கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

ஒரு பெண் நாடோடியின் கதைகள்

Tuesday, July 09, 2019



Tales of a Female Nomad: Living at Large in the World  By Rita Golden Gelman
நேகமாகப் பயணங்களைப் பற்றி எழுதியவர்கள்ஒரு குறிப்பிட்ட காலம் வரை பல்வேறு நாடுகளுக்குப் பயணஞ்செய்துவிட்டுமற்றவர்களைப் போல ஒரு சாதாரண நாளாந்த வாழ்க்கை வாழ்வதற்கு வந்துவிடுபவர்களாக இருப்பார்கள். அநேகர் தமது துணையைப் பயணங்களிடையே கண்டுகொண்டவர்களாகவோ அல்லது இணையாக பயணம் செய்திருப்பின் அவர்களுக்குக் குழந்தைகள் பிறக்க அன்றாடங்களுக்குத் திரும்பியிருப்பதையோ பல பயண நூல்களில் வாசித்திருக்கின்றேன். ஆனால் ரீட்டாவின் இந்த நூல் இதுவரை நான் வாசித்த பயண நூல்களில் இருந்து வித்தியாசமானது. ரீட்டா கிட்டத்தட்ட பதினைந்து வருடங்கள் ஒரு 'நாடோடியாக' அலைந்து திரிந்ததை இதில் எழுதியதோடல்லாது இப்போதும் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் நீண்டகாலம் தங்காது தொடர்ந்து 'ஒரு உரிய முகவரியின்றி'ப் பயணித்தபடியே இருக்கின்றார்.
ரீட்டா சிறுவர்களுக்கான நூல்களை எழுதுகின்ற ஒரு எழுத்தாளர். அவரது 45வது வயதில், அவரின் குழந்தைகள் இருவரும் வளர்ந்து பல்கலைக்கழகம் செல்கின்ற காலகட்டத்தில் குடும்பவாழ்க்கையில் அலுப்பு ஏற்பட, கணவரைப் பிரிந்து முதன்முதலில் இரண்டு கிழமைகள் மெக்ஸிக்கோவிற்குத் தனியே பயணம் செய்கின்றார். இதுவரை பத்திரிகை ஆசிரியராக இருக்கும் கணவரோடு உயர்மட்டங்களில் நடக்கும் கொண்டாட்டங்களிலும்/இரவு விருந்துகளிலும் பங்குபற்றிய ரீட்டாவிற்கு அவை எல்லாவற்றிலுமிருந்தும் ஓர் இடைவெளி தேவைப்படுகின்றது. இரண்டு வாரங்கள் எனத் தொடங்கும் பயணம், கணவரின் முகந்திருப்பல்களால் இரண்டு மாதங்களாக மாறுகின்றது.
ரீட்டா ஏற்கனவே மானுடவியலில் முதுகலையும் படித்திருந்ததால், அவர் ஏனையோர் வழமையாகப் போகும் இடங்களுக்குப் போகாது, மெக்ஸிக்கோவின் பூர்வகுடிகள் வசிக்கும் Zapotec கிராமத்துக்குச் செல்கின்றார். அங்கே செல்லும்போது அவருக்கு அவர்களின் மொழி தெரியாதது மட்டுமில்லை நண்பர்கள் என்றும் கூட அங்கு எவருமில்லை. ஆனால் அங்கே போய் ஒரு மாதத்திற்கு மேலாகத் தங்குகின்றார். முதலில் அவரை ஏற்றுக்கொள்ளாது புறக்கணிக்கும் அந்த மக்கள், பிறகு அவர்களின் கலாசார முறைப்படி ஆடைகளை அணியத்தொடங்கும்போது ஏற்றுக்கொள்ளத் தொடங்குகின்றனர். இவ்வாறு முதலாவது தனிப்பயணத்தையே வித்தியாசமாகச் செய்யும் ரீட்டா மீண்டும் அமெரிக்கா திரும்போது, அவரின் கணவர் மணவிலக்குக் கேட்க, அது நிறைவேறியவுடன் ஒரு நாடோடியைப் போல பயணிக்கத் தொடங்குகின்றார்.
டுத்த பயணத்தில் குவாத்தமாலா, ஈக்குவடார், நிக்கரகுவா போன்ற பல நாடுகளுக்குப் பயணிக்கின்றார். நிக்கரகுவாவில் புரட்சி நடந்து அமெரிக்காவில் அந்தப் புரட்சி பற்றி வேறொரு கதை  சொல்லப்பட்டிருக்க, ரீட்டா அந்த மக்களுக்குள் சென்று அவர்கள் எதை உணர்கின்றார்கள் என்பதை உள்ளபடி எழுதுகின்றார். ரீட்டா நிக்கரகுவாவிற்குப் போகின்ற காலம் எண்பதுகளின் பிற்பகுதியாக இருக்கின்றது. ரீட்டா இடங்களைப் பார்ப்பதைவிட மக்களையும், அவர்களின் கலாசாரங்களையும், உணவுவகைகளையும் கற்றுக்கொள்ள ஆர்வங்காட்டுவதோடு அந்தந்த நாட்டு மக்களின் பேசுமொழியையும் கற்றுக்கொள்கின்றார்.
எங்கு போயினும் மிகவும் வறுமையான, மற்றவர்கள் அருகில் சென்று பார்க்கத் தயங்கும் மனிதர்களிடையே சென்று ரீட்டா தங்குகின்றார். அவர்களில் ஒருவராகத் தன்னை மாற்றிக்கொள்கின்றார். இதற்கு அவர் கற்றுக்கொண்ட மானுடவியல் அவரையறியாமலே உதவிக்கொண்டிருக்கின்றது. ஒருமுறை ஓரிடத்தில் கணவர் மனைவிக்கு அடிப்பதை உணர்கின்ற ரீட்டாவிற்கு இந்த விடயத்தில் எப்படி இடையீடு செய்வது என்பதற்கும் பிறரின் கலாசாரத்திற்குள் எளிதில் நுழையக்கூடாது என்கின்ற மானுடவியலில் அடிப்படைப்பண்பு நிதானமாக யோசிக்கவைக்கிறது.
இவ்வாறு ரீட்டா பல்வேறு நாடுகளுக்கு அலைந்து திரிந்ததை எழுதினாலும் என்னை மிகவும் கவர்ந்தது அவர் தென்கிழக்காசியாவுக்குச் செய்யும் பயணங்களின் பகுதியேயாகும். ரீட்டா கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் பாலியில் தங்கி வாழ்ந்திருக்கின்றார். அந்தக் காலப்பகுதியிலேயே அவர் மனிதர்கள் அவ்வளவு எளிதாக நுழையமுடியா இந்தோனேசியாக் காடுகளுக்குள் அதை வருடக்கணக்காய் ஆய்வு செய்யும் குழுவோடு சென்று ஒரங்குட்டான் குரங்குகளைப் பற்றிய மிக அற்புதமான விவரணைகளை நமக்குத் தருகின்றார். அவர் செய்கின்ற ஒவ்வொரு பயணமும் அவர் சிறுவர்களுக்குக் கதைகளை எழுதுகின்றபோது புதிய சாளரங்களைத் திறந்து விடுகின்றன.
பாலியில் அழிந்துகொண்டு போகும் அரச பரம்பரையினரின் வீட்டில் தற்செயலாக தங்க (ஒருவகையில் அது நமது சிற்றரசர்கள் போன்றது) ரீட்டா பிறகு அந்த அரச பரம்பரையின் கதையை நமக்குச் சொல்ல விரும்புகின்றார்.  அரசபரம்பரையின் கடைசி வயோதிபர் அந்த நகரிலே இருக்க அவரது பிள்ளைகளோ இந்தோனேசியாசிவின் தலைநகருக்கு வசதி வாய்ப்புக்கள் தேடி குடிபெயர்ந்துவிட்டிருக்கின்றனர். இந்த வயோதிபரும் இல்லாமல் போனால் இந்த அரசபரம்பரையின் கதையை வெளியுலகில் யாரும் அறியமாட்டார்களென ரீட்டா அதை ஒரு நூலாகக் கூட எழுத விரும்புகின்றார். ஆனால் அரசபரம்பரையின் சொல்லக்கூடாத இரகசியங்களைச் சொல்வதால் கறுப்பு மாந்தீரிகத்தை அந்த அரசரின் சகோதரர் செய்துவிட்டார என்ற அச்சத்தில் அந்தக் கதை நூலாக வெளிவருவதை அந்த அரசரே வேண்டாமென பிறகு நிறுத்திக் கொள்கின்றார். எனினும் ரீட்டா அந்த வயோதிபரைத் தனது வாழ்க்கையின் பல்வேறு விடயங்களுக்கான ஒரு ஆசானாகக் கொள்கின்றார். அந்த அரசர் இறந்துபோனபின்னும் ரீட்டா அந்த வீட்டிலேயே பல வருடங்கள் தங்கியிருக்கின்றார். 
இவ்வாறு அவர் பாலியில் இருந்தாலும் பாலி மக்கள் இன்னும் கடைபிடிக்கும் வர்ணாசிரமத்தின் படிநிலைகளைப் பற்றியும் விரிவாகக் குறிப்பிடுகின்றார். சாதியின் கடைநிலையில் இருக்கும் மக்கள் தங்களிடையேயும், தங்களின் மேல்நிலையில் இருக்கும் மனிதர்களோடும் எப்படி மொழியில் வேறுபாடு காட்டிக்கதைக்கின்றனர் என்பதையும் எழுதுகின்றார். இந்தப் படிநிலைகள் இருப்பதாலேயே அவர் பாலியில் அந்தப் பிரதேசத்து மக்களின் மொழியைக் கற்பதைத் தவிர்த்து, இந்தோனேசிய மொழியைக் கற்றுக்கொள்ளவும் விரும்புகின்றார்.
இவ்வாறே அவர் வேறு சில ஜேர்மனிய நண்பர்களோடு இந்தோனேசியாவின் அடர்ந்த காடுகள்/மலைகளுக்குள் சாகசப் பயணம் செய்கின்றார். உண்மையில் அது பப்புவா நியூகினியாவின் ஒரு பகுதி என்றாலும், 60களில் ஐநா சபை அதை அரைவாசியாகப் பிரித்து இந்தோனேசியாவுக்குத் தாரை வார்த்திருக்கின்றது. அந்தப் பூர்வக்குடிமக்கள் பப்புவா நியூகினியாவின் மண்ணிற மக்களோடும் கலாசாரத்தோடும் நெருக்கமான பிணைப்புக்கள் கொண்டிருக்கின்றபோது இந்தோனேசியாவுக்கு எந்தவகையிலும் தொடர்பில்லாத அவர்களின் நிலப்பரப்புக்களைத் தாரை வார்த்ததைக் கடுமையாக ரீட்டா இந்நூலில் விமர்சிக்கின்றார். ஒன்றுமே அறியாத மிகுந்த அப்பாவியான மக்களை இந்தோனேசியா அரசும்/பொலிசும் சித்திரவதைகள் செய்து இரண்டாந்தர மக்களாக நடத்துவதைக் கண்டு ரீட்டா அதிர்ச்சியடைகின்றார். அம்பையும் வில்லையும் தவிர வேறெந்த ஆயுதத்தையும் அறியாத அந்தப் பூர்வக்குடிகள் என்றோ ஒருநாள் தமது சந்ததிகள் போராடி இந்தோனேசியா அரசிடமிருந்து விடுதலை பெறும் என்று நம்பிக்கை கொள்கின்றனர். எனினும் ரீட்டா அந்தக் கனவு என்றுமே நிறைவேறாத கனவு என்பது மட்டுமில்லாது இந்தப் பூர்வக்குடிகளில் வளமான நிலமும், கலாசாரமும் இந்தோனேசியா அரசால் விரைவில் அபகரிக்கப்படப்போகின்றது என்பதையும் அறிந்துகொள்கின்றார்.
ரீட்டா செய்கின்ற பயணங்கள் எல்லாம் 80களின் பிற்பகுதியிலும், 90களிலும் நடைபெறுவதாகும். இன்று தொலைநுட்பம் உலகையே ஒரு சிறுகிராமமாகச் சுருக்கியபின் இப்படியான பயணங்களைச் செய்வது அவ்வளவு கடினமில்லை. ஆனால் அன்று அவ்வளவு வசதிகள் இல்லாதபோது தனித்தும், மொழிகூடத் தெரியாத நிலப்பரப்புகள் எங்கும் அலைந்தும் திரிந்த ரீட்டாவின் துணிச்சல் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியதுதான். இந்தப் பயண நூலின் மூலமாக பயணஞ்செய்வதற்கு வயது ஒரு தடை இல்லை என்பதையும் பல்வேறு சந்தர்ப்பங்களில் ரீட்டா நமக்குத் தெரியப்படுத்துகின்றார்.  வசதியான ஹொட்டல்களை விட்டு backpack ஆகத் திரியும்போது அவர் சேர்ந்து திரிகின்ற நண்பர்கள் அனைவருமே அவரை விட அரைவாசி வயதுடையவர்களாக இருக்கின்றார்கள். ஆனால் அவர்கள் ஒருபோதும் ரீட்டாவை விலத்துவதில்லை. தங்களோடு சேர்த்தே அவரையும் கூட்டிச் செல்கின்றார்கள். சிலவேளைகளில் வயதின் காரணமாக வேகமாகப் போகாதபோதும் அவருக்காக தமது பயணங்களை அவர்கள் மெதுவாக்கின்றனர். அதேபோல இன்னொரு அவதானத்தையும் ரீட்டா இந்தப் பயணங்களிடையே முன்வைக்கின்றார். முப்பது வயதுக்கு உள்ளேயுள்ள ஆண்களே நிறையப் பயணிக்கின்றார்கள். தன்னைப் போன்ற 40ற்கு மேற்பட்டவர்களில் பெண்களே தனித்துப் பயணிக்கின்றனர் என்றும், ஆண்களை அவ்வளவாகக் காணவில்லை என்றும் குறிப்பிடுகின்றார்.  சிலவேளைகளில் ஆண்களுக்கு 40களில் அலுப்பு வந்து வீட்டு ஷோபாவில் வசதியாக ஓய்வெடுத்துக்கொள்கிறார்கள் போலுமென நகைச்சுவையாக எழுதிச் செல்கின்றார்.
இது சற்று நீண்ட நூல். கிட்டத்தட்ட அவரது பதினைந்து வருட அலைதலை மிக விரிவாகச் சொல்கின்றது என்பதால் அந்தளவுக்கு நீண்டிருக்கிறது. சிலவேளைகளில் இரண்டு நூல்களாக எழுதியிருந்தால் நன்றாக இருந்திருக்குமோ என்று தோன்றியது.  ரீட்டா இஸ்ரேலுக்குப் போய் தனது வேர்களின் பகுதிகளைத் தேடுவதையும், தாய்லாந்திற்குப் போய் அவர்களின் மரபான உணவுவகைகளைப் பழகுகின்ற பகுதிகளையும் எனக்கு அவ்வளவு ஆர்வமில்லாததால் வாசிப்பில்  மிக விரைவாக நான் தாண்டிப்போய்க் கொண்டிருந்தேன்.
இந்த நூலை எழுதி கிட்டத்தட்ட இப்போது எண்பதுகளை எட்டப்போகும் ரீட்டா இன்னும் பயணம் செய்வதில் அலுக்காதவராக இருக்கின்றார் என்பது குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது. மேலும் தான் பயணிக்கும் எந்த நிலப்பரப்பு மக்கள் மீதும் தனது புரிதல்களை/அறிதல்களைத் திணிக்காது அவர்களை அவர்களின்போக்கில் ரீட்டா விளங்கிக்கொள்வதுந்தான் இந்தநூலில் இன்னும் அழகானது.
பப்புவா நியூகினியாவின் (இந்தோனேசியாவின்) ஒரு அடியாழக் காட்டுக்குள் ரீட்டா பயணித்துக்கொண்டிருப்பார். அப்போது இதுவரை வேற்று மனிதர்களைக் காணாத ஆதிக்குடிகளை இவர் சந்திக்கின்றார். மேலும் இவர் நிறமும் வேறானதாக இருப்பதால் இவரைச் சந்திக்கும் ஒரு பெண்ணும் குழந்தையும் இவரைக் கண்டு தொலைவில் பயந்துபோய் நிற்கின்றனர். ரீட்டா அவர்களை நெருங்க என்ன வழி என யோசிக்கின்றார். அவர் தனது மேற்சட்டையைக் கழற்றிவிட்டு அந்தப் பெண்ணைப் போல மார்புகளை மறைக்காது விடுகின்றார். இப்போது அந்தப் பெண்ணும், குழந்தையும் அவரின் மார்புகளைத் தடவிப்பார்த்து இவரும் தம்மைப் போல ஒரு மனிதர்தானென உணர்ந்து ஸ்நேகமுடன் சிரிக்கின்றனர்.
இவ்வாறான எளிய மனிதர்களையும், நாம் அருகில் பார்த்திராத பூர்வகுடிகளின் பழக்கவழக்கங்களையும் இன்னும் பல அற்புத தருணங்களையும் இந்த நூலில் பல்வேறு இடங்களில் காணக்கிடைப்பதால் இதை வாசிப்பது மிகுந்த சுவாரசியமாக இருக்கிறது.
......................................

நன்றி: 'காலம்' இதழ்- 53

2 comments:

J S Gnanasekar said...

அருமை

7/16/2019 02:42:00 AM
இளங்கோ-டிசே said...

நன்றி. நீங்களும் நிறையப் பயணித்திருக்கின்றீர்களென்பது உங்கள் வலைத்தளத்தைப் பார்க்கும்போது தெரிகின்றது.

7/17/2019 09:34:00 AM