ஒரு காலத்தில் புலம்பெயர்ந்தவர்கள் எழுதிய அகதிக் கோரிக்கையெல்லாம் யாழ் மேயராக இருந்த "அல்பிரட் துரையப்பாவின் கொலை"யைச் சுற்றியிருந்தன. அகதி விண்ணப்பங்களில் ஒரே மாதிரியான கதையைப் பார்த்த அதிகாரிகள் எத்தனை துரையப்பாக்கள் இலங்கையில் கொல்லப்பட்டார்கள் என்று திகைத்ததாய் பல்வேறு புனைவுகள் இருக்கின்றன. 'எல்லாக் கதைகளும் ஏற்கனவே சொல்லப்பட்டு விட்டன' என்ற பின்னமைப்பியலை நடைமுறை வாழ்க்கையில் பரீட்சித்துப் பார்த்தவர்கள் நம் புகலிடத் தமிழர்!
"அல்பிரட் துரையப்பா முதல் காமினி (திஸநாயக்கா) வரை" என்று "தினமுரசு" பத்திரிகையில் வாராந்தம் வந்த தொடரை, அன்று கொழும்பில் இருந்த காலங்களில் அடிபட்டு வாசித்து, நானொரு புலம்பெயர் தமிழனாக பிற்காலத்தில் ஆவதற்கான தகுதிகளை என் சிறுவயதிகளிலேயே நானும் வளர்த்திருக்கின்றேன் என்பதும் ஆச்சரியமானதுதான். அந்தத் தொடரை எழுதியவரும், அதன் பொறுப்பாசிரியருமான ரமேஷ் அதே "தோழர்"களின் இயக்கத்தாலே பின்னர் கொல்லப்பட்டதும் அவலமானது.
அவ்வாறு, கடந்த ஒரு தசாப்தகாலமாய் "அண்ணைக்குப் பக்கத்தில் நின்றவர்கள்" என்றொரு புதிய கதையாடல் பிரபல்யமாகி இருக்கின்றது. உண்மையில் அவரோடு கடைசிக்காலத்தில் பக்கத்தில் இருந்தவர்கள் மே பதினேழோடு களச்சாவைக் கண்டவர்களாகவோ அல்லது இன்னும் இலங்கையில் இருக்கும் அடக்குமுறையின் நிமித்தம் மெளனமாகவோ இருக்க, வேறு பலர் இந்தப் புனைவுகளை கட்டவிழ்க்கத் தொடங்கினார்கள் ( இது தெரிதா சொல்லும் "கட்டவிழ்ப்பு" அல்ல).
அவ்வாறே சிங்கள வம்சம் சிங்கபாகு என்ற சிங்கத்திற்குப் பிறந்த விஜயனின் வருகையுடன் தொடங்குகின்றது என்ற மகாவம்ச புனைவைப் போல, "தம்பி இன்னமும் இருக்கின்றார்" என்று காலத்துக் காலம் தமிழ்நாட்டவர் சிலர் கட்டமைக்கும் கதைகளும் இருக்கின்றன.
இதுவரை சிங்களவர்கள் தமக்கான அனைத்துப் புனைவுகளும் மகாவம்சத்திலே இருக்கின்றது, இனி புதுப்புனைவுகள் வேண்டாம் என்றுதான் அமைதியாக இருந்தார்கள். புலம்பெயர்ந்தவர்களின் மீள்வருகையாலோ, இல்லை இந்தியர்களின் 'அணையுடைத்துப் பாயும்' இலங்கைச் சுற்றுலாப் பயணங்களாலோ அவர்களும் இந்தப் புனைவுக் கடலுக்குள் இப்போது குதிக்கத் தொடங்கிவிட்டார்கள். "இராவணன் ஒரு சிங்கள அரசன்" என்றும், இதுவரை இராவணனின் தொன்மத்து நீட்சியாக தமிழர் பிரதேசத்தில் இருந்த கன்னியா வெந்நீரூற்றுக்கள், "அனுராதபுரத்து பெளத்தத்தின் அடையாளங்கள்" எனவும் அவர்களும் புனவுகளை அவிழ்த்து விடத் தொடங்கிவிட்டார்கள்.
இவை கூடப் பரவாயில்லை. கடந்த மூன்று இலங்கைப் பயணங்களில் நானேறும் ஓட்டோக்காரர்கள்/டாக்ஸிக்காரர்களில் அரைவாசிப் பேர்கள் தாங்கள் இராணுவத்தில் இருந்தனர் என்கின்றார்கள். அதிலும் பலரிடம் இன்னும் தோண்டிக் கேட்டால், "நாங்கள் அதுபற்றி அதிகம் சொல்லமுடியாது, நாங்கள் இண்டலிஜென்சில் இருந்தோம்" என்கின்றார்கள். நாடு 'திவாலாகி'ப் போனாலும் இராணுவ பட்ஜெட்டையோ, இலட்சக்கணக்கிலிருக்கும் இராணுவத்தையோ குறைக்கமாட்டோம் என்று அடம்பிடிக்கும் இலங்கையரசு, இந்த இராணுவக்காரர்களை மட்டும் ஏன் வெயில் உருக்கி எறிக்கும் நேரங்களில் ஓட்டோ ஓட விட்டிருக்கின்றார்களென என் நெஞ்சம் பதைபதைப்பதுண்டு. முப்பது வருடங்களாக நீடித்த யுத்தத்தை 'மனித உரிமைகள் மீறாமல்' சுமுகமாய் முடித்துக் கொடுத்த இலங்கை இராணுவத்துக்கு, 'செய்ந்நன்றி' கொன்ற அரசு இது.
நேற்றுக்கூட மாத்தறையில் ஏறிய டாக்சிக்காரர் நானும் உளவுத்துறைதான்; இப்போது பூஸாவில் வேலை செய்து கொண்டிருக்கின்றேன் என்றார். அதிலும் முல்லைத்தீவு தமிழை விட யாழ் தமிழ் அருமையானது என்று எனக்கு வகுப்பு எடுத்தார். "டேய் நீ யாழ்ப்பாணத்துக்குப் போய் இப்ப பாரடா, அங்கே பெரும்பாலும் பேசுவது சென்னைத் தமிழடா" என்று சொல்ல வாயரித்தாலும், ஏற்கனவே எயார்போர்ட்டில் புகைத்த வாயை சூடாய்த் திறந்து பட்டபாடு போதும் என்பதால், அப்படியா ஜீ, ஓம் சேர் என்று சலாம் போட்டபடி வந்து, கொழும்புக்கான பஸ்செடுத்தேன்.
உலகத்திலேயே ஒருத்தன் உளவுத்துறையில் வேலை செய்தால், நான் உளவுத்துறையில் இருக்கின்றேன் என்று பொதுவெளியில் பெருமையாகச் சொல்கின்ற ஒரேயொரு நாடாக இலங்கை மட்டுந்தான் இருக்கும் போலும். இது கூடப் பரவாயில்லை. இன்னும் நான்கைந்து வருடங்களில் இவர்கள் நாங்கள்தான் கொடுங்கோலர் மகிந்தாவையும், கோத்தாவையும் பாராளுமன்றத்தில் இருந்து வெளியே அனுப்பி வைத்த உளவுத்துறை/ஆர்மிக்காரங்கள் என்று என்னென்ன கதைசொல்லப் போகின்றார்களோ, அதையெல்லாம் நான் எப்படியெல்லாம் தாங்கப் போகின்றேனோ தெரியவில்லை.
இந்த எல்லாப் புனைவுகளையும் கேட்பதிலிருந்து தப்ப எனக்கிருக்கும் சில தேர்வுகள்
-மீண்டும் இலங்கைக் குடிமகனாக மாறி என்னையொரு தேசப்பக்தன் என நிரூபிப்பது (One Nation One People, ஹொந்தாய் ஹொந்தாய் போம ஹொந்தாய்)
-இலங்கைக்குள் எங்கு பயணித்தாலும் இனி ஓட்டோ எடுக்காமல் இருப்பது
-நானும், ஏதேனுமொரு தமிழ் இயக்கத்தின் புலம்பெயர் உளவுத்துறைக்காரன் என ஓர் எதிர்க்கதையாடலை உருவாக்கல்
*************
(Mar 27, 2023)
2 comments:
அருமை..... அருமை இளங்கோ
7/08/2023 11:21:00 PMஉங்களை தொடர்ந்து வாசித்து வந்தாலும் அதிகம் கருத்துரைத்ததில்லை,அதிலும் அண்மையில் சுத்தமாக இல்லை ...உங்களின் பதிவுகளை இப்பொழுதெல்லாம் இங்கு அடிக்கடி
பார்க்க, படிக்க முடிகிறது .முன்பை விட உங்கள் எழுத்தில் ஒரு முதிர்ச்சி தெரிகிறது ..
எப்படி ஒரு விடையத்தை சுவாரசியமாக ,சுவையாக , எழுதுவது என்பது உங்களுக்கு இயல்பாகவே வருகிறது .தொடர்ந்து எழுதுங்கள் ,இங்கு பதியுங்கள்
வாழ்த்துக்கள் இளங்கோ
மிக்க நன்றி கரிகாலம். நலந்தானே?
7/09/2023 11:39:00 AMPost a Comment