‘யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற திரைப்படத்தை நேற்றுப் பார்த்தேன். அந்தத் திரைப்படம்
உருவாக்கப்பட்டதில் பல அபத்தங்கள் இருக்கின்றன. அத்துடன் இத்திரைப்படம், தொ.பத்தினாதனின் நூல்களில் இருந்து உருவப்பட்ட பகுதிகளைக் கொண்டு
உருவாக்கப்பட்டதென்கின்ற பத்தினாதனின் குற்றச்சாட்டுக்களும் முக்கியமானவை. இதைப்
போன்றே எழுதப்பட்ட உண்மைக்கதையிலிருந்து அப்பட்டமாக உருவாக்கப்பட்டது ‘அயோத்தி’ என்ற திரைப்படம் என்று
சொல்லப்பட்டாலும் அதற்கு இறுதியில் என்ன நடந்தது என்பதை நாமறிந்தால்
தொ.பத்தினாதனுக்கு என்ன தீர்ப்பு இகொடுக்கப்படும் என்பதும் எளிதாக விளங்கும்.
ஆக, நான் இந்தத் திரைப்படத்தை அழகியல்/அரசியல்ரீதியாக உள்ளே சென்று இப்போது பார்க்கப் போவதில்லை. ஆனால் இத்திரைப்படத்தில் ஒரளவுக்கு போரும், அகதிகளின் வாழ்க்கையும் சொல்லப்பட்டிருப்பது ஒருவகையில் எனக்கு முக்கியமாகத் தெரிந்தது. தமிழகத்தில், முக்கியமாக திரைப்படங்களில் ஈழத்து அகதிகளின் கதையாடல் (Discourse) முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டவை. அதை மீறி ஈழத்தவர்களின் கதையைச் சொல்கின்றோம் என்று வந்த திரைப்படங்களைப் பார்த்தபோது (‘நந்தா’ தவிர்த்து), ‘ஆளை விடுங்கடா சாமி’ என்று, நீங்கள் எங்கள் கதையைச் சொல்லாமல் விட்டாலே போதும் என்று நம்மைக் கூற வைத்தவையே அதிகம்.
‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ அபத்தமாய் எடுக்கப்பட்டாலும், அதில் இன்னமும் அகதிகளுக்கு தமிழகத்தில் இருக்கும் சிக்கல்களை திரையில் சொல்ல முயல்கின்றது என்பது கவனத்திற்குரியது. ஒரளவுக்கு தமிழக பொலிஸ்/கியூ பிராஞ்ச் எப்படி அகதிகளைச் சுரண்டுகின்றார்கள் என்பதை இது இயன்றவளவுக்கு காட்சிப்படுத்துகின்றது. ஏதாவது ஒரு நாட்டின் குடியுரிமை உள்ளவர்க்கு இருக்கும் Privilegeகளில் எதுவும் இந்த அகதிகளுக்கு இல்லையென்று நம்மைக் கொஞ்சமேனும் குற்றவுணர்ச்சியடையச் செய்கிறது.
நான் இத்திரைப்படத்தை கொழும்பில், இப்போதும் மே 18 நினைவுதினத்தில் கொல்லப்பட்ட மக்களை அமைதியாக நினைவுகூர முடியாத (பொரளையில் சிங்கள இனவாத அமைப்புக்கள் இந்நிகழ்வை பொலிஸ்/இராணுவ துணையுடன் கலைக்கின்ற காலகட்டத்தில்), ஒரு தலைநகரத் தியேட்டரில் இருந்து இறுதிப் போரின் சில காட்சிகளையும், வன்னியிலிருந்து தப்பிப் போகும்போது இலங்கை இராணுவத்தால் ஒருவனின் பிடறியில் பிஸ்டல் வைக்கப்பட்டு கொல்லப்படுவதையும், ஒரு பெண் போராளி கைகள் இரண்டையும் இழந்தபோது, இனி இராணுவத்தால் கைப்பற்றப்படப் போகின்றேன் என்ற நிலை வரும்போது, இந்த நாயக சிறுவனிடம் சயனைட்டை என் வாயில் வைத்துவிடு என்று கதறவதையும் பார்க்க முடிகின்றது என்பதுதான் என்னளவில் முக்கியமானது.
ஏனெனில் இன்னும் கூட, இலங்கைக்குள் ஈழப்படுகொலைகள் சம்பந்தமான புகைப்படங்களோடோடு, முகப்பு அட்டைகளோடோ வருகின்ற எந்தப் புத்தகத்தையும் உள்ளே நுழைய விடுவதற்கு இலங்கை அரசுக்கு தயக்கங்கள் உள்ளன. பல நூறு கேள்விகள் கேட்டே சுங்கத்திலிருந்து வெளியே எடுக்க அனுமதி தருகின்ற கதைகளையே நாம் அடிக்கடி கேட்டபடி இருக்கின்றோம்.
இதனோடு சம்பந்தப்பட்டும்/படாத மாதிரி ஒரு விடயத்தை, நமது செல்வத்தாரின் (செல்வம் அருளானந்தம்) ‘பனிவிழும் பனைவளம்’ வாசித்துக் கொண்டிருந்தபோதும் உணர்ந்தேன். இந்த நூல் யாழில் வாழும் ஓருவனின் கதையைச் சொல்லத் தொடங்கி, ஒரு காதல் முறிவை மறக்க வேலையொன்றை எடுத்து மன்னாருக்கு 1970களின் பிற்பகுதியில் செல்கின்ற கதையைச் சொல்லி, பின்னர் அவன் அகதியாக ஜேர்மனிக்குப் புலம்பெயரும் அவலக் கதையைச் சொல்வதாக மாறுகின்றது. செல்வத்தாரின் மூன்று நூல்களும் அரசியல் என்று வரும்போது கிட்டத்தட்ட ஒரேவிதமான 'அப்படியும் இருக்கலாம், இப்படியும் இருக்கலாம்' என்கின்ற மேலோட்டமான கருத்துக்களை பாத்திரங்களின் உரையாடல்களின் மூலம் தொடர்ந்து இந்தப் புத்தகத்திலும் சொல்லிக்கொண்டிருப்பது சற்று அலுப்பைத் தருகின்றது. ஆனால் இதன் முக்கியம், ஏனைய எந்தப் புலம்பெயர் நூலிலும் இல்லாதவளவுக்கு ஈழத்து சாதியத்தின் கொடுமையைத் தொடர்ந்து இடைவெட்டிச் சொல்கின்றது என்பதில் இருக்கின்றது. அத்தோடு அவற்றை எப்படி இந்த மாந்தர்கள் கடந்து செல்கின்றார்கள் என்பதும் கவனத்திற்குரியது. ஒருவகையில் சல்மா ஆண்களைப் பார்த்து, ‘எல்லாப் புரிதல்களுடனும் விரிகிறது என் யோனி’ என்று எழுதியதைப் போல, ‘பனிவிழும் பனைவளம்’ நூலின் கதைசொல்லி இவ்வாறு ஆதிக்கசாதியினரைப் புரிந்து கொள்ள முயல்கின்றான்.
ஈழத்தில் போர் நிகழ்ந்து முடிந்து 15 ஆண்டுகள் இப்போது தொடங்கும்போதும் கூட, நிம்மதியாக அவர்களை நினைவுகூர முடியாத நிலையே இருக்கின்றது. அப்படிக் கொல்லப்பட்ட மக்களை எங்கும் நினைவுகூர வெளிகளை உருவாக்காமல், அவர்கள் அதன்மூலம் ஆற்றுப்படுத்தி தங்கள் உளவடுக்களை இல்லாமற் செய்ய முயலாமல், இன்றைய தொங்குநிலை ஜனாதிபதி அதேநாளில் இராணுவத்தின் ‘வீரர்களின் போர் வெற்றிவிழா’வில் பெருமிதத்தோடு கலந்துகொள்கின்றார்.
அதைவிட அபத்தமாய் கனடாவின் பிரதமர் மே 18ஐ ஒட்டி வெளியிட்ட அறிக்கையில் இன அழிப்பு (genocide) 2009இல் இலங்கையில் நிகழ்ந்தது என்று சொன்னதற்காய் இந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ‘கடுமையாக’ கனடாவின் இலங்கைக்கான அம்பாஸிடருக்கு எச்சரிக்கை விடுத்தாரென இங்குள்ள சிங்கள/ஆங்கிலப் பத்திரிகைகள் எழுதிக் குதூகலிக்கின்றன. இதன் குரூரநகைச்சுவை என்னவென்றால், அன்று இனப்படுகொலை நடைபெறவில்லை, போர்க்குற்றங்கள்தான் இராணுவத்தாலும், புலிகளாலும் நடந்ததென்று ஐ.நாவின் அறிக்கையையே இலங்கையில் வெளிவிவகார அமைச்சர் உசாத்துணைக்கு இந்த அறிக்கையில் எடுத்தாள்கின்றார். அன்பரே, இனப்படுகொலை என்பதோ, போர்க்குற்றங்கள் என்பதோ ஒரு சொல்தானே, அதற்கான வரைவிலக்கணங்களை மேற்குலகங்கள் தங்கள் வசதிப்படி கொடுத்து வைத்திருப்பதை, பின்னர் நாம் ஆராய்வோம்.
போர்க்குற்றங்கள் அரசு, புலிகள் என்ற இரண்டு தரப்பாலும் நடத்தப்பட்டபோது பாதிக்கப்பட்டது யார்?அப்போது இறந்த 50,000-70,000 மக்கள் எந்த நாட்டின் குடிமக்கள்? போர்க்குற்றங்கள் செய்ததாகச் சொல்லப்பட்ட ஒரு தரப்பான புலிகள் அன்றே அழிக்கப்பட்டுவிட்டார்கள். யாருக்கு இப்போது பொறுப்புக்கூறும் கடமையுள்ளது. புலிகள் என்ன இறையாண்மையுள்ள ஓர் அரசா? அவர்களா இந்த 50,000 இற்கு மேற்பட்ட மக்களை அழித்தார்கள்? இந்த நாட்டின் குடிமக்களாக இருந்த அந்தப் பொதுமக்களின் படுகொலையில் அரசின் கரங்கள் இரத்தக்கறை படவேயில்லையா? அவர்களின் உறவுகள், சுற்றத்தார், நண்பர்களுக்கு நீங்கள் எந்த ஆறுதலைக் கொடுத்தீர்கள்? இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்திற்கு என்ன செய்து கொண்டிருக்கின்றீர்கள்? போன்ற எண்ணற்ற கேள்விகள் நம்மிடையே இருக்கின்றன.
இம்முறை மட்டுமில்லை, கடந்த சில ஆண்டுகளாக கனடா அரசு இலங்கையில் நடந்தது இனப்படுகொலைதான் என்று அறிக்கை வெளியிட்டபடிதான் இருக்கின்றது. மே மாதத்தில் ஒரு வாரத்தை இலங்கையின் இனப்படுகொலை வாரம் என்று கனடாவில் அறிவித்து கனடாவில் சில மாகாண/நகராட்சி மட்டங்களில் அனுட்டித்து விழிப்புணர்வு செய்யவும் அங்கே செய்கின்றார்கள். அது சரி சென்ற வருடம் ஏன் நீங்கள் இப்படி கனடாவிற்கெதிராகப் பொங்கவில்லை? சென்ற வருடம் அரகலியா போராட்டம் காலிமுகத்திடலில் நடைபெறாவிட்டால், உங்களுக்கு இந்தச் சந்தர்ப்பம் இப்போது வந்திருக்குமா என்ன?
அன்புள்ள இறையாண்மை இலங்கை அரசின் அமைச்சர்களே, நீங்கள் போராடவேண்டியது மேற்குலகங்களோடு அல்ல, உங்கள் சொந்த மக்களோடுதான். அவர்களுக்கு நீங்கள் ஆறுதலும், நிறைவான ஆட்சியும் கொடுத்தால் ஏன் மேற்குலகத்தான் இங்கே வரப்போகின்றான். எங்கள் மக்களை இந்த மேற்குலகம் துவித நிலைகளுக்கு (polarization) தள்ளுகின்றது என்று ஏன் நீங்கள் புலம்பவேண்டும். நல்லாட்சியும், மீளிணக்கமும் சிறப்பாக நடைபெறுமாக இருந்தால், மேற்குலகம் இடையூறு செய்வதை, அரசுக்கு முன்னர் அம் மக்களே பொங்கியெழுந்து ‘அந்நியனே உனக்கென்ன வேலை எம் நாட்டில்’ என்று சொல்லியிருக்கமாட்டார்களா என்ன?
ஆகவே ஆகக் குறைந்தது முதலில் நடைபெற்ற இனப்படுகொலைகளுக்கோ, போர்க்குற்றங்களுக்கோ மனச்சுத்தியோடு அம்மக்களிடம் மன்னிப்புக் கேட்டு, அழிவுகளுக்கான பொறுப்பை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் கூட, அவர்கள் இழந்த உறவுகளுக்காக நிம்மதியாக அழுவதற்காவது அவர்களை இப்போது விடுங்கள்.
'பனிவிழும் பனைவளத்தில்' வரும் ஒருபகுதி இது, இதை வாசிக்கும்போது நீங்கள் இந்நாட்டு மக்களுக்கு உடனடியாகச் செய்யவேண்டியது என்னவென்பதாவது புரியட்டுமாக!
ஏனெனில் நானும் அன்று இந்நிகழ்வில் ஓர் சாட்சியாக அங்கேயிருந்தேன்.
"முள்ளிவாய்க்கால் பேரவலம் முடிந்த அந்த மே மாதத்தில் 20ஆம் திகதி நான் வாழும் பட்டணத்துப் பாராளுமன்றத்துக்கு அருகே பெருமளவில் தமிழர் கூடி காற்றாகிப் போன இலட்சக்கணக்கான தங்கள் உடன்பிறப்புகளுக்கு அஞ்சலி செய்துகொண்டிருந்தனர்.
நானும் என் நண்பர்கள் சிலரும் அங்கு போயிருந்தோம். இவ்வளவு பெருந்தொகையில் தமிழர் கூடிப் பெருமூச்சுகள் விட்டும் பெரும் குரல் எழுப்பி அழுததையும் என் வாழ்வில் நான் மறக்க முடியாதது.
அது கடும் துயர் கவிந்த பெரும் இரவு. இந்த நாட்டு பொலிஸார் குதிரைகளிலும் மோட்டார் சைக்கிளிலும் சுற்றிவர நின்றார்கள். மக்களோடு மக்களாகக் கலந்தும் நின்றார்கள்.
எங்கோ தொலைதூரத்தில் இருந்து தங்கள் நாட்டில் அடைக்கலம் தேடி வாழ வந்த மக்களின் துயரில் பங்குபற்றுவதைப் போல எங்கும் அவர்கள் அமைதியாக நின்றுகொண்டிருந்தார்கள்.
மனம் கனத்தது. நான் என் நண்பர்களை விட்டு நழுவிப்போய் ஒரு மரத்தின் கீழ் நின்றேன்.
என் உறவுகளை நினைத்தேன். நான் பிறந்து வாழ்ந்த என் ஊரை நினைத்தேன். அல்பிரட் அண்ணனின் மகள் மல்லிகாவையும் கார்க்கார இராயப்புவையும் நினைத்துப் பெரும் குரல் எடுத்து அழுதேன். என் அழுகை அங்கு புதினமாகப் பார்க்கப்படவில்லை. எல்லோரும் அழுதுகொண்டிருந்தார்கள்.
என் பின்புறமாகத் தோளில் ஒரு கை விழுந்தது. மறுகை என்னை ஆதரவோடு அணைத்தது, திரும்பினேன். ஒரு கறுப்பினப் பெண் பொலீஸ் அதிகாரி கருணை ததும்பும் விழிகளுடன் என்னைப் பார்த்தாள்."
(ப.230)
***************************
(May 26, 2023)
0 comments:
Post a Comment