கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கொழும்பு - Gallery Cafe

Wednesday, July 26, 2023

 

தேமாப்பூ மீது மாமழை பொழிகிறது


கடும் வெயிலில் நெரிசல் நிறைந்த தெருக்களில் நடந்தபடி இருக்கின்றேன். கொஞ்ச நேரத்திலே உடல் Steam Bath எடுத்தது போல வியர்வையில் நனைந்துவிடுகின்றது. மேலைத் தேசங்களில் உள்ளறைக்குள் சூட்டைக் கூட்டி கஷ்டப்பட்டு hot yoga பழகுபவர்கள், இங்கே சும்மா நடந்தாலே போதும். வெயில், வியர்வைச் சுரப்பிகளை ஆலிங்கனம் செய்யும். தெருக்களின் சமதரையற்ற தரை, யோகாவின் அனைத்து ஆசனங்களையும் வளைவு சுழிவுகளுடன் எளிதாய்க் கற்றுத் தரும்.

எனினும் நான் இந்த நகரை, நாட்டை முன்னெப்போதும் இல்லாதளவுக்கு நேசிக்கின்றேன். வானில் அலைந்து திரிந்த பறவையொன்று தரைக்கு வந்து ஓய்வெடுப்பதைப் போல நான் இந்த நாட்களை ஆறுதலாக அனுபவிக்கின்றேன். எனக்கும், கழிவுநீரோடும் கான்களுக்கும் எந்த ஜென்மத்து உறவோ தெரியாது. இந்நகருக்கு முதன்முதலில் பதின்மத்தில் போரின் நிமித்தம் இடம்பெயர்ந்து வந்தபோது இந்த கழிவுநீர் கான்களோடு தொடங்கிய உறவு இன்னும் அறுபடுவதாய்க் காணோம். அன்று ஒவ்வொரு முடக்கிலும் நிற்கும் இராணுவத்தைத் தாண்டிப் போகும் பயம் ஒருபுறம் என்றால், மறுபுறம் வாடகை வீட்டின் தெருவோடு சமாந்தரமாக ஓடும் கழிவாற்றிலிருந்து எந்தக்கணம் விடுபடுவேனோ என்ற பதற்றத்தோடு விடுவிடுவென நடப்பதுண்டு.

கழிவு நீராறு இருப்பின் நுளம்புகளின் தொலை இன்னும் மிகுதியாகவும் இருக்கும். இன்றும் எத்தனையோ இரவுகள் கொசுவலையைப் போட்டும், விடிகாலைவரை நித்திரை வராத நாட்கள் நிறைய இருக்கின்றன.
நாட்டின் பொருளாதாரம் பாதாளத்தில் சரிந்து கிடக்கின்றது. விலைவாசியோ விமானமேறி தினம் தினம் வானத்தில் வைகுண்டம் தேடிப் பறக்கின்றது. இந்த நாடு மனிதர்கள் வாழத் தகுதியற்ற நாடென்று காண்பவர்களில் பலர் சொல்கின்றார்கள். கொதி அரசியலை மட்டுமல்ல, மென் நகைச்சுவையைக் கூடச் சகிக்காது கலைஞர்களை சிறைக்கு அனுப்புகின்றார்கள். இவ்வாறு அரசியலிலும், பொருளாதாரத்திலும் இரும்புத் திரைகள் ஒன்றன்பின் ஒன்றாக நாட்டை மூடியபடி இருக்கின்றன.

அப்படியெனில் எதனால் இந்த நாட்டில் இன்னமும் உலாவிக் கொண்டிருக்கின்றேன். ஒரு அந்நியனாக மாறிவிட்டதால்தான் இவை எல்லாம் அந்தந்த நேரத்துப் பிரச்சினைகள் போல உதறிக்கொண்டு தாமரை இலை நீர் போல எடுத்துக் கொள்கின்றேனா? நான் இங்கே பிறந்து பதின்மம் வரை அதன் அத்தனை கசடுகளோடும், இரத்த ஆறுகளோடும் வளர்ந்திருக்கின்றேன் என்பது ஓர் உதிர்ந்து போன கனவா?


நேற்று ஒரு ஓட்டோக்காரரைச் சந்தித்தேன். அவிசாவளையைப் பூர்வீகமாகக் கொண்டவர். அவரின் தந்தையார் ஒரு கடையில் அடிநிலைப் பணியாளராகத் தொடங்கி, பின் அந்தக் கடையை சொந்தமாக வாங்கி நடத்தியிருக்கின்றார். 83 தமிழின அழிப்பில் பக்கத்துக் கடை எரிக்கப்பட, இவரின் தந்தையாரின் கடை அரைகுறையாக எரிவதில் இருந்து தப்பித்திருக்கின்றது. ஒரு குழு கடையை எரிக்க, இன்னொரு குழு கடைக்குள் இருந்த உடைமைகளைச் சூறையாடிச் சென்றது என்றார். பின்னர் கிடைத்த பணத்துக்கு கடையை அடிமாட்டுக்குவிற்கவும், தன் தந்தையார் இந்தத் துயரத்தால் நோய்வாய்ப்பாட்டு இறந்தார் என்றார். பக்கத்துக்குக் கடை அனலைதீவுக்காரருக்குரியது. அவரின் கடை எரிந்தபோது, கடையென்ன கடை உயிரல்லவா முக்கியம் தப்புவோம் என்றபோது, எனக்குத் தெரிந்த இந்தச் சுற்றமும் நட்பும் தன்னைப் பாதுகாக்கும் என்றவரை அந்த ஊர்க்காரர் யாரோதான் எரியூட்டிக் கொன்றனர் என்றார்.

இப்படி எனக்குச் சொன்னவருக்கு இன்னும் துயரம் முடியவில்லை. திறந்த விஸா இனவழிப்பால் பாதிக்கப்பட்டவர்க்கென இங்கிலாந்து கொடுக்க, இவரின் மூத்த சகோதரர் அடுத்த ஆண்டில் இங்கிலாந்து சென்றிருக்கின்றார். சென்ற சகோதரர் ஏதோ நோயின் நிமித்தம் 2 வருடங்களில் இங்கிலாந்தில் இறக்க இன்னொரு சோகம் இவரின் குடும்பத்துக்குள் நிகழ்ந்திருக்கின்றது. இவை நிகழ்ந்து கிட்டத்தட்ட 40 வருடங்களாகி விட்டன. இன்னமும் அந்தத் துயரங்களைக் கைவிடமுடியாத ஒருவரின் தடயங்களை அவரின் முகத்தில் நான் பார்த்தேன்.

ஒவ்வொரு காதல் பிரிவின்போதும் நமது வேதனைதான் உலகின் மகத்தான வேதனையென நாம் எண்ணிக்கொள்வோம். அதுபோல் இந்த வாழ்வில் நம்முடைய வாழ்க்கைக் கதைதான் சோகமானது என்று எண்ணி மறுகும்போது, இன்னொருவர் வந்து அப்படியில்லையென தன் கதையால் எட்டியுதைப்பார்.



நான் அலைந்து கொண்டிருக்கும் பறவை போல என்னை உருவகித்திருந்தேனோ? ஒரு பறவை தன் பாதங்களை பனி மலையில் கொஞ்ச நேரம் விட்டுச் செல்வது போலத்தான் இந்த வாழ்வும் மரணமும் என்று ஸென் கூறுகின்றது. ஆனாலும் அந்த சொற்ப நேரச் சுவட்டுக்குள்ளேயே நாம் வாழ்வென நினைத்ததில் பெருமளவு இருப்பது துயரத்தின் அழியாக் கோலங்களே. எம் எல்லோர்க்கும் கிடைத்த அனுபவங்களைப் பார்த்தால், சித்தார்த்தருக்கு முன்னரே புத்தனாக நாட்டையும், வீட்டையும் விட்டு வெளியேறுகின்றவர்களாக நாங்கள்தான் இருக்கவேண்டும்.

என்னால் எதையும் மாற்றமுடியாது என்பதால் மட்டுமில்லை, என்னையே என்னால் எளிதாக மாற்றமுடியாது என்று தெரிந்தும் நான் இந்த நாட்டையும், இந்த வாழ்வையும் அதன் அத்தனை பலவீனங்களோடும் நேசிக்கின்றேன்.

இப்போது இந்நகருக்குரிய மாலைநேர மழை பொழியத் தொடங்குகின்றது. மிகுந்த மனோரதியமான ஓரு கஃபேயிலிருந்து நீர்த்தாரைகள் வீழ்வதைப் பார்க்கின்றேன். நீர்வண்ணங்களில் வரையப்பட்ட ஒரு கலைஞரின் ஓவியங்கள் சுற்றிலும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. சுருட்டப்பட்ட இலைகளில் பொதியப்பட்ட கறிகளோடு, சுடுசோறும், வாயில் வைத்தால் கரைந்துபோகின்ற இங்கே இதுவரை சாப்பிட்டிராத அவ்வளவு உருசியுடைய மாட்டிறைச்சியைச் சுவைக்கின்றேன்.

ஓர் ஒரத்தில் மண்ணிற வர்ணத்தில் தியானத்தில் இருக்கும் புத்தரை சாப்பிட அழைக்கின்றேன். நான் மாமிசம் சாப்பிடுபவனல்ல என்று தெரிந்தும் என்னை அழைக்கும் உன் குறும்புத்தனம் பிடித்திருக்கின்றதென அவர் தன் அசையா விழிகளால் சொல்கின்றார்.

தேமா மரங்களின் மீது இப்போது மழை சோவெனப் பொழிகிறது. காற்றின் துணையுடன் மரத்தில் இருந்து இறங்கி வரும் ஒரு தேமாப் பூவை நிலத்தில் விழாது நான் கையில் ஏந்துகின்றேன்.

அதை புத்தருக்கு முன் வைத்து, ‘புத்தர்என மனம் முழுதும் நிறைத்து வைத்திருக்கும் என் அனைத்துக் கற்பிதங்களையும் இல்லாமற் செய்ய வேண்டுகின்றேன். இப்போது நிறைந்து நிற்கும் என் மனதில் பொழியும் மழை தேமாப்பூவையும், புத்தனையும் ஆரத்தழுவிப் போகின்றது.

இவ்வுலகில் என் இருப்பு என்பது இக்கணத்தில் கடந்து போகின்ற ஒரு வாசனை. அவ்வளவேதான்!

*********************************


(Jun 07, 2023)


0 comments: