கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கார்காலக் குறிப்புகள் - 136

Thursday, March 12, 2026

 

ஆதவனின் 'என் பெயர் ராமசேஷன்'

ஒரு செவ்வியல் பிரதி என்பது அதை வாசிக்கும்தோறும் புத்தம் புதுத் திசைகளை அறிமுகப்படுத்தியபடி இருக்க வேண்டும். அதுபோலவே அவை எழுதப்பட்ட காலத்தைத் தாண்டித் தோன்றுகின்ற புதுத் தலைமுறைகளிடையேயும் நீர்த்துப் போகாது இருக்க வேண்டும்.

நான் பிறப்பதற்கு முன் எழுதப்பட்ட ஓரு படைப்பாளியின் புதினங்களை  வாசிக்கும்தோறும், ஏதோ எனக்காக, என் தலைமுறைக்காக எழுதப்பட்டதாக நினைத்துக் கொள்வதுண்டு.அது ஆதவனின் 'காகித மலர்களும்', 'என் பெயர் ராமசேஷனும்' ஆகும்.

நான் என் பல்கலைக்கழகக் காலம் முடியும்தருவாயில் காகிதமலர்களை வாசித்துத் திகைத்திருக்கின்றேன். அதேயளவு நெருக்கத்தை 'என் பெயர் ராமஷேசனும்' எனக்குத் தந்திருக்கின்றது.

Uploaded Image

இரண்டுமே பதின்மங்களிலும்/இருபதுகளிலும் இருக்கின்ற இளைஞன் ஒருவனின் கதையெனச் சொல்லலாம். இரண்டுமே ஒன்றோடொன்று எங்கோ இணைந்து கொள்கின்ற கதைகள் எனவும் கருதிக் கொள்ளலாம்.

சிலநாட்களுக்கு முன் 'என் பெயர் ராமஷேசனை' மீண்டும் வாசித்து முடித்தேன். இந்நாவல் மீதான என்னுடைய ஐந்தாவதோ அல்லது ஆறாவதோ வாசிப்பாக இது இருக்கலாம். ஆனால் என் வாசிப்பில் அலுக்காக ஒரு பிரதியாகவே இன்னுமிருப்பது வியப்பாக இருந்தது. வேண்டுமெனில் இந்நாவலின் பிற்பகுதி கொஞ்சம் (திரைப்பட இயக்குநரின் பகுதி) இழுபட்டது என்று சொல்வதைத் தவிர வேறெந்தக் குறையும் இல்லை.

இந்நாவலில் வரும் ராமஷேசன் சந்திக்கும் மாலா, பிரேமா போன்ற பெண்களை ஏதோ ஒரு காலத்தில் சந்திக்காத ஆண்கள் குறைவாகவே இருப்போம். அதுபோலவே பெண்களைக் கவர்வதற்கு நாம் அணிந்திருக்கும் முகமூடிகளையும், அதற்குப் பின்னாலிருக்கும் நம் சனாதன முகங்களையும் நாமே நம்மில் பல தடவைகள் பார்த்திருப்போம்/இரசித்திருப்போம்/ வெறுத்திருப்போம். பின்னர் இதுதான் நம் அசலான முகமெனத் தெளிந்து, இந்த வாழ்வை எதிர்கொள்ளும் தைரியத்தைக் காலத்தின் நீட்சியில் கண்டடைந்திருக்கவும் செய்திருப்போம்.

ஆதவன், என் பெயர் ராமஷேசனை எழுதியபோது நான் பிறக்கவேயில்லை. ஆனால் நான் இதில் வரும் ஆண் சந்திப்பது போலவே பெண்களைச் சந்தித்திருக்கின்றேன். குழப்பங்கள் உள்ள மனிதனாக பெண்களின் உறவுகள் சார்ந்து அந்த வயதுகளில் இருந்திருக்கின்றேன். சரியான அல்லது தவறான முடிவுகளை நம் கற்பிதங்களின் நிமித்தம் பெண்கள் சார்ந்து எடுத்துமிருக்க்கின்றேன்.

ஆக இன்னமும் பிறக்காத ஒரு தலைமுறையும் இதே இருத்தலியச் சிக்கல்களை எதிர்கொள்ளுமென ஒரு பிரதி உங்களுக்காக அடுத்த தலைமுறையில் காத்துக் கொண்டிருப்பதென்பது எவ்வளவு அருமையானது.

Uploaded Image

ஆதவன் அவரது நாற்பத்தைந்து வயதில் சிருங்கேரியில் நின்றபோது துங்கபத்ரா நதியில் அடித்துச் செல்லப்பட்டவர். ஆனால் நானோ ஆதவனை அவர் தன்னைத்தானே இந்த வாழ்விலிருந்து கைவிட்டபோது அவராகவே இந்த முடிவை எடுத்திருப்பார் என்று கற்பனை செய்வதுண்டு. ஏனெனில் ஆதவனின் படைப்புக்களை வாசிக்கும்தோறும் அவர் நீரிலே அலைந்து போகின்ற ஒரு இலையைப் போன்ற மனதுடையவர் என நான் நினைப்பதுண்டு.

அவ்வாறு நீரின் போக்கில் இலை சென்று கொண்டிருந்தாலும், இலைக்கென்று ஒரு தனித்துவம் இருக்குமல்லவா? ஆனால் நீரின் போக்கில் மிதப்பதால் இலைக்கு என்றும் ஒரு கதை இருக்குமென்பதை மறந்து போய்விடுபவர்களாக நாம் இருப்போம். அவ்வாறுதான் ஆதவனுக்கு அவரளவில் அவர் நமக்கு ஒருபோதும் சொல்லாத பெருங்கதை, 'இலை' போல அவருக்குள்ளே அலைந்தபடி இருந்திருக்கும் என நான் நினைப்பதுண்டு.

என் பெயர் ராமஷேசனில் வரும் ராமுக்கு மாலா என்கின்ற அழகான பெண்ணோ அல்லது பிரேமா என்கின்ற அறிவுஜீவிப் பெண்ணோ தராதா ஏதோவொன்றை அவனது மாமியாரான் பங்கஜம் மாமி கொடுக்கின்றார். ஆனால் அவனது எல்லா அறிவுஜீவி/முற்போக்கு/புரட்சிகர ஆண் முகமூடிகளையும் அவனது தங்கை இன்னொரு ஆடவனோடு இருட்டில் திரைப்படம் பார்த்துக் கொண்டிருப்பதை அவன் காணும்போது  அவ்வளவு எளிதில் உதிர்ந்துவிடுகின்றன.  

'இந்த தடியன்களை எனக்குத் தெரியும். இவன்களுடைய கீழான எண்ணங்களும் வழிமுறைகளும் தெரியும்' என்று ராமசேஷன் சொல்வது, பிற ஆண்களைப் பற்றியல்ல, தன்னைப் பற்றித்தான் என நாம் புதினத்தின் இறுதியில் கண்டு புன்னகைக்கின்றோம். இதுவரை ராமஷேசன் பிறரை விமர்சித்ததும், தன்னைப் பற்றி உயர்வாக நினைத்துக் கொண்டவையும், இறுதியில் இந்தளவு அற்பத்தனத்துக்காகத்தானா என்று ஆதவன் சொல்ல வைக்கும்போதுதான், இப்பிரதியை வாசிக்கும் நம் ஒவ்வொருவரினது முகமூடிகள் கழன்று விழத் தொடங்குகின்றன.

அது நம்மை இன்னும் பதற்றப்படுத்தச் செய்கின்றது. நாம் எதுவுமே செய்யமுடியாது, இளமை நம் மீது கவிழ்த்திய கற்பிதங்களை நோக்கிச் சபிக்கத் தொடங்குகின்றோம்.

***

 

0 comments: