பசுமை தேடிய பயணங்கள் – 03
காலை உணவை முடித்துவிட்டு குமரி
அள்ள(அருவி)வைத் தேடிப் போகத் தொடங்கினேன்.
நான் நின்ற இடத்திலிருந்து 10-15 நிமிட நடைக்குள்
அங்கே போக முடிந்திருந்தது. போகும் வழியெங்கும் மரங்கள் பசுமையாக இருந்தது.
அதிலும் தித்திக்கும் பலாப்பழங்கள் மரங்களெங்கும் காய்த்துத்
தொங்கிக்கொண்டிருந்தன. காலை நேரமென்பதால் அருவியில் எவரும் இருக்கவில்லை.
சலசலத்தோடும் அருவி மட்டுமே துணையாகவும், இசையாகவும் இருந்தன.
இப்படி ஏன் ஹெஸ்ஸேவின் ‘சித்தார்த்தா’ எனக்குள் இடைவெட்டிப் போனார் என்று தெரியவில்லை. ஆனால் அவர் அடிக்கடி இப்படி மரங்களை, நதிகளைப் பார்க்கும்போது வந்து வந்து போவார். ஹெர்மன் ஹெஸ்ஸே இறுதிக்காலத்தில் வாழ்ந்த வீட்டை சுவிஸ்-இத்தாலி எல்லையில் பார்த்தபோதும், அங்கே ஒரு பெண்ணும், அவரின் குழந்தையும் மென் நீல ஆடையில் என்னைக் கடந்து போனபோது, ஹெஸ்ஸேயின் சித்தார்த்தா அவ்வளவு பெரும் முயற்சிசெய்து பேரழகி கமலாவை அடைந்துவிட்டு, ஒருபொழுது சட்டென்று அவளை நீங்கிப் போகும் கையறுநிலைக்காட்சி நினைவுக்கு வந்தது.
இவ்வாறு தொடர்பற்று நினைவுகளை அலைவுறுவுவதைத் தவிர்க்க, குமரி அள்ளவை அள்ளியணைப்போம் என்று அருவி வீழும் ஆழமான பகுதியில் அல்ல, பாதுகாப்பான பகுதியில் நின்று நீராடத் தொடங்கினேன்.
அங்கே திளைத்து நின்ற ஒன்றரை மணித்தியாலத்துக்குள், இரண்டு இளைஞர்கள் மட்டும் வந்து கொஞ்ச நேரம் செல்ஃபிக்கள் எடுத்துப் போனதைத் தவிர எவரும் வராமல் அவ்வளவு அமைதியாக அருவி இருந்தது. இந்த இடத்துக்கு அருகிலேயே சீதாவக்க தாவரவியல் பூங்காவும் இருந்ததென்றாலும் பார்க்க முடியவில்லை. நீர்வீழ்ச்சிகளைப் பார்ப்பதே இந்தப் பயணத்தின் நோக்கம் என்பதால் அருகிலிருந்த அருவிகளைத் தேடத் தொடங்கினேன்.
இவ்வாறான பயணங்களுக்கு நமக்கென்றொரு வாகனம் இருந்தால் நினைத்த இடத்தில் நின்று நின்று போகமுடியும். பொதுப் போக்குவரத்தில் போய்ப் பார்ப்பதென்றால் உள்ளே நிறைய நடக்கவேண்டி இருக்கும். குமரி அள்ளவிலிருந்து ஹொட்டலுக்கு இன்னொரு அருவியைப் பார்க்கலாம் என்று தேடியபோது அள்ள உட அள்ள என்றொரு இடம் சிக்குப்பட்டது. சிக்கல் என்னவென்றால் அது நடந்துபோக முடியாத தூரத்தில் இருந்தது.
மோட்டார் சைக்கிளும், ஓட்டோவும் மட்டும் ஒரளவுக்குக் கிட்டவாகப் போகக்கூடிய இடம். நான் நின்ற இடத்தில் ஊபரும் வருவதாய்க் காணோம். தெருவில் நின்று கையைக் காட்டி மறிப்போம் என்றால், அரிதாக வந்த ஆட்டோக்களும் 'அவுதுறு' பார்ட்டிக்குப் போகும் சனங்களோடு போய்க்கொண்டிருந்தார்கள். அதுவரை சூரியன் வெளிச்சிருந்த பகலில் மழையும் பெய்யத் தொடங்கிவிட்டது.
இறுதியில் என் நிலைகண்டு ஒரு ஓட்டோ நின்றது. அதையொரு பெண்தான் ஓடிக் கொண்டு வந்தார். உள்ளே அவரின் இரண்டு பிள்ளைகளும், அவர்களுக்கு வாங்கிய சின்னச் சைக்கிளும் இருந்தனர். என் நிலை கண்டு பரிதாபப்பட்டுத்தான் நிறுத்தியிருப்பார் போலும். போகவேண்டிய இடத்தைச் சொன்னேன். பின்னாலிருந்த சைக்கிள் முதுகைக் குத்தினாலும் நெருக்கி உள்ளே உட்கார்ந்தேன். ஓட்டோ முழுதும் சேகுவராவின் படங்கள். ஹெஸ்ஸே நினைவுக்கு வருவது போல சே இப்போது முன்னால் தோன்றினார். நிச்சயம் இந்தப் பெண்மணி ஒருகாலத்தில் ஜேவிபியின் தீவிர ஆதரவாளராக இருந்து புரட்சிக்கு உதவியிருப்பார் என்று கற்பனைக் குதிரை சிறகடித்து எனக்குள் பறந்தது. என் சிந்தனை அவருக்கு விளங்கியதோ தெரியாது, ஆனால் அந்த ஓட்டோவுக்கு நன்கு விளங்கிவிட்டது. ஆம், இடைநடுவில் அது சட்டென்று நின்றுவிட்டது. ஒற்றைப் பாதை என்பதால் பின்னால் வந்த வாகனம் எல்லாம் ஹோனடிக்கத் தொடங்கிவிட்டன.
இப்போது நான் ‘புரட்சிக்காரனாக’ உருவாகும் பொற்தருணம். கீழே இறங்கி ஓட்டோவைத் தள்ளினேன். அது மத்தியானச் சாப்பிட்டுவிட்டு பகல்கனவில் மூழ்கிய குதிரை போல அப்படியே நின்றது. ஒரு துளியும் அசைவதாய்க் காணோம். இந்தப் பெண்ணோ சிங்களத்தில் தள்ளு தள்ளு என்கின்றார். அது போதாதென்று பின்னாலிருக்கும் பஸ்காரர் விடாது ஹோர்ன் அடிக்கிறார். உள்ளேயிருக்கும் சின்னப்பிள்ளைகளோ சிரி சிரியென்று என் நிலைகண்டு சிரிக்கின்றனர்.
ஒரு தமிழ் மறவனுக்கு இப்படியா நடுரோட்டில் சோதனை வரவேண்டும் என்று எல்லாளனை நினைத்து தோளுக்கு வலுக்கொடுத்தேன். ஒருமாதிரி ஒரு ஓரமாய் ஆட்டோ போய்ச்சேர்ந்தது. அப்பாடா!
பிறகு ஏதோவெல்லாம் செய்து, அதற்கு பெட்ரோல் எல்லாம் தீத்தி ஓட்டோவை அந்தப்பெண் இயக்கிவிட்டார். ஆனால் அது பிறகு இன்னொரு இடத்திலும் பிரச்சினையை ஏற்படுத்தியது. இதாவது சமதரை, அது மேடு ஒன்றில் இனியும் ஏறமாட்டேன் என்று அடம்பிடித்து நின்றுவிட்டது. இப்போது என் நிலை இன்னும் பரிதாபமாகிவிட்டது. மேடென்பதால் அதை நான் பின்னால் நின்று தடுத்தும். என்னைத்தாண்டி இறங்கி இறங்கி பள்ளத்துக்குள் பாய்கின்ற நிலைமை வந்தது. நல்லவேளையாக எதிர்ப்புரத்தில் மோட்டார்சைக்கிளில் போன ஓர் இளைஞன் துணைக்கு வந்து, பெரிய கல்லொன்றை ஓட்டோ டயருக்குள் வைத்து, ஓட்டோ பள்ளத்துக்குள் பாய்வதைத் தடுத்துவிட்டோம். துட்டகைமுனுவுக்கு நன்றி.
இத்தோடு இனி மேலே தனது வாகனம் வராதென்று அந்தப் பெண்மணி கறாராகச் சொல்லிவிட்டார். அது கூடப் பரவாயில்லை பயணம் முழுமையடையாமலே சொன்ன பணத்தை கையில் தா என்றும் அடம்பிடித்தார். ஒரு சேயின் புரட்சித் தோழி இப்படிச் செய்வதா என்று கேட்கத்தான் மனம் விரும்பியது. பிறகு ஓட்டோ பாயாமல் இருப்பதற்காக வைத்த கல்லை, என் வாய்த்துடுக்கிற்காய் எடுத்து எறிந்தார் என்றால், என் நிலை என்னவாவது என்ற பயத்தில் கேட்ட பணத்தைக் கொடுத்துவிட்டு உட அள்ளவிற்கு மேலேறினேன்.
மழை இப்போது வலுக்கத் தொடங்கிவிட்டது. ஓரு வீட்டின் ஓரத்தில் ஒதுங்கி நின்று மழை கொஞ்சம் குறைய அருவிக்குப் போனேன். மழையையும் பொருட்படுத்தாது அருவியில் குளித்துவிட்டுக் கரையேறிய சில பெண்கள் கடந்து போனார்கள். மஞ்சள் தேய்த்தா குளித்தீர்கள் எனக் கேட்கத் தேவையில்லாது அப்படி அவர்கள் மலர்ந்திருந்தார்கள். இறுதியில் இவ்வளவு கஷ்டப்பட்டு மேடேறி வந்ததன் பெரும் பேறடைந்தேன். எங்கும் குறுக்கிடும் கமலாக்களால் நமக்கு இப்போதைக்கு ஞானமடைதல் சாத்தியமில்லை என்றும் தேற்றிக்கொண்டேன்.
குமரி அள்ள போல, இதில் நீர் அவ்வளவு பெருக்கெடுத்துப் பாயவில்லை.. கொஞ்ச நேரம் அதைச் சுற்றி இரசித்துவிட்டு ஒரு ஓட்டோவை பிடித்து பெருந்தெருவுக்கு வந்து கொழும்புக்கான பேருந்துக்காய் காத்திருக்கத் தொடங்கினேன்.
*********************************
(May 10, 2023)
0 comments:
Post a Comment