'சிறை' திரைப்படத்தின் மூலக்கதைக்கு உரியவரான தமிழின் நேர்காணலைப்
பார்த்துக் கொண்டிருந்தேன். தமிழ், பொலிஸ் பின்னணியில் இருந்து
திரைத்துறைக்கு வந்தவர். ஈழப்போர் உக்கிரமாக நடந்த இறுதிக்காலத்தில்
தமிழகம் கொந்தளித்துக் கொண்டிருந்தது. அப்போது நடந்த பல்வேறு ஊர்வலங்களில்
தமிழ் கலந்து கொண்டிருக்கின்றார். கடலூரிலோ வேறெங்கோ யாரோ ஒருவர்
ஈழப்போரின் நிமித்தம் தீக்குளித்தபோது அவர் உடலத்தை மயானத்துக்
கொண்டும்போகும்போது அந்தக் கூட்டத்தினருக்கும், பொலிஸுக்கும் கலகலப்பு
ஏற்பட்டிருக்கின்றது. பொலிஸ் கூட்டத்தைத் துரத்தியடித்து பலரைக் கைது
செய்திருக்கின்றது.
அப்போது தப்பியோடிய தமிழைப் பொலிஸ்
கைதுசெய்து, பொலிஸ் ஸ்டேசனுக்குக் கொண்டுபோகும்வழியில், வழமையாக பொலிஸ்
எங்கிருந்து வருகின்றாய் என்று விசாரித்தபோது தமிழ் சென்னையில் இருந்து
வந்திருக்கின்றேன் என்றிருக்கின்றார். என்ன வேலை செய்கின்றாய் என்றபோது
பொலிஸ் என்றபோது கைது செய்த பொலிஸுக்குத் திகைப்பாக இருந்தது. ஒரு பொலிஸாக
வேலை செய்யும் நீ இப்படியா இருப்பது, ஒழுங்காக செய்கின்ற வேலையைப் பாரென்று
பொலிஸ் ஸ்டேசனின் பின்புறமாகக் கூட்டிச் சென்று சாப்பாடோ டீயோ
கொடுத்திருக்கின்றார்.

இன்றைக்கு இறுதி ஈழப்போராட்டத்தின்போது, இலங்கையை விட்டு வெளியே தமிழகம் உள்ளிட்ட புலம்பெயர் தேசங்களில் அப்போது என்ன நடந்தது என்பது சரியாகப் பதிவு செய்யப்படாது காலம் கரைந்து கொண்டிருக்கின்றது. தமிழகத்தில் அன்றைக்கு சாதாரண மனிதர்கள் எவ்வளவு உணர்வுபூர்வமாகப் பங்குபற்றினார்கள் என்பது பலருக்கு - முக்கியமாக ஈழத்தில் இருந்தவர்க்கும்/இரண்டாயிரத்தில் பிறந்தவர்க்கும் சரியாகத் தெரியாது.
இவ்வாறு தமிழ் கூறியதுமாதிரி, 'பாட்டில் ராதா' திரைநிகழ்வின்போது, ராஜூ முருகன் ஈழப்போராட்டம் முடிந்துவிட்டது என்று அறிந்தபோது மனம் கலங்கி அப்படி பெருங்குடி குடித்தேன். அதுதான் கடைசி. அதற்குப் பிறகு வாழ்க்கையில் குடிக்கவே இல்லை என்று சொல்லியிருப்பார்.
இப்படி ஈழப்போராட்டத்துக்கு ஆதரவாக அன்று களத்திலும், இணையத்திலும் ராம்,மாரி செல்வராஜ் இயங்கியதை 'காட்சி' என்ற தளத்திற்குச் சென்றால் நாங்கள் இப்போதும் பார்க்கலாம். தனது பல பார்வைகளை ஈழப்போராட்டம் மாற்றியமைத்தது என்று மாரி பல்வேறு இடங்களில் சொல்லியிருப்பார். அன்றைய அவர்களின் தளத்தில் தீக்குளித்த முத்துக்குமாரை வைத்து அரசியல் நடத்திய அரசியல்வாதிகளை தோலுரித்த கட்டுரை/கள் இன்னும் அந்த இணையத்தளத்தில் இருக்க வேண்டும்.
இதேகாலகட்டத்தில் பொதுமக்களைப் போல, மாணவர்களினதும் பேரெழுச்சியும் நடந்தது. அதில் சில மாணவர்கள் அமைப்புக்களாக இயங்கியதும், அவர்களில் (இளந்தமிழர் இயக்கம்) சிலரைப் பின் தொடர்ந்து கொண்டும் அப்போதும் நானிருந்தேன். அந்த மாணவர்கள் அமைப்புக்கள் அவ்வளவு தீவிரமாக அரசியல் பேசியது, களத்தில் இறங்கி கடுமையாக வேலையும் செய்திருக்கின்றன.
அன்றைய காலத்தில் தமிழகத்தில் 15 பேர் உட்பட, உலகெங்கும் 20இற்கும் மேற்பட்டவர்கள் முத்துக்குமாரனைப் போன்று ஈழத்துக்காக தீக்குளித்திருக்கின்றார்கள் என்பது எவ்வளவு வேதனையான விடயம். நாளை முத்துக்குமாரன் தீக்குளித்த நாள்.
எப்படி 1983 ஈழத்தில் இனப்படுகொலை நடந்தபோது, தமிழகத்தில் ஒரு தலைமுறை அதன் பாதிப்பில் அரசியலிலும் இலக்கியதிலும் வெளிவந்ததோ, அதைப் போன்று 2009 இன் போதும் ஒரு தலைமுறை ஈழப்போராட்டத்தின் பாதிப்போடு அரசியல்/இலக்கியம்/கலைகளுக்கு வந்திருக்கின்றது. ஆனால் நாம் அவற்றை தொகுத்துப் பார்க்கவோ, விரிவாகப் பதிவு செய்யவோ இல்லை. இப்படி உதிரிகளாக ஒவ்வொருவரும் பேசுகின்றபோது மட்டுமே நமது கடந்தகால நினைவுகள் அருட்டப்படுகின்றன.
***

0 comments:
Post a Comment