கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கார்காலக் குறிப்புகள் - 135

Monday, March 09, 2026

 


மாற்றுவழிகளைக் தேடுதல்..!
***


கிளாராவின் சில உரைகளைக் கேட்டபின் அவரின் புதிய நூலான 'Escape from Capitalism: An Intervention' வாசிப்பதற்கு order கொடுத்திருக்கின்றேன். கிளாரா ஒரு பேராசிரியராக மட்டுமின்றி நாம் இன்று 'ஜனநாயகம்', 'பொருளாதாரம்' என்று விளங்கியிருப்பதை 'கட்டவிழ்க்க' வேண்டுமென விரும்புகின்ற ஒருவர். ஒருவகையில் அவர் ஜனநாயகவாதிகளும் பாஸிட்டுக்களும் முதலீட்டிய பொருளாதாரம் நெருக்கடிக்கு ஆளாகும்போது  ஒரே நேர்கோட்டில் வரும் ஆபத்தைச் சுட்டிக் காட்டுகிறார். இதற்கான உதாரணமாக இத்தாலியின் முஸோனியையும், இங்கிலாந்தையும் இரண்டாம் உலக யுத்தம் தொடங்குவதற்கான காலப்பகுதியில் வைத்து ஆராய்கிறார்.

அதேவேளை தாராள ஜனநாயகம் (libearal demoracy) என்பதற்கும் பங்கேற்கும் ஜனநாயகம் (participatory democracy) என்பதற்கும் பெரும் வித்தியாசம் இருப்பதைப் பற்றி விவாதிக்கின்றார்.

தாராள ஜனநாயகம் என்பது நீங்கள் ஒரு தேர்தலில் வாக்களிப்பது, ஓர் அரசியல்கட்சியில் சேர்ந்து போட்டியிவது போன்றவையாகும்.

பங்கேற்கும் ஜனநாயகம் என்பது  சாதாரண குடிமக்கள், அரசு/அரசாங்க முடிவுகளில்  பங்கெடுப்பது பற்றியதாகும். அதாவது உங்கள் நகரசபை/உள்ளூராட்சி சபை எடுக்கும் திட்டங்களில் ஒவ்வொருவரும் பங்கேற்று தீர்மாங்களில் எடுப்பதாகும்.

Uploaded Image


உதாரணத்துக்கு அதிகாரத்தில் இருப்பவர்கள் எதை பட்ஜெட்டில் உள்ளடக்குவது என்பது தீர்மானிப்பதற்குப் பதிலாக, வரிகளை கட்டும் மக்களாகிய நாம் எமக்கு/எமது பிரதேசத்துக்கு என்ன அவசியமாக வேண்டும் என்பதை முடிவு செய்வதாகும்.

இன்னொருவகையில் சொல்வது என்றால் முடிவுகள்/தீர்மானங்கள் என்பவை மேலேயிருந்து வருவதைத் தவிர்த்து, கீழேயிருந்து மேல் நோக்கி முடிவுகள் எடுப்பதற்கான வெளிகளைக் கொடுப்பதாகும். இங்கேதான் இலங்கை உள்ளிட்ட பல இடங்களில் வரவேண்டுமென நான் அடிக்கடி வலியுறுத்தும் Grassroots movements முன்னணிக்கு வருகின்றன..

சாதாரண மக்களாக, agency இல்லாதவர்களாக இருக்கும் எம்மால் மேலடுக்களில் அதிகாரங்களில் உள்ளவர்களோடு 'யுத்தம் புரிவது' என்பது மலையைப் பெயர்த்தெடுக்கப் போவதைப் போன்றது. ஆனால் நாம் இருக்கும் சிறுவட்டங்களான நகரசபைகள்/உள்ளூராட்சிகளில்  எமது குரல்களை காத்திரமாக ஒலிக்க வைத்து மாற்றங்களை ஏற்படுத்த முயலாம்.

கிளாரா நம்மை இந்த முதலீட்டியம் உறைந்த மனிதர்களாக (வேலை/வீட்டுக்கு வருதல்/மீண்டும் வேலைக்குப் போதல்) என்று நாளாந்த வாழ்க்கைக்கு அப்பால் எதையும் செய்யவோ/சிந்திக்கவோ இல்லாமல் திட்டமிட்டுச் செய்கிறது. உண்மையில் நாங்கள் அப்படியான் உதிரிகள் அல்ல, அதற்கப்பால் சமூகத்திற்குப் பங்களிக்க முடியும் என்று தீர்க்கமாகக் கூறுகின்றார்.

இந்த பங்கேற்கும் ஜனநாயகம் (participatory democracy) சரியான விதத்தில் சிலவருடங்களுக்கு முன் பிரேசிலில் பல்வேறு நகர்களில்  நடைமுறைப்படுத்தப்பட்டதை கிளாரா ஓர் உதாரணமாக நமக்கு எடுத்துக் காட்டுகின்றார்.

Uploaded Image

எப்படிப் போனாலும் நாம் இறுதியில் மார்க்ஸிடமோ, கிராம்ஸியிடந்தான் பொருளாதார விடயங்கள் சார்ந்து போக வேண்டும். ஆனால் ஐக்கிய அமெரிக்கா/கனடா உள்ளிட்ட முதலீட்டிய நாடுகளில் அவர்கள் 'தீண்டத்தகாதவர்களாகவே' இருக்கின்றனர்.  பாடசாலைகளிலோ/பல்கலைக்கழகங்களிலோ அவர்களைப் பற்றிக் கற்பிப்பதில்லை எனவும் சுட்டிக் காட்டுகிறார்.

கிளாரா, கிராம்ஸியின் தொழிலாளர்கள் பங்கேற்று (participatory democracy) ஒரு தொழிற்சாலையில் எந்த அவசியமான பொருட்களை உற்பத்தி செய்வது என்கின்ற அதிகாரத்தை முன்னொருபொழுதில் கொண்டிருந்தார்களோ அப்படியான மக்கள் பங்கேற்கும் ஜனநாயகம் அமெரிக்கா/பிரிட்டன் போன்ற நாடுகளுக்கு அவசியம் வேண்டியது என்கின்றார்.

மேலும் கிளாரா பெரும்பாலான பல்கலைக்கழக இடதுசாரி அறிவுஜீவிகளை நிராகரிக்கின்றார். அவர்கள் களத்தில் செயலாற்றுவதற்கோ அவர்களின் 'மாடல்களை' பரிட்சித்துப் பார்க்கவோ முன்வருவதில்லை என்று அவர்களையும் விமர்சிக்கின்றார். நமது மொழியில் சொல்வதென்றால் அவர்கள் Arm Chair Intellectuals!

கிளாரா முன்வைக்கும் சில தரவுகள் அதிர்ச்சி தரக்கூடியவை. ஐக்கிய அமெரிக்காவில் கிட்டத்தட்ட 7 இலட்சம் பேர் வீடற்றவர்களாக (homless) இருக்கின்றார்கள். அது அல்ல அதிர்ச்சி தரும் விடயம், இதில் அரைவாசிப்பேர் வேலை செய்தும் கொண்டிருக்கின்றார்கள் என்பதுதான் திகைப்பதைத் தருவது. சாதாரண பொதுப்புத்தியில் இந்த வீடற்றவர்கள் வேலை எதுவும் செய்யாத சோம்பேறிகள் என்கின்ற எண்ணம் இருக்கின்றது. ஆனால் வேலை செய்தும் கிட்டத்தட்ட முன்றரை இலட்சம் பேர் ஒழுங்கான வீடில்லாது இருப்பதை எப்படிப் புரிந்து கொள்வது?

ஆகவேதான் கப்பிட்டலிஸ்ட் என்று சொல்லும்போது pay cheque to pay cheque வாழ்கின்றவர்களை அந்த வகைக்குள் அடக்கமுடியுமா என்ற கேள்வியையும் கிளாரா எழுப்புகின்றார். அமெரிக்காவில் கிட்டத்தட்ட 4 மில்லியன் மக்களின் செல்வத்துக்கு நிகரானதை, 19 அமெரிக்க பணக்காரர்கள் மட்டும் தமக்குள் பதுக்கி வைத்திருக்கின்றார்கள் என்கின்ற தரவுகள் எல்லாம் அதிர்ச்சி தரக்கூடியது என்றாலும், நாம் சில வருடங்களுக்கு முன் நடந்த  Occupy Wall Street ஆர்ப்பாட்டங்களை ஞாபகப்படுத்திக் கொள்ளலாம். அதில் "We are the 99%" என்று எழுப்பட்ட கோஷம், அந்த 99% வீதத்திடம் இருக்கும் செல்வத்துக்கு நிகரானதை, மிகுதி 1% பணக்காரர்கள் வைத்திருக்கின்றார்கள் என்பதுதானே கசப்பான உண்மையாகும்.

தமிழ்ச்சூழலில் நாம் மாறும் காலத்துக்கேற்ப புதிய பொருளாதார நிலைமை விரிவாகப் பேசவில்லை என்பதோடு, நாம் வளர்ந்த மூன்றாமுலக உலகநாடுகளில் கூட உலகமயமாதலின் நிமித்தம் இப்படியான 1% பணக்காரர்களைத்தான் மேலும் மேலும் உருவாக்கி நடுத்தரவர்க்கம் என்பதையே இல்லாமல் செய்வதே இன்னொரு பக்கம் நடக்கிறது.

அதைவிட உலக வங்கி, IMF  போன்ற முதலீட்டீய நிறுவனங்களில் கடன்வாங்கி. நாம் பிறந்து/ வளர்ந்த நாடுகள்  சாதாரண குடிமக்களுக்கு அடிப்படை வசதிகளையே வழங்க முடியா, மீளமுடியாகக் குழியில் தம்மை வீழ்த்திக் கொண்டிருப்பதுதான் இன்னும் அவலமானது.

கிளாரா போன்ற புதிய தலைமுறையிடமிருந்து பொருளாதார/அரசியல் பற்றிய புதிய கோணங்களை நாம் அறிவதுடன், அவரைப் போன்று களத்தில்  செயற்படுவதும் இன்னும் முக்கியமானது.

***

 

0 comments: