கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கடுகுப்பூ குறிப்புகள்

Wednesday, March 04, 2026


சில எழுத்துக்கள் என்ன காரணத்துக்காய் உங்களை ஈர்க்கின்றதென்று அறியமுன்னரே உங்களை முழுதாய் வசீகரித்துக் கொள்ளும். அப்படித்தான் நான் அமலன் ஸ்டேன்லியின் புத்தம் சம்பந்தமான எழுத்துக்களை தொடர்ந்து வாசித்துக் கொண்டிருப்பேன். இந்தப் புத்தாண்டில் நான் வாங்கி வாசிக்க வேண்டுமென அதிகம் விரும்பிய நூல்களில் ஒன்று அமலன் ஸ்டேன்லியின் 'புத்தம்'.

அப்படி விரும்பிய நூலை அதன் ஆசிரியரே உங்களுக்கு அன்பளிப்பாக வழங்கினால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். அவ்வாறு அமலன் ஸ்டேன்லியால் எனக்கு வெகுமதியாகக் கிடைத்தவை அவரின் 'புத்தமும்', 'புத்த தியானக் கருவூலமும்'.

Uploaded Image

மிக மெதுவாகவும், நிதானமாகவும் வாசிக்க விரும்பும் நூல் 'புத்தம்.  கிட்டத்தட்ட எழுநூறு பக்கங்களைத் தொடுவது.

"தவத்தின் படிநிலைகளில் உயர்ந்தேற முடிந்தவர்கள் அதன் பேறுகளைப் பெற்று உய்யட்டும். எளிய மக்களுக்கு சார்புறு பண்பு, துக்கம், நிவாரணம், சீலம் என்பவற்றைப் போதித்து நல்வழிப்படுத்தலாம். எதையும் சாராத, பற்றியிராத தெள்ளமைதி, தெளிசிந்தை, பெருநோக்கு, அருநிறைவு நிலை மானுடர்க்கு வாய்க்கும். அன்பிலும் கருணையிலும் சார்ந்தூறும் மாபிரக்ஞைகொண்ட போதிசத்துவ வாழ்வு கூடுமென உய்த்துணர்ந்த அற்புத வேளையது.

புலரிச் செங்கதிரொளி காட்டு வெளியில் பனியினூடு கூர்ந்து பாய்ந்தது. அவர் தெளிந்தெழுந்தார். சம்போதி ஒளிர்ந்து மிளிர்ந்தது. இவ்வுலகம் இனி ஒருபோதும் முன்புபோல இருக்கப் போவதில்லை என்பதாகப் பறவைகள் பாடின."

இது சித்தார்த்தர் புத்தராக ஞானமடைகின்றதை 'புத்தம்' சித்தரிக்கின்ற பகுதியாகும்.

*

நான் 'Reflections of Life' 'ஐ நேரம் கிடைக்கும்போதெல்லாம் YouTubeஇல் பார்த்துக் கொண்டிருப்பவன். இந்த காணொளியைப் பார்த்து மிகவும் நெகிழ்ந்துபோய் எனக்குரிய சிறு நண்பர்கள் வட்டத்துக்குப் பகிர்ந்திருந்தேன்.

இப்படி முதிய காலத்தில் ஒருவர் இந்த வாழ்வின் பெறுமதியை மனவமைதியின் மூலம் பெறுவாரென்றால் அவர் இந்த வாழ்க்கையை வாழ்ந்திருப்பார் என்றே நம்புகின்றேன். இதில் பெர்னார்ட் ஒரு ஸென் துறவியைப் போல இயற்கை, வாழ்க்கை, மரணம் குறித்து பேசுகின்றார்.  இயற்கையின் சுழற்சியில் உயிரிகளில் மரணம் ஒரு புனிதமாக இருப்பதைப் போல, ஏன் மனிதர்களிடமில்லை, நாமேன் அதையிட்டு அஞ்சுகின்றோம் என்று அவர் கேட்க முடிவது, அவரால் இந்த வாழ்க்கையை சரியாக வாழ்ந்து கொண்டிருப்பதால் என்றே நான் நம்புகின்றேன். 

Uploaded Image

இயற்கையில் எதுவுமே perfect இல்லை, பிறகேன் நாம் அப்படியிருக்க கஷ்டப்பட்டு முயற்சிக்க வேண்டும் எனவும் கேட்கின்றார். காட்டில் பறவைகள் தமக்காக மட்டும் பாடுவதில்லை, அங்கேயுள்ள மரங்களின் பொருட்டும் அவை பாடுகின்றன என அவர் கூறுவதெல்லாம் எவ்வளவு அழகானது.


"I choose to see magic in everything.'

*
இன்று வாசித்து முடித்த புத்தகம் சஞ்சயன் செல்வமாணிக்கத்தின் '3200 கிலோமீற்றர் கதைகள்'.

சஞ்சயனை அவரின் முதல் தொகுப்பான 'படுவான்கரை - போராளிகளின் வாழ்வும் துயரமும்' என்கின்ற 'எழுநா' வெளியிட்ட நூலிலிருந்து வாசித்து வருகின்றவன் என்றாலும், என்னை அவரின் எழுத்துக்களில் அதிகம் நெருக்கமாகச் செய்தது அவர் செய்யும் பயணங்கள்தான் என்றுதான் சொல்வேன். அது பாலஸ்தீனமாக இருந்தாலென்ன, ஸ்பெயினாலென்ன, அங்கே அவர் சந்திக்கும் மனிதர்களின் கதைகள் அவ்வளவு நெகிழ்ச்சியும், நெருக்கமாகவும் எனக்கு இருக்கும்.

Uploaded Image

இந்த நூல் அவர் நான்கு முறை செய்த யாத்திரைகளைப் பற்றியது. ஸ்பெயினின் பம்பலூனா என்ற நகரத்திலிருந்து 800 கிலோ மீற்றர்கள் நடந்து போய் சந்தியாகோ டீ கொம்பொஸ்தெல்லா என்கின்ற புராதன தேவாலயத்தைச் சென்றடைகின்ற நடைபயணத்தை சஞ்சயன் வெவ்வேறு காலப்பகுதியில் செய்தபோது எழுதிய அனுபவங்களின் தொகுப்பாகும்.

இதில் சிலவற்றை அவர் ஏற்கனவே 'அம்ருதா' இதழ், முகநூல் பக்கங்களில் எழுதியபோது வாசித்திருந்தாலும், ஒரு தொகுப்பாக வாசிப்பது இன்னும் சுவாரசியம் தருவது.  இதை வாசித்து முடிக்கும்போது இப்படியொரு யாத்திரையை ஸ்பெயினினுக்குள்ளோ அல்லது வேறெங்கோவாவது நடந்து சென்று பார்க்க வேண்டும் என்கின்ற ஆவல் நிச்சயம் ஒருவருக்கு வரும்.

இன்னொருமுறை சஞ்சயன் இதே பயணத்தைச் செய்வாரென்றால், தினம் தினம் சிறு குறிப்புக்களாகப் பதிவு செய்து எழுதுவாரென்றால் இன்னும் நுணுக்கமாக இந்த யாத்திரை பதிவு செய்யப்படக் கூடும். ஏனெனில் சாதாரண பயணங்களின்போதே தினம் தினம் சுவாரசியமான அனுபவங்களுக்கு குறைவில்லாதபோது, இதை ஒரு புனித யாத்திரையாகச் செய்பவர்களிடம் எண்ணற்ற கதைகள் பரந்து கிடக்கும் அல்லவா?

டீ கொம்பொஸ்தெல்லா  செல்வதற்கான இந்த புனித யாத்திரையை தமிழில்  முதன்முதலாக பதிவு செய்தவர் சஞ்சயனாக இருக்க வேண்டும். மேலும் இந்த யாத்திரை பெரும்பாலானர்க்கு அவர்களின் மதம் சார்ந்த நம்பிக்கையுடன் இருக்கும்போது சஞ்சயன் மதநம்பிக்கையற்றவராக தனது மீட்சிக்கான பயணமாக இந்த அனுபவங்களைப் பதிவு செய்திருப்பது குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியதாகும்.

*

0 comments: