கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கார்காலக் குறிப்புகள் - 14

Saturday, July 22, 2023

 "விடுதலை" - சிறு குறிப்புகள்



'விடுதலை' வன்முறை சார்ந்து எனக்கான திரைப்படம் அல்ல. தியேட்டரில் இதைப் பார்த்திருக்காவிட்டால் சிலவேளை இதைப் பார்ப்பதைப் பின்னர் தவிர்த்திருக்கக் கூடும். வெற்றிமாறனின் 'விசாரணை' யையே நான் இன்னும் பார்க்கவில்லை. அதற்குக் காரணம் நான் கேட்டு/பார்த்து வந்த அந்த "யதார்த்த" வன்முறை. "விடுதலை' யிலும் நான் கண்மூடிக் கடந்த காட்சிகள் சில உண்டு.

இத்திரைப்படம் குறித்து பின்னர் விரிவாக கருத்துச் சொல்லவேண்டும். ஜெயமோகனின் கதையான "துணைவனி"ல் இருந்து விரித்து, அது சார்ந்து, ஆனால் அதுவில்லாத ஒரு கதையாக இதை வெற்றிமாறன் எடுத்திருக்கிறார். "துணைவன்" எப்போதோ வாசித்தது; அதன் அடிச்சாரம் நினைவிலுண்டு, ஆனால் சம்பவங்கள் மறந்துவிட்டன. இப்படத்தில் காட்சிப்படுத்தும் வன்முறையையும், பெண்கள் மீதான பாலியல் வன்புணர்வுகளையும் ஜெயமோகனின் இந்தியத் தேசிய மனம் ஒருபோதும் எழுத்தில் முன்வைக்க ஒப்புக்கொள்ளாது. ஆகவேதான் நாமெல்லாம் உயிருள்ள சாட்சியங்களாக இன்னமும் இருக்கவும், ஜெமோவின் நெருங்கிய நண்பர்களாக ஈழத்தமிழர்கள் இருந்தும், எம்மை அது எவ்வளவு காயப்படுத்தும் என்கின்ற சிறு பிரக்ஞையுமின்றி, இந்திய இராணுவம் ஈழத்தில் பாலியல் வன்புணர்வே செய்யவில்லை என்று எழுதும் மனம் அவருக்கு வாய்த்தது. அவரல்ல, அப்படி தேசியப் பித்துப் பிடித்த பல படைப்பாளிகள் தமிழகத்தில் இருக்கின்றனர். இவர்களுக்கு பாதிக்கப்பட்டவர்களின் trauma பற்றி தனியே வகுப்பெடுக்க வேண்டும்.

"விடுதலை" பல படைப்புக்களின் பாதிப்பாக வந்திருக்கிறது. ஆனால் எனக்கு இதன் பல காட்சிகளைப் பார்த்தபோது பாலமுருகனின் " சோளகர் தொட்டி"யே நினைவுக்கு வந்தபடி இருந்தது. தமிழக சூழலில் தமிழக பொலிஸ்/இந்திய இராணுவம் செய்த வன்முறை/பாலியல் வன்புணர்வுகள் குறித்து அவ்வளவு தீவிரத்தோடும், உக்கிரத்தோடும் எழுதப்பட்ட ஒரு நூல் 'சோளகர் தொட்டி'.  அதை வாசித்துவிட்டும், யாரேனும் ஒருவர் தமிழக பொலிஸ்/இந்திய இராணுவம் குறித்து பெருமைகள் பேசினால், ஒருநாள் கர்மா உங்களை இரட்சிக்கட்டும் என்று அவர்களுக்கு சொல்வதைவிட வேறொரு வழியும் நமக்கு இல்லை.

'விடுதலை' நிறைய உரையாடல்களை உருவாக்கக்கூடிய ஒரு படம் என்பதில் சந்தேகமில்லை. வெற்றிமாறன் அதை genuine ஆகவும் எடுக்க முயற்சிக்கின்றார். என்னை உறுத்திய விடயம் என்னவெனில் இந்தக் கதையை ஒரு அப்பாவிப் பொலிஸினுடாக மட்டும் நகர்த்தியது. உண்மையில் எந்தப் பொலிஸாக இருந்தாலும் அவர்களுக்கு agency இருக்கிறது. ஒருவர் "காக்கிச்சட்டை" யைப் போட்டவுடன், அவருக்குரிய agency எப்படியோ வேலை செய்யத் தொடங்கிவிடுகின்றது. காக்கிச் சட்டையைக் கழற்றியவுடன், அவர் சாதாரண மனிதர். ஆனால் அந்தச் சட்டையுடன் ஒருவருக்கு அளிக்கப்படும் அதிகாரம் பற்றி கேள்வியில்லாது ஒரு பாத்திரத்தை நாம் படைக்கமுடியாது. ஆகவே சூரியின் மிக மிக நல்ல பொலிஸ் பாத்திரச் சித்தரிப்பு எனக்கு சற்று எரிச்சலூட்டியது.

அதேவேளை இந்தப் படத்தின் தீவிரத்துக்கு 2 முக்கிய காட்சிகள் வலுவில்லாது இருந்தது போலவும் தோன்றியது.

(1) ஒரு சாதாரண நிலையில் இருக்கும் பொலிஸ்காரரின் பேச்சைக் கேட்டு, அந்தத் தகவலை உறுதிப்படுத்தும் வேவுகூடச் செய்யாது, உடனேயே ஒரு பெரும் படையை வாத்தியாரைப் பிடிக்க இறக்குவது.

(2) வாத்தியாரின் குழுவினர், பொலிஸ் சூரிக்கு அவர்கள் இருக்கும் இடம் தெரிந்தபின்னும் (எப்போதாவது ஆபத்து வரலாம்), அதே இடத்தில் தொடர்ந்து தங்கியிருப்பது.

எனினும், தமிழ்ச்சூழலில் பொலிஸுக்குள் இருக்கும் அதிகார மிதப்பு, ஊழல், சித்திரவதைகள், அவர்கள் பெண் உடல்கள் மீது நிகழ்த்தும் வன்முறைகள் என எல்லாவற்றையும் அதே வீரியத்துடன் முன்வைப்பதால் 'விடுதலை' கவனிக்க வேண்டிய ஒரு திரைப்படமே.


************


(Apr 01, 2023)

0 comments: