கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கார்காலக் குறிப்புகள் - 11

Saturday, July 15, 2023

 

பசுமை தேடிய பயணங்கள் - 01



கடற்கரைகளைத் தேடிப் போன ஒவ்வொரு பயணங்களிலும் காடுகளும், மலைகளும் கூடவே நினைவில் வந்து கொண்டிருந்தன. கடல் பிடிக்குமென்றாலும் அது தத்தளிப்பான உணர்வெழுச்சிகளைத் தந்து கொண்டிருக்கும். காடும் மலைகளும் என்னை அமைதியாக்குபவை. நீலம் எனக்குப் பிடித்த வர்ணமென்று நினைத்துகொண்டதை, மரங்களின் பசுமை பச்சைக்கு அதிக ஈர்ப்புண்டுஎன மாற்றியும் இருக்கிறது. கடல்களைக் கொஞ்சம் தள்ளிவைத்துவிட்டு, காடுகளையும், நீர்வீழ்ச்சிகளையும் தேடிப் போகும் ஆசை ஏற்பட்டது.

தெற்குக் கடற்கரைகளுக்குப் போக புகையிரதங்களும், பேருந்துகள் செல்ல புதிய நெடுஞ்சாலையும், கொழும்பிலிருந்து அம்பாந்தோட்டை வரை கரையோரமாக இருக்கின்றது. காடுகளையும், மலைகளையும் தேட மத்திய மாகாணங்களுக்குச் செல்வதென்றால் நல்ல வசதியுடைய வாகன வசதி வேண்டும். இயற்கையின் வனப்பு போகும் திசைதோறும் விரிந்து கிடக்கும். ஆனால் நிறுத்தி நிறுத்தி இரசித்துப் போக புகையிரதமோ/பேருந்தோ அவ்வளவு தோதுப்படாது. மேலும் இப்போதிருக்கும் இலங்கையின் பொருளாதார நிலைமைக்கும், என் கையிருப்புக்கும் தனிப்பட்ட வாகன வசதி செய்வதெல்லாம் கற்பனையில் கூட சாத்தியமில்லை.


அநேகமாக புகையிரதங்கள்/பேருந்துக்கள்தான் என் பயணத்திற்கு கைகொடுப்பவை. ஆனால் தனியார் பேருந்துகளில் நெருக்கி ஆட்களை ஏற்றுவார்கள் என்பதோடு, இருக்கைகளின் இடமும் குறுகியதாக இருக்கும். இது போதாதென்று ஏதோ பட்டத்து இளவரசியின் பல்லக்கு போகின்ற மாதிரியான பாவனையில் திரைச்சேலைகளை உள்ளே போட்டு, கொஞ்சம் இருக்கும் கண்ணாடிகளையும் மறைத்திருப்பார்கள். மூச்சுவிடவே சிலவேளைகளில் கஷ்டமாயிருக்கும். இத்தோடு எல்லாம் உங்களை சும்மா விடமாட்டோம் என்று, கோத்தபாய ஐயா பதுங்கியிருக்கும் இடம் வரை கேட்கவேண்டும் என்பது போல, காலாவதியான சிங்களப் பாட்டுக்களை அலறல் ஒலியில் போடுவார்கள் (இலங்கையில் ஹோர்னே அடிக்கமாட்டார்கள் என்று முன்னொருபொழுது எழுதிய சாரு நிவேதிதா இன்றைக்கு அல்லவா இலங்கைக்கு வருகின்றார். அவரை ஒருமுறை இந்தத் தனியார் பேருந்தில் போகச் சொல்லவேண்டும்). ஆனாலும் ஊரோடு ஒத்துவாழ வேண்டும் என்பதால் வேறு வழிகளில் இல்லாதபோது இந்தப் பேருந்துக்களில் ஏறுவதுண்டு.

பசுமையையும், நீர்வீழ்ச்சியையும் தேடிப்போக ஒரே நீண்ட பயணத்தைச் செய்யாது, நின்று நிதானித்துப் போவதாகத் தீர்மானித்து ஓரிடத்தை இணையத்தினூடு பதிவு செய்து போனேன். 'அம்பலகமஎன்ற விடுதிக்குப் போனபோது புத்தாண்டுக் கொண்டாடங்களில் அது அமர்க்களப்பட்டுக் கொண்டிருந்தது. சில இடங்களில் வசதி நாம் நினைத்தற்கேற்ப இல்லாதுவிட்டாலும் வரவேற்பவர்களின் உடல் மொழியும் பேச்சும் நமக்கு உற்சாகமளிக்கும். இங்கே அந்த அதிர்வுகள் எதனையும் நான் உணரவில்லை. ஏனோதானோ என்று வரவேற்றவர்கள் ‘booking.com’ இல் பதிவு செய்ததை இரத்துச் செய்கின்றீர்களா எனக் கேட்டார்கள். வழமையாக நான் இப்படி இரத்துச் செய்வதில்லை. பரவாயில்லை, நேரே பதிவு செய்தால் அவர்களுக்கு கொமிஷன் இல்லாது முழுப்பணமுங் கிடைக்குமே என்று அதைச் செய்தேன்.

என் பெயருக்குரிய ஆவணத்திற்காக பாஸ்போர்ட்டைக் கொடுத்தேன். அறை தயாராகிவிட்டதெனச் சொன்னபோதுதான், பாஸ்போர்ட்டை அவர்கள் மீண்டும் தராதது நினைவுக்கு வந்தது. எங்கே என் பாஸ்போர்ட் என்றபோது, நீங்கள் அறையைக் காலி செய்யும்போது தருகின்றோம் என்றார்கள். எனக்கு வந்ததே கோபம், ஆனால் அதை அடக்கிக்கொண்டு அதை நகலாகவோ அல்லது போட்டோவாக எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் அசலை என்னிடம் தாருங்கள், அது தொலைந்துவிட்டால் எனக்குச் சிக்கலாகிவிடும் என்றேன். இல்லை இது இங்கு ஓர் சட்டமென்றனர். அப்படியா? நானும் இலங்கைக்குள் பல இடங்களில் பயணித்திருக்கின்றேன். அப்படியெவரும் என் பாஸ்போர்ட்டை வாங்கி வைத்ததில்லையேஎன்றேன்.

அவர்கள் திரும்பத் திரும்ப பாஸ்போர்ட்டைத் தரமாட்டோம் என்று அடம்பிடித்தார்கள். இறுதியில் இது இலங்கை முழுவதற்கான சட்டமில்லை. இங்குள்ள பொலிஸ் நிலையத்தின் கட்டளை என்றார்கள். அப்படியா, பொலிஸ் ஸ்டேசனுக்குப் போன் போடுங்கள். நான் கதைக்கின்றேன் என்றேன். இப்படியே இழுபட்டு அவர்களின் மானேஜர் எல்லாம் வந்தபின்னும் அப்படியேதான் அடம்பிடித்தார்கள். ஆனால் எனக்கு முன்பாக ஒரு குடும்பத்தினர் வந்தபோது இப்படி எந்த அடையாள அட்டை எதுவும் வாங்கி வைக்கவில்லையே, ஏனெனக் கேட்டேன்.

இனி இவர்களோடு பேசிப் பிரயோசனம் இல்லை என்ற முடிவுக்கு வந்தபோது, நீங்கள் இனவாதிகள் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டேன். நாங்கள் அனைவரும் இலங்கையர்கள், ஒரே இனத்தவர் என்றார் மானேஜர். நீங்களும், நாங்களும் ஒன்றல்ல என்றுதானே போராட்டங்கள் நடந்தன. இப்போது இதையும் செய்துவிட்டு ஒரே இனத்தவர், நாம் இலங்கையர் என்றால் முட்டாள்தனமாகத் தெரியவில்லையா என்று கூறிவிட்டு அம்பலகமத்தை விட்டு வெளியே வந்திருந்தேன்.

0000000

யணங்களில் இப்படி எதிர்பாராதாவையெல்லாம் நடக்கக் கூடியதுதான். ஆனால் அந்தத் துயர/கோப நினைவுகளுக்குள் மூழ்காமல் அடுத்து என்ன செய்வதென்பதையும் பயணங்களே நமக்குக் கற்றுத் தரும். வெளியில் வந்து அலைபேசியிலே இன்னொரு இடத்தைப் பதிவு செய்தேன். நேரமும் மதியத்தைத் தாண்டியதால், காதலிக்குக் கட்டாயம் தினம் கொடுக்க வேண்டிய முத்தத்தைப் போல பசியும் வயிற்றைப் பிறாண்டியது. இந்த இடம் எந்தத் திசையில் இருக்கின்றது என்பது பற்றி அக்கறைப்படாமல் பசுமை சுற்றியிருந்தால் மட்டுமே போதுமாக எனக்கு இருந்தது. அங்கே பேருந்து வசதிகள் இல்லை. எனவே ஊபர் மட்டுமே போகும். ஊபர் ஓட்டோவும் போகிறது போகிறது, இறுதியில் ஒரு எல்லையில் கொண்டு போய், இனி போவதற்குத் தெரு இல்லையென்ற இடத்தில் நின்றது.

இப்படித்தான் கேரளாவின் குமரகத்தில் நின்று
, இடுக்கிக்கு ஒரு இடத்தைப் பதிவு செய்துவிட்டு ஊபர் டாக்ஸியில் போகும்போதும் நடந்தது. அது மலையுச்சி. என் வாழ்வையே இங்கே கொண்டுவந்து முடிக்கத்தான் வந்தாயா என்று கெஞ்சுமளவுக்கு ஊபர் டிரைவரை அந்த இடம் வைச்சுச் செய்திருந்தது. ஆனால் அவ்வளவு அழகான இயற்கைக் காட்சி விரிகின்ற இடம். ஒருநாள் தங்க முடிவெடுத்ததை மூன்று நாட்களாக நீடித்து வேறெந்த இடத்தையும் அலைபாய்ந்து பார்க்காது, இயற்கையோடு அந்த இடம் ஒன்றிக்க வைத்தது. பல் வலி வந்ததால், ஒருநாள் மட்டும் மலையிறங்கிப் போய் அங்கே பல் வைத்தியரைப் பார்க்கவேண்டியிருந்தது. அந்தப் பெண் வைத்தியரின் பெயர் ஸக்காரியா என்று முடிந்ததால், நீங்கள் எழுத்தாளர் பால் ஸக்காரியாவின் உறவுக்காரரா என்று வலிக்கிடையிலும் அவரோடு கொஞ்சம் கடலை போடவும்முடிந்தது.

இலங்கையில் இந்த இடமும் உச்சிதான், பாதை முடிவடையும் இடத்தில்தான் என்றாலும் அந்தளவு உயரத்தில் இருக்கவில்லை. விடுதியின் அறைகளும் முழுக்கண்ணாடிகளால் சுவராக்கப்பட்டிருந்தன என்பதால் அறையே ஒரு காட்டின் நடுவில் இருப்பது போன்ற உணர்வைத் தந்தது. அருகில் எந்த உணவுக்கடையும் இல்லை என்பதால் அவர்களே உணவகமும் வைத்திருந்தார்கள்.  குளத்தில் பிடித்த மீனோடு நல்ல சாப்பாடும் சுடச் சுடக் கிடைத்தது.  அதை நடத்துபவரோடு அந்தச் சாப்பாடுடன் உரையாடச் சந்தர்ப்பம் வாய்த்தது.

அவர் ஒரு பொறியியலாளராக இலங்கை தொலைபேசி நிறுவனத்தில் வேலை செய்து
 இளைப்பாறிவிட்டு, தனது ஓய்வுக்காலத்தை வீணாக்காமல் அவரே வரைகலை செய்து இதை நிர்மாணித்திருக்கின்றார். சின்னதாய் இருந்த காணியில் தொடங்கி, பக்கத்து சிறு நிலங்களையும் வாங்கி இணைத்து இப்போது ஆறேழு அறைகள் இருக்கின்றன. குசினி முற்றிலும் ஊர்ச் சமையலறை போல் மண்ணாலும், மட்டையாலும் அமைக்கப்பட்டிருந்தது. அந்த இடத்துக்கு கொஞ்சம் விலை கூடத்தான், ஆனால் இடத்தின் அமைவும், உபசரிப்பும் விலைமதிப்பற்றவை. எனக்கும் இப்படி காட்டின் நடுவில், மரங்கள் சூழ ஒரு வீட்டில் வாழ ஆசை என்றேன். 'யாருடைய தயவுக்காகவும் காத்திராதே, நீயே அதை வடிவமைத்துக் கொள்வதுதான் நல்லது' என்றார். பக்கத்தில் ஒரு பத்தினி தெய்யோ இருக்கின்றார். அங்கே போய் அவரைப் பிரார்த்தித்தால் நினைத்தவை நடந்தேறும் என வழியும் காட்டினார் அந்தக் கிறிஸ்தவ நண்பர்.

ஆகவே வீடமைக்கின்றேனோ இல்லையோ, ஒரு பர்ணசாலையாவது அமைத்து இப்படியான ஓரிடத்தில் ஒருநாள் 
கொஞ்சக் காலமாவது வாழத்தான் போகின்றேன். தீபுவின் கவிதையைப் போல  அன்று நான் யோகியாகவோ அல்லது போகியாகவோ எப்படி வாழ்வது என்பது அந்த நேரத்துக்குரிய நியாயமாக இருக்கட்டும்.

"இன்னும் எத்தனை காலம்?"
என்கிற
ஒரே ஒரு வாக்கியம்
என்னைப் பாதி யோகியாகவும்
பாதி போகியாகவும்
மாற்றியது.
பிறகு
எனது உடலில்
ஒரு பாதி சொர்க்கத்துக்கும்,
மறுபாதி நரகத்துக்கும்,
நடந்து நடந்து களைத்தன.
~தீபு


*******************


(Mar, 2023)

0 comments: