மோசமாக புணர்கின்றான். அவன் ரம்பம் போல எனக்குள் நுழைந்தான்என்கின்ற மாதிரியான மோசமான அனுபவம் ராதிகாவுக்கு நிகழ்கின்றது. அத்தோடு ராதிகாவை விட்டுப் போனவந்தான் இப்போது நீண்டகாலத்தின் பின் திரும்பியிருக்கின்றான்.

இந்த கிறிஸ்டி முற்றிய உளவியல் பிரச்சினைக்குரியவன். அதற்கு சிகிச்சையும் பெறுகின்றவன். ஓர் எழுத்தாளனாகி விட்ட கிறிஸ்டியின் கதைகளின் முழுத்தொகுப்பை ஒரு பதிப்பகம் வெளியிட்டிருக்கின்றது. அந்தப் பெருந்தொகுப்பை ராதிகாவுக்குக் கொண்டுவந்து கிறிஸ்டி கொடுக்கின்றான். அதன் முதற்பக்கத்திலேயே என் ராதிகாவுக்கு, எங்கள் காதலுக்கு, எங்களின் திருமண நாளுக்குஎன சமர்ப்பணம் செய்யப்பட்டிருக்கின்றது. இன்னொரு நாவல், ‘ராதிகாவின் கருவில் முளைத்த என் மகன் 2ம் அரிஸ்டாட்டிலுக்குசமர்ப்பணம் செய்யப்பட்டிருகின்றது. ராதிகாவுக்கு உலகே சுற்றுகின்றது. என்ன செய்வதென்ற அதிர்ச்சியில் அனைத்து நூல்களையும் வெறியுடன் கிழித்து எறிந்து தீயில் போட்டெரிக்கிறாள்.

கிறிஸ்டி தன்னை மோசமாகப் புணர்ந்து கைவிட்டு சென்றதன்பின்னே, இனி அவனைப் போல இந்தக் குழந்தையும் வேண்டாமென கருக்கலைப்பு செய்கின்றாள் ராதிகா. இதற்கான அனைத்து அவமானங்களையும் தாண்டித்தான் பின்னர் அஜித்திடம் எல்லாவற்றையும் சொல்லி அவனை திருமணமும் செய்கின்றாள்.

கிறிஸ்டி உளவியல் சிக்கலுக்கு ஆழமாகிப் போய்விட்டவன். தன் ஞானஸ்தான பெயரைப் பாதிரியாரும் தேவாலயமும் மாற்றச் சதி செய்கின்றார்கள் என்றும் அதற்கு வழக்குப் பதிவு செய்யும்படியுமாக ராதிகாவை வற்புறுத்துகின்றாள். அவனை ராதிகா எந்தளவுக்கு வெறுக்கின்றாளோ, அந்தளவுக்கு ஏதோ ஒருபக்கத்தில் மனம்பிறழ்ந்த கிறிஸ்டி மீது ராதிகாவுக்கு சொல்லமுடியாத பிரியமும் இருக்கின்றது.

கிறிஸ்டியின் சகோதரர்களை அழைத்து அவனுக்கு உரிய வைத்தியம் பார்க்கமுடியாதா எனக் கேட்கின்றாள். கிறிஸ்டி சட்டக்கல்லூரியின் கடைசிப் பரிட்சையும் எழுதாமல் மூன்றாண்டுகளாக இந்தியாவின் வடக்கில் அழைந்து கிட்டத்தட்ட முழுப்பைத்தியமாக இருந்தபோது கண்டெடுத்து கூட்டிக்கொண்டு வந்தோம் என்று கிறிஸ்டியின் சகோதரர்கள் கூறுகின்றார்கள். ஒரு அந்தரங்கமான பொழுதில் ராதிகாவுடன் இருக்கும்போது, தான் இயேசு கிறிஸ்துவைப் போல ராதிகாவுக்குச் செய்த பாவங்களுக்காக சிலுவை சுமக்க அந்த மூன்று வருடங்களும் சென்றேன் என்கின்றான்.

ராதிகாவின் வாழ்வில் தொடர்ந்து துயரங்களே வழித்துணைக்கு வந்தபடி இருக்கின்றன. ஆனாலும் அதற்குள்ளும் வாழ்ந்தபடி இருக்கின்றாள். அவள் சந்தித்த ஆண்களெல்லாம் தகப்பனைப் போல, கிறிஸ்டியைப் போல, கையாலகாத கணவன் அஜித்தைப் போலத்தான் இருக்கின்றனர். அவள் தேடுகின்ற நேசமோ, கருணையோ அவள் எதிர்பார்க்கின்றமாதிரிக் கிடைக்காதபோதும் இந்த ஆண்களை அரவணைத்தே கொள்கின்றாள். இறுதியில் கிறிஸ்டியைத் தேடி ராதிகா போகின்றாள். அது அவளுக்குத் தப்பமுடியாத பெருந்துயரைக் கொடுப்பதுடன் நாவல் முடிகின்றது.

மீராவின் பெண்பாத்திரங்கள் எப்போதும் சிக்கலானவை. இவ்வாறான protagonistகளை ஆண்களால் ஒருபோதும் படைக்கமுடியாது என்பதை மீராவின் நாவல்கள் ஒவ்வொன்றையும் வாசிக்கும்போது உணர்வதுண்டு. சிறுவயதில் பெருந்துயர் அனுபவித்து, இளமையில் காதலன் எனப்பட்டவனால் கைவிடப்பட்டு, பின்னர் ஒருவனைத் திருமணம் செய்து நிறைவான வாழ்வில்லாதுவிட்டாலும் ஒரளவு நிம்மதியான வாழ்வு வாழும் ராதிகா, அந்தப் பைத்தியக்கார எழுத்தாளனான கிறிஸ்டி மீது ஏன் இவ்வளவு நேசத்துடன் இருக்கின்றாள், ஏன் அவனின் கைவிடல்களையும், வன்முறையையும் மறந்து ஒவ்வொருபொழுதும் அவன் மீது வசீகரிக்கப்படுகின்றாள் என்பதுதான் புதிர். அதுவே நம் சிலருக்கு வாழ்க்கையும் ஆகின்றது. எவர் மீதும் அதிக குற்றம் சாட்டாது, இந்த கருணையற்றவர்களின் வன்முறைகளின் மேல் நின்று வாழ்கின்ற ராதிகா என்கின்ற பெண்ணொருத்தியின் கதையில், அவளை எப்படிப் புரிந்துகொள்வதென்ற திகைப்பும், நெகிழ்வும், அச்சமும் ஒருசேர வருவதால், நமக்கும் இந்நாவல் நெருக்கமானதாகின்றது.

*******************


'அந்த மரத்தையும் மரத்தையும் மறந்தேன் நான்' - கே.ஆர். மீரா, தமிழில் சிற்பி பாலசுப்பிரமணியம்.


(May 08, 2023)