கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கார்காலக் குறிப்புகள் - 132

Thursday, March 05, 2026

 

ஒரு குடும்பத்தில் குறிப்பிட்ட பருவம் வருகின்றபோது இருபதுகளில் இளைஞர்கள் தற்கொலை செய்கின்றார்கள்; இல்லாதுவிட்டால் நாற்பதுகளில் ஆண்கள் காணாமல் போகின்றார்கள். இது காலங்காலமாக நடக்க, புதுத் தலைமுறையான பாபுவுக்கு, அவனின் காதலியான மெர்ஸியைத் திருமணம் செய்ய அச்சமாக இருக்கின்றது. ஒவ்வொரு தலைமுறையிலும் ஆண்களைப் பலிகேட்கும் 'தெய்வம்', தன்னையும் பலிகேட்டு மெர்ஸியின் வாழ்வு வீணாகிவிடுமோ என்று மெர்ஸியின் காதலைத் துறக்க ஒரு கட்டத்தில் முடிவு செய்கின்றான்.

'தேவி விலாசம்' என்கின்ற புராதன வீட்டில் நான்கு திசைகளிலும் இருக்கும் குடும்பங்களையும், அங்கிருந்த வெளியேறிய குடும்பங்களையும் பற்றிய நாவல் இது. தற்கொலைகளுக்கும், தொலைந்துபோதல்களுக்கும் 'தேவி விலாசத்தில்' இருக்கும் தெய்வத்திற்கு ஒழுங்காகக் கோயில் கட்டாததே காரணமென்று அந்தக் கோயிலைக் கட்டி பகவதியையும், பூதத்தானையும் பிரதிஷ்டை செய்து தெய்வங்களுக்கு 'சக்தி கூட்டினால்' இந்தச் சோக சம்பவங்கள் இனி நடக்காது விடுமென்று அக்குடும்பத்தின் மூத்தவர்கள் நம்புகின்றார்கள்.

Uploaded Image

கோயில் நிர்மாணம் நடக்கும்போது, 'தேவி விலாசத்து'ப் பெண்களின் கதைகளும், அவர்களோடு சம்பந்தப்பட்ட ஆண்களின் கதைகளும், அக்குடும்பத்தில் நஞ்சூறிக் கிடக்கும் சாதிய அபிமானங்களும், இந்த நச்சுவலையை அறுக்க விரும்பும் சிலரின் போராட்டங்களையும் இந்நாவல் அழகாகச் சொல்கின்றது.

தமிழக எழுத்துக்களில் புட்டு (பிட்டு) பற்றியோ, அதன் செயல்முறைகள் பற்றியோ, ஏன் தேங்காய்ப்பூ பாவித்து உணவுகள் செய்வது குறித்தோ அவ்வளவு விபரிக்கப்படுவதில்லை. இதில் புட்டுச் செய்கின்ற விதமும், அதை உருசித்துச் சாப்பிடுவது குறித்தும் எழுதப்படுவதும், அதனோடு வெவ்வேறு வகை வாழைப்பழங்கள் சேர்த்து பரிமாறப்படுவதையும் வாசித்தபோது, ஏதோ பழக்கமான நிலப்பரப்பின்/குடும்பத்தின் கதைகளை வாசிப்பது போன்ற நெருக்கம் ஏற்பட்டிருந்தது.

நம் பலருக்கு நாவல் என்பது மாபெரும் கனவுகளைக் கட்டியெழுப்ப வேண்டும் என்பதாகவும், ஒரு தெளிந்த நீரோடையாகக் கதையைச் சொல்லி, 'இதயம் பனிக்கும்' முடிவைச் சொல்லவேண்டும் என்பதாகவும் ஒரு நம்பிக்கை இருக்கின்றது. என்னைப் பொறுத்தவரை புனைவு என்பது ஒரு பயணத்தைப் போன்றது. அதன் இறுதி முடிவு என்னவாக இருந்தாலும், என்னால் ஒரு நாவலுக்குள் மனமொன்றி பயணிக்க முடிந்தால் அது எனக்கு நெருக்கமான நாவலாக ஆகிவிடும்.

புனைவுகளுக்குள் வாசித்து முடித்தபின் சொல்லக்கூடிய ஒரு தெளிவான கதை இருக்கவேண்டும் என்பதை ஒருபோதும் நான் எதிர்ப்பார்ப்பதில்லை. அவ்வாறு அறுதியிட்டுச் சொல்லக்கூடிய கதைகளை எதிர்பார்த்தால் நகுலன் உள்ளிட்ட எண்ணற்றோர் தமிழில் எழுதியவை நாவல்களே அல்ல என்றுதான் முடிவு செய்யவேண்டி வரும்.
முதலாவது நாவலிலே எவ்விதத் தொய்வு வராமலும், மொழியின் வசீகரத்தைக் கைவிடாதும் எழுதுவது எல்லோருக்கும் வாய்த்துவிடாது. இந்தப் புனைவின் முடிவு ஒரளவு எதிர்பார்க்கப்பட்டதென்றாலும், ப்ரியா தம்பி வாசகர்களைக் கைபிடித்து அழைத்துச் செல்கின்ற தேவி விலாசத்துக்கான பயணம் அருமையானது.

*

 

0 comments: