சில திரைப்பட நெறியாளர்களின் ஏதேனும் ஒரு படைப்பைப்
பார்த்தபின், அவர்களின் மற்ற திரைப்படங்களைப் பார்க்க ஆவல் வரும். அப்படி
நோர்வேஜிய/டேனிஷ் இயக்குநரான யூவாக்கிம் திரீயரின் (Joachim Trier),
'Sentimental Value' ஐப் பார்த்தபின் அவரின் மற்றத் திரைப்படங்களான
'Louder Than Bombs', 'The Worst Person in the World' போன்றவற்றைப்
பார்த்து முடித்திருந்தேன்.
திரீயரின்
திரைப்படங்களை அவ்வளவு எளிதாக ஒரே இருக்கையில் (One sitting) பார்த்து விட
முடியாது. மிகவும் இருண்ட, உளவியல்/உளவடு அலைகளுக்குள் அழைத்துச் செல்லக்
கூடியவை. திரீயர் அவரது திரைப்படங்களில் சேர்த்துக்கொள்ளும் வர்ணம் கூட
பெரும்பாலான சமயங்களில் சாம்பாலானவை. மேற்கத்தைய பனிப்பொழியும்
நாடுகளுக்குரிய இலையுதிர்காலத்துக்குரிய வர்ணமது. எனவே இயல்பாக உங்கள் மனது
திரீயரின் திரைப்படங்களைப் பார்க்கும்போது அழுத்தமும் கனமும் கூடிய
மனோநிலையை அடைந்துவிடும்.
'Sentimental Value'
இப்போது ஒஸ்கார் சிறந்த திரைப்படங்களின் பட்டியலுக்குச் சென்றதால் அநேகர்
பார்த்திருக்கக் கூடும். இத்திரைப்படத்தில் ஒரு தந்தைக்கும், அவரின் இரண்டு
மகள்களுக்கும் இடையிலான உறவைப் பற்றிய கதை என்றால், ''Louder Than Bombs'
ஒரு தந்தைக்கும் இரண்டு மகன்களுக்கும் இடையிலான உறவைப் பற்றிய கதையெனச்
சொல்லலாம்.
திரீயரின் பெரும்பாலான திரைப்படங்களில் (அவரின் முதல்படமான 'Reprise' உட்ப) வரும் பாத்திரங்கள் உளவியல் சிக்கலுக்குள் அகப்பட்டவர்களாகவும், தற்கொலை எண்ணமுடையவர்களாகவும், அதற்கு முயற்சித்தவர்களாகவும் இருப்பதை ஒரு பொதுப்பண்பானச் சொல்லிக் கொள்ளலாம்.
திரீயரின் பெரும்பாலான திரைப்படங்களில் (அவரின் முதல்படமான 'Reprise' உட்ப) வரும் பாத்திரங்கள் உளவியல் சிக்கலுக்குள் அகப்பட்டவர்களாகவும், தற்கொலை எண்ணமுடையவர்களாகவும், அதற்கு முயற்சித்தவர்களாகவும் இருப்பதை ஒரு பொதுப்பண்பானச் சொல்லிக் கொள்ளலாம்.
Sentimental
Value வரும் இரண்டு மகள்களில் ஒருவரான நோரா அப்படி தற்கொலை முயற்சி
செய்துவிட்டு தப்பி உயிர் வாழ்ந்து கொண்டிருப்பவர். அதுபோல 'Louder Than
Bombs' இல் வரும் இளைய மகன் கொனர்ட் மிகுந்த பிடிவாதமுள்ள,
பாடசாலையிலிருந்து அந்நியப்பட்டு தற்கொலை எண்ணமுடைய ஒரு பாத்திரம்.
'Reprise' வரும் இரண்டு எழுத்தாளர்களில் ஒருவர் அவரின் முறிந்துபோன காதலின்
நிமித்தம் உளவியல் நிலையத்தில் உளவடுக்காக சிகிச்சை எடுத்துக்
கொண்டிருப்பவர்.
*
*
இவ்வாறாக
திரீயரின் திரைப்படங்கள் தற்கொலை/தற்கொலை எண்ணங்களுடன் வாழ்பவர்களின்
வாழ்க்கையை மிக நெருக்கமாகப் பார்க்கின்றன. அதிலும் 'சென்டிமெண்டல்
வால்யூ'வில் தம்மை இளவயதில் விட்டுச் சென்ற ஒரளவு புகழ்பெற்ற
இயக்குநராகிவிட்ட தந்தை திரும்ப வந்து, முறிந்த தந்தை-மகள் உறவைச் சீராக்க
முயலும்போது, அந்தத் தந்தை மகளின் இடைப்பட்ட சிக்கலான வாழ்வை, முக்கியமாக
அவளின் கடந்தகால தற்கொலை முயற்சியை விளங்கிக் கொள்வதுடன் அத்திரைப்படம்
முடிவது மிக அருமையானது.
நமது வாழ்க்கைக் காலங்களில் போரோடு தொற்றுநோய்களோடு வாழ்வதைப் போல, இவ்வாறான தற்கொலைகள்/தற்கொலை சிந்தனைகளோடு வாழ்வதும் சாதாரணமாக்கப்பட்டுவிட்டதோ (normalized) என்று திரீயரின் திரைப்படங்களைப் பார்க்க ஒருவகையில் அச்சம் வரச் செய்கிறது.
அதேவேளை திரீயரின் படைப்புக்களில் மனிதர்கள் எவ்வளவு அழிவுகள்/துயரங்கள் வந்தாலும், அதைக் கடக்கின்றபோதும், கடந்தபின்னும் அதே சாதாரண மனிதர்களாகவே இருக்கின்றார்கள். நம் காலத்தில் பெருந்தொற்று வந்து மனிதர்கள் உள்ளே அடைந்தபின்னும், எதைக் கற்றுக் கொண்டிக்கின்றார்கள்? அப்படி பெருந்தொற்றைப் பார்த்த மனித சமூகம் எப்படி போர்களுக்கு இப்போது போய்க்கொண்டிருக்க முடியும்?
ஆக மனிதர்கள் கடந்தகாலத்தில் இருந்து மட்டுமின்றி, சமகாலத்தில் இருந்தும் எதையும் கற்றுக்கொள்வதில்லை என்பதைக் கண்டுகொள்கின்றோம். 'The Worst Person in the World' தனது முன்னாள் காதலன் குணப்படுத்த முடியாத புற்றுநோயால் சாகப்போகின்றான் என அறிந்து அவனை சுகம் விசாரிக்கச் செல்கின்ற காதலியிடம் 'நீ என்னை விட்டு விலகிச் சென்றபோது, உனக்கு இப்போதிருக்கும் காதலனோடு அதற்கு முன்னரே உறவு முகிழ்ந்துவிட்டதா?' என்று தேவையில்லத கேள்வி கேட்கின்றான். அவள் இனி உண்மையை மறக்கக்கூடாது என்பதற்காய் 'ஆம்' என்று சொல்கின்றபோது, அவளையும் அவளின் புதிய காதலையும் சபிக்கின்றான். ஆக மனிதர்கள் தமது இறுதிக்காலத்திலும் எதையும் எளிதில் மன்னிக்க இயலவில்லை என்பதைப் பார்க்கின்றோம்.
*
திரீயரின் திரைப்படங்களைப் பார்க்கும்போது, நாம் உறவுகளின் நிமித்தம் அவ்வளவு புனிதமாக இருக்க வேண்டியதில்லை என்பதைக் கண்டுகொள்கின்றோம். இன்னொருவகையில் இவ்வாறு புனிதமாக்கப்பட்ட உறவுகளில்தான் நாம் நிறையத் தவறுகளைச் செய்பவர்களாக இருக்கின்றோம் என்றும் புரிந்துகொள்ளலாம்.
Sentimental Value இல் வரும் நோரா, தமது தந்தையார் தாயை விட்டு சுவீடனுக்குப் போய்விட்டார் என்று கோபத்தில் இருக்கையில், எப்படி அதே நோரா தனது காதலை/உறவை, ஏற்கனவே திருமணம் செய்துவிட்ட சக நடிகனோடு ஏற்படுத்திக் கொண்டார் என்று யோசிப்பதும் சுவாரசியமானது. நமக்குள்ளிருக்கும் மனவடு/சிக்கல்கள், அதேபோன்ற சிலந்திவலைச் சிக்கல்களுள்ள உறவு/மனிதர்களைத்தான் தேடச் செய்கின்றதோ என்று ஆராய்ந்தும் பார்க்கலாம்.
'The Worst Person in the World' இல் வரும் காதலியானவள், அவளுக்கு சுவாரசியம் தந்துகொண்டிருந்த காதல் அலுப்பாகும்போதே இன்னொரு உறவுக்குள் போகின்றாள். அறிவுஜீவித்தனமான காதலனைவிட, உணர்ச்சிபூர்வமாக காதல் நிமித்தம் இருப்பவனே அவளுக்குப் பிடித்துப் போகின்றது. அவளளவில் அது சரியாகவே இருக்கின்றது. ஆனால் ஏன் அவள் அந்தப் புதிய காதலனைப் பின்னர் பிரியவும் செய்கின்றாள் என்பதில்தான் சொல்லப்படாத இன்னொரு கதை இருக்கின்றது. அந்தக் காதலன் இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்து, அவர்களின் குழந்தையைப் யன்னலுக்குள்ளால் பார்க்கும்போது அவள் உண்மையில் தேடியது காதலையா அல்லது அவளுக்கான விட்டுவிடுதலையாகும் சுதந்திரத்தையா என நாம் யோசிக்கவும் தொடங்கின்றோம்.
திரீயரின் திரைப்படங்களைப் பார்ப்பதென்பது எளிய காரியமல்ல. அது பலவித மன அலைகளுக்குள் நம்மை துரும்பு போல எற்றித் தள்ளியபடியே இருக்கும். இவ்வாறு பலவித உணர்ச்சிக்குவியல்களுக்கு நான் சென்று கொண்டிருப்பதைப் பார்த்த நண்பர் இத்திரைப்படங்களையெல்லாம் நீ இவ்வளவு கஷ்டப்பட்டுப் பார்க்க வேண்டுமா எனக் கேட்டிருந்தார். அது உண்மைதான். பார்க்காமல் இருப்பதற்கும் தெரிவு இருக்கிறதுதான். ஆனால் இப்படியான ஒரு வாழ்க்கை இருப்பதை அறிவதென்பதும் ஒருவகையில் அவசியமானதுதான். இந்த வாழ்க்கை முழுதும் எத்தனைபேரின் இருண்ட வாழ்க்கைகளை/மனவடுக்களை/தற்கொலை முயற்சிகளை நாம் கேட்டுக் கொண்டு இருக்கின்றோம்.
மேலும், நாமெல்லோரும் காதல்/நட்புகளின் நிமித்தம் கொடுத்த உறுதிமொழிக்கு ஏற்ப வாழ்ந்து விடுகின்றோமா என்ன? அப்படித்தான் திரீயரின் திரைப்படங்களும் பெற்றோர்/காதல் உறவுகளின் தவறுகளுக்கு அப்பால் அவர்களை சகமனிதராக புரிந்துகொள்ள மட்டுமில்லை, நமக்கென்று ஒரு தனித்துவமான வாழ்க்கை இருப்பதையும் மறைமுகமாக உணர்த்துகின்றன போலும்.
***





0 comments:
Post a Comment