கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

யாழ்ப்பாணம்

Friday, July 07, 2023

 

யாழில் நிற்பதற்கு இம்முறை புதியதொரு ஹொட்டலைத் தேர்ந்தெடுத்தேன். அங்கே நின்ற இரண்டு நாட்களுக்குள் மூன்று அறைகள் மாற்றப்பட்டிருந்தேன். அவ்வளவு குழறுபடிகள். அவர்கள் 'Booking.com' இல் சொல்லியபடி அங்கே வசதிகளும் இருக்கவில்லை. எங்கெங்கோ எல்லாம் அலைந்தவனுக்கு இதெல்லாம் பெரிய விடயமில்லை. ஆனால் என்னைப் பார்க்க நண்பர்கள் வந்தபோது புதிய விதிகளை விதித்தார்கள். நீங்கள் எனக்கு சொல்லப்பட்ட அறையையோ, குறிப்பிட்ட வசதிகளையோ செய்து தரவில்லை, அப்படியிருந்தும் அமைதியாக இருந்தேன், ஏன் இப்போது மட்டும் என் நண்பர்கள் பார்க்க வரும்போது தடுக்கின்றீர்களென அவர்களோடு கொஞ்சம் எகிறினேன்.


இவ்வாறு கட்டுநாயக்கா எயார்போட்டில் என் லக்கேஜ்ஜை எடுத்துவிட்டு வெளியே வரும்போது என்னை மட்டும் ஒருவர் தடுத்துவிட்டு, பெட்டிகளைத் திறக்கச் சொன்னார். அவரின் பாவனையும், கேட்ட மொழியும் இனவெறி பிடித்தவர் என்பதைச் சொல்லாமற் சொல்லியது. சரி பெட்டிகளைத் திறந்து காட்டுகிறேன் என்று ஒரு பக்கமாய் ஒதுங்கினேன். முன்னால் சென்ற நண்பர் என்ன நடந்ததெனக் கேட்டார். This guy asking me to open my luggage என்றபோது, வந்த எரிச்சலில் guy இற்கு முன்னர் f word பாவித்துவிட்டேன். நண்பருக்கு நான் சொன்னதைக் கேட்டுவிட்ட இந்த அதிகாரிக்கு இன்னும் இரத்தக் கொதிப்பு வந்துவிட்டது. 


சிலவேளைகளில் பேச்சு வழக்கில் f word பாவிப்பது போல இதை நான் அங்கே பாவித்தது தவறுதான். இது நான் தடுத்தவரை நோக்கிச் சொன்னது இல்லை, என் நண்பருக்கே சொன்னேன். ஆனால் இதையே நான் தமிழில் சொல்லியிருந்தால் இவருக்கு விளங்கியிருக்கவா போகிறது. உடனே கோபம் வந்துவிட்ட அவர் என் பெற்றோர், எங்கள் சந்ததியென எல்லோரையும் இழுத்தார். நான் எதுவுமே பேசவில்லை. ஒரு சுற்றுலாப் பயணியை இப்படித்தான் வழிநடத்துவரா என்ற யோசித்தபடி, அவரைப் படமெடுக்க முயன்றேன். உடனே என் அலைபேசியைப் பறித்து கேஸ் போடபோகின்றேன் என போனை என் அனுமதியில்லாமல் எடுத்துக் கொண்டு அருகிலிருந்த அலுவலகத்துக் கூட்டிச் சென்றார். அவரை பார்த்தல்ல, என் நண்பருக்குத்தான் இதைச் சொன்னேன் என்பதால் எனக்கு அவர் எந்தக் கேஸ் போட்டாலும் (ஆகக் கூடியது என்ன செய்வார்கள், இலங்கைக்குள் செல்ல அனுமதிக்காது, கனடாவுக்கு அப்படியே திரும்ப அனுப்புவார்கள், அவ்வளவுதானே) அதை எதிர்கொள்ளலாம் என அவரைப் பின் தொடர்ந்து சென்றேன்.


லங்கைக்குள் நுழைந்த அந்த ஞாயிறு Sunday Times எடுத்து வாசித்தபோது, முக்கிய செய்தியாக சுற்றுலாப் பயணிகளை இலங்கையில் தற்சமயம் மோசமாக வழிநடத்துவது பற்றிய செய்திகள் வெளிவந்திருந்தன. ரெயினில் போன சுற்றுலாப் பயணிக்கு செருப்பால் எறிந்தது, ஓட்டோவில் விமானநிலையத்துக்கு aggressive ஆக அழைத்துச் செல்ல முயன்ற ஆட்டோக்காரரின் விடீயோ என பல்வேறு வகைச் சம்பவங்கள்! இலங்கையின் சுற்றுலாத்துறை அமைச்சரும் இவை குறித்து கண்டித்ததுடன் உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனச் சொல்லியிருந்தார். அதை வாசித்தபோது சாதாரண/விளிம்புநிலை மனிதர்களை விடுங்கள், முதலில் உங்கள் விமான நிலையத்தில் இந்த அதிகாரநிலை அதிகாரிகளுக்கு எப்படி பயணிகளை வரவேற்பது என்பதைக் கற்றுக்கொடுங்கள் என எண்ணிக்கொண்டேன்.


நான் நின்ற ஹொட்டலில் அனுபவங்கள் எதிர்மறையாக இருக்கின்றதேயென சலித்துக் கொண்டபடி, ஒருநாள் காலையில் அங்கு உணவருந்தப் போனேன். நான் முரண்பட்ட மானேஜர் ஒட்ட வெட்டிய தலையோடு, கை முழுதும் tattoo வோடு macho வாக இருந்தார். அவரைப் பார்த்த என் நண்பர், ஆள் பழைய ஆர்மிக்காரனோ தெரியாது, சும்மா அவரோடு தனவாதே என்றார். எதற்கு வம்பென வாயைச் சாப்பிடுவதற்கு மட்டுமே திறப்பதென அதற்குப் பிறகு முடிவு செய்திருந்தேன். இரண்டு குழல் பிட்டும்,பூரியும், கோழிகறியும், பருப்பும், சம்பலும், சொதியுமென ஆற அமர்ந்து காலை உணவைச் சாப்பிட்டேன்.

பரிமாறிக்கொண்டிருந்தவருக்கு அப்படியொரு களையான முகம். பேச்சுக் கொடுத்தபோது மட்டக்களப்புப் பக்கம் சொந்த ஊரென்றார். சாப்பாடும் நன்றாக இருந்தது. மற்ற இடங்களில் உணவும், சேவையும் சிறப்பாக இருக்கும்போது நம்மியல்பிலே Tips கொடுப்பதைப் போல அவருக்குக் கொடுத்தபோது, அவர் ஏற்றுக்கொள்ள மறுத்தார். சரி ஒரு விருந்தினர் வீட்டுக்குப் போகும்போது ஏதாவது வாங்கிப் போவதில்லையா, அப்படி பொருள் வாங்கிச் செல்ல மறந்த சந்தர்ப்பமாக இதை நினைத்து இந்த அன்பளிப்பை ஏற்றுக்கொள்ளுங்கள் எனச் சொன்னபோதும் அதை வாங்க மறுத்தார். வேண்டுமெனில் மட்டுநகர் வந்தால் என் ஊருக்கு வாருங்கள், அப்போது விருந்தாளியாக ஏதேனும் வாங்கிக்கொண்டுவந்தால் பார்ப்போம் என அதே அப்பாவித்தனமான சிரிப்போடு சொன்னார்.

பயணிக்கும்போது பல இடங்களில், நல்ல அனுபவங்களைப் பெறுவதுபோல, பயணிகள் என்று தெரிந்து, இவர்கள் திரும்பி வரப்போவதில்லையென அறிந்து அறாவிலை கேட்கப்படுவதையும், ஏமாற்றப்படுவதையும் அனுபவித்திருக்கின்றேன். ஆனால் இப்படியொரு அருமையான மனிதரைக் கண்டதும், இந்த ஹொட்டலில் நான் சந்தித்த அனைத்து எதிர்மறை அனுபவங்களும் பண்ணைக் கடலில் மறைந்த சூரியனைப் போலக் கரைந்து போயின.

ஒரு நல்ல மனிதரை, ஒரு நல்ல அனுபவத்தை நீங்கள் சந்திக்கையில், ஒரு பயணம் இனிதாக நிறைவுபெறத் தொடங்குகின்றது.


***************

 

(Mar 10, 2023)


0 comments: