அவ்வப்போது அதிசயங்கள் நிகழ்வதுபோல இன்று
விடிகாலையில் துயில் எழும்பியதால் சூரிய உதயம் பார்க்கலாம் என்று எலியிட்ஸ்
கடற்கரைக்குச் செல்ல ஆயத்தமானேன். ஓட்டோ ஓடிக்கொண்டு வந்த தமிழ்ச்செல்வி அக்கா, ‘ விடிகாலையிலே ஊபரில் என்னைய்யா கிரடிட் கார்ட்டைப் போட்டிருக்கிறாய் காசிற்கு மாற்று இல்லாவிட்டால்
சவாரியை நடுரோட்டில் நிறுத்திவிடுவேன்’ என்று வெருட்டினார். தமிழ் ஒரு அமிழ்தமொழி (நன்றி: தமிழ்நாட்டு வீட்டு
வசதி வாரியம்), ‘அக்கா நான் காசாகவே ஊபர் கேட்டதை விட 50
ரூபாய் கூட்டியே தருகிறேன், சூரிய உதயத்திற்கு மட்டும் அழைத்துச் செல்லாது விடாதீர்கள்’ என்று மன்றாடிக் கேட்டுக்
கொண்டேன்.
எங்களைத்தான்
இலக்கியத்துக்கு இழுத்துவந்து கெடுத்தது காணாதது என்று, தமிழகத்தில் ஒரளவு பார்க்கக் கூடிய திரைப்படங்களை எடுத்துக் கொண்டிருந்த
மிஷ்கினையும் பாடகராக்கிக் கெடுத்து விட்டீர்களா எனக் கேட்டேன். 'டேய் சும்மா இருடா, மிஷ்கின்
இசையமைக்கும் படத்தில் நானும் பாடுகின்றேன் என்றார். எப்படி அது ஆ..ஈ..ஊ எனறு மாயா
என்றப் பாடகியை அனிருத் 'விக்ரம்' படத்தில் பாடப் பயன்படுத்தியது போலவா எனக் கேட்க விரும்பினேன்.
கேட்கவில்லை.
நான் காணொளி கதைசொல்லல்/புத்தக விமர்சனங்களுக்கு மறுபுறத்தில் இருப்பவன். ஆனால் பவா போன்றோர்க்கு மிகப்பெரிய காணொளி வாசகர்கள் இருப்பதை நானறிவேன். புத்தகங்களை அவ்வளவு வாசிக்கப் பிரியப்படாத பலருக்கு இவ்வாறே பல படைப்பாளிகள் அறிமுகமாகிக் கொண்டிருக்கின்றனர். மாற்றம் என்பதே மாறாதது. எழுத்தாளர் ஒரு படைப்பை எழுத, அவரைத் தவிர அந்த நூலோடு தொடர்புடையவர்க்கு ஏதேனும் வெகுமதிகள் கிடைப்பது போல இதுவென நினைத்துக் கொண்டேன். இமையமும் அந்த மேடையில் அடுத்துப் பேச இருந்தார். சென்றமுறை ஏனடா உன் புத்தக வெளியீட்டுக்கு அழைக்கவில்லை என குறைபட்டுக் கொண்டார், இம்முறையும் அவரை அழைக்க மறந்துவிட்டேன் என்பதும் நினைவுக்கு வந்தது.
புத்தகக் கண்காட்சியில், ஏதோ புலம்பெயர் இலக்கியவாதிகள் தமிழகப் பரப்பில் அதிகம் ஆதிக்கம் செலுத்துவதாக ஓர் ஈழத்துப் படைப்பாளி பிறரிடம் குறைபட்டுக் கொண்டதாய் ஒரு நண்பர் சொல்லக் கேட்டேன். பின் அமைப்பியல்/ பின் நவீனத்துவம் அறிந்த ஒருவர் இந்த இருமைகளை/ துவிதங்களை நிராகரிக்கவே செய்வர். தமிழ் என்ற பெருங்கடலில் புலம்பெயர் இலக்கியம் ஒரு சிறு துளி. அதுவெல்லாம் தமிழுக்குத் தலைமை தாங்கும் என்ற எஸ்.பொவின் கனவே உதிர்ந்து நெடுங் காலமாயிற்று.
50 வருடங்களுக்கு முன் கொழும்பு ஸாகிராக்
கல்லூரியில் நடந்த முற்போக்கு அணியினரின் மாநாட்டில் அவமதிக்கப்பட்டு, சூடோடு சூடாக மட்டக்களப்பில் தமிழ்விழாவெனப் பல படைப்பாளிகளை
ஒருங்கிணைத்து ஆரவாரத்துடன் எஸ்.பொ,
தன் எதிர்ப்பை நிகழ்த்திக் காட்டினார். பின்னர் நற்போக்கு இலக்கியத்துக்கு ஒரு
கொள்கை விளக்க நூல் கூட
அவர் வெளியிட்டும் இருந்தார். புலம்பெயர்ந்தவர்கள் அந்தளவுக்கு
ஆளுமையுடையவர்களாகவோ, தொடர்ச்சியாகவோ இயங்காதபோது புலம்பெயர்
இலக்கியம் தமிழகச் சூழலில் ஆதிக்கம் செலுத்துகிறது என்பது எவ்வளவு வலுவான வினா
என்பது கேள்விக்குரியது. எனினும் எல்லா வகையான உரையாடல்களும் நடப்பது நல்லது.
அதுவே அதிகாரங்கள் ஓரிடத்தில் குவிவதைக் குலைக்கச் செய்பவை.
புத்தகக் கண்காட்சியில் 'அடையாளம்' சாதிக்கை நீண்ட வருடங்களுக்குப் பிறகு
சந்தித்தேன். எனது முதலாவது கவிதை
நூலான ‘நாடற்றவனின் குறிப்புகள்’ அவரிடமிருந்தே வெளிவந்தது. நான் எழுத
வந்த காலங்களில் 'அடையாளம்', ' விடியல்' போன்றவற்றுக்கு பெரும்
மதிப்பிருந்தது. அவர் அன்று தன் விருப்பில் அனுப்பி வைத்ததால் "ஏலாதி"
இலக்கிய விருது அந்தமுறை என் தொகுப்புக்கும், தமிழச்சி தங்கபாண்டியனின் 'வனப்பேச்சி'க்கும் கிடைத்திருந்தது. ஏதேனும் புதிய நாவல் எழுதுங்கள்,
எங்களிடம் நல்ல எடிட்டர்கள் இருக்கின்றார்கள்.
நன்றாகக் கொண்டு வரலாம் என்றார். முயற்சிக்கின்றேன் எனச் சொல்லவும் பயமாக
இருந்தது. நமது ப்யூகோவ்ஸ்கி "Don't try" என்று தன் கல்லறையிலேயே எழுதி வைத்துவிட்டுப் போய்விட்டான் அல்லவா?
சாதிக், ஒருநாள் மதியமோ இரவோ சாப்பிடப் போவோம் நிச்சயம் வரவேண்டும் என்று
கேட்டுக் கொண்டார். புத்தக வெளியீடுகளை விட விருந்துண்ணலே முக்கியம், அதைத் தவறவிடமாட்டேன் எனச்சொல்லி அவரிடமிருந்து விடைபெற்றேன். கூடவே
கண்காட்சியில் என்னோடு அலைந்து கொண்டிருந்த நண்பர், நீ எல்லோராலும் அணுக முடியாது ஆமை போல ஓட்டிற்குள் சுருண்டு
கொள்கின்றவன், ஆனால் பத்தினாதன், 'காலம்' செல்வம், 'அடையாளம்' சாதீக், தளவாய் சுந்தரம் போன்ற சிலரோடு பேசும்போது மட்டும் ஓர் உயிர்ப்பு உன் உரையாடல்களில்
வந்துவிடுகின்றதென்றார். அப்படி இருப்பின் எனது சென்னை கிரஷ்கள் (எனக்குத்தான்
அவர்கள் கிர்ஷ்கள், நான் அவர்களுக்கு இல்லை), அழைத்து அவர்களோடு மெரீனா பீச்சில் கடலை கொறித்துக் கொண்டிருப்பேனே.
அதுதான் நடக்கவில்லையே, அணில் படமா, ஆமைப் படமா முதலில் கவிழ்ந்தென்ற முகநூல் வெட்டி விவாதங்களில்
சிக்கியிருக்கின்றேன், பார்க்கத் தெரியவில்லையா எனச்
சலித்துவிட்டு பிரியாணிக் கடையைத் தேடத் தொடங்கினேன்.
இன்றைய ஆண்டிரியா ஆனாலென்ன, அஞ்சலி பட்டீலாலென்ன, எப்போதும்
இருக்கும் என் நித்திய காதலி அஸினுக்கு சேர நாட்டுப் பராம்பரியத்தில் இருந்து
வந்தவென நம்புகின்ற ஒருவனின் பொங்கல் வாழ்த்து -அனைவர்க்கும்- உரியதாகட்டும்.
**************
(Jan 17,
2023)
0 comments:
Post a Comment