பசுமையைத் தேடிய பயணங்கள் – 02
நான் தரித்து நின்ற இடம் மல்வானை
இறம்புட்டான்களுக்கு இலங்கையில் பெயர் பெற்ற இடம். சில ஊர்களில் மாமரங்கள்
வீட்டின் அடையாளமாய் முன்றலில் இருப்பது போல, இங்கே நான் பார்த்த அளவில் ஒவ்வொரு
வீட்டு முற்றத்திலும் இறம்புட்டான் மரங்கள் நன்கு கிளை
பரப்பி விரிந்து நின்றன. இந்தக் காலம் இறம்புட்டான்கள் காய்க்கின்ற காலம். எனவே
மரங்களில் மென்பச்சையில் காய்கள் வரத் தொடங்கிவிட்டிருந்தன.
ஆனால் பத்தினி தெய்யோ, நான் எந்தப் பெண்ணையும் பார்த்து சலனமடையாத இராமனின் நெருங்கிய உறவுக்காரன் என்று நினைத்துவிட்டார் போலும். தன்னைப் பார்க்காது போகக்கூடாதென்று 'ஊபர்'க்காரர்களுக்கு சித்து விளையாட்டைக் காட்டத் தொடங்கிவிட்டார். தங்கி நின்ற விடுதிப்பக்கமாய் எந்த ஊபரையும் விடமாட்டேன் என்று தெய்யோ குறுக்காய் மறித்து நின்றார். அப்படி அந்த மந்தீரிகத்திற்குள் விழாது ஒரளவு தப்பிவந்தவர்களையும் திசைதெரியாமலாக்கி தெய்யோ மடைமாற்றிக் கொண்டிருந்தார். இனியும் இயலாது என்று விடுதியில் இருந்து இறங்கி நடக்கத் தொடங்கினேன். தார் பரவாத தெருக்களில் நடந்து, வெயிலில் உக்கிரத்தால் வியர்வையும் களைப்பும் மேலோங்க ஓரிடத்தில் போய் அமர்ந்துவிட்டேன். என் பரிதாப நிலையைக் கண்ட ஒரு சிங்களக் குடும்பம், தங்களுக்குத் தெரிந்த ஓர் ஓட்டோவை அழைத்து என்னை ஏற்றிவிட்டனர்.
இனியும் பத்தினி தெய்யோவுடன் விளையாடக்கூடாதென்று, முதலில் தெய்யோவைப் பார்த்துவிட்டு, பிறகுதான் நீர்வீழ்ச்சிகளைப் பார்ப்பதென்று தெய்வம் பிடறியில் அடித்துச் சொன்னது. தெய்யோவிடம் வெறுங்கையோடு போகக் கூடாதென்று தாகத்துக்கு இளநீர் குடித்த கடையிலே இரண்டு நெய்ச்சட்டியும்,சாம்பிராணிக் குச்சிகளையும் வாங்கிக்கொண்டு உள்ளே போனேன். புராதனம் மிளிர நம் அம்மை வீற்றிருப்பார் என்று நினைத்த எனக்கு என்னே ஏமாற்றம்! அம்மை ஒரு பொம்மையாக இருந்தார். அவர் வேறு யாருமில்லை நம் கண்ணகிதான். கையில் சிலம்புடன் வீற்றிருந்தார். ஆனாலும் இதற்கிடையிலும் அம்மையின் திருவிளையாடல் விளங்கியது. நீ இராமன் வழிவந்தவனல்ல, என்னை அழியாப் புகழ் பெறச்செய்த சிலப்பதிகாரம் எழுதியவ இளங்கோவடிகளின் வழித்தோன்றல் நீயென எனக்கு உணர்த்தத்தான் அம்மை அங்கே அழைத்திருக்கின்றார். அம்மையே நீ வாழி!
இனியும் தாமதிக்க முடியாதென சீதாவக்க தாவரவியல் பூங்காவிற்கு அருகிலிருந்த இடத்தை நோக்கிப் பயணத்தைத் தொடங்கினேன். தெய்வத்தைத் தரிசித்தால் அடுத்து சொர்க்கந்தானே என்பதால் பதிவு செய்த விடுதியின் பெயரும் Heaven De Fountain என இருந்தது. உண்மையிலே பெயருக்கேற்ற மாதிரி அவ்வளவு அழகான இடத்தில்தான் அமைந்திருந்தது. அதைச் சுற்றி அருவி மூன்று திசைகளிலும் ஓடிக் கொண்டிருந்தது. விழிகளை விரித்தால் காணுமிடங்கெங்கும் பசுமை. சலசலவென்ற நீரோடையின் சத்தம் இசை போலப் பின்னணியில் எப்போதும் ஒலித்துக் கொண்டிருந்தது. நான் தங்கியிருந்த அறையில் இருந்து பார்த்தால் ‘குமாரி அள்ள’ என்ற அருவி, குமரியாக தளதளவென்று தூரத்தில் விழுந்து கொண்டிருந்தார்.
இன்றைய காலத்து மனிதர்களுக்கு எல்லாமே போதாமையாக இருக்கின்றன. மேலும் பயணங்களின்போது தம் வீட்டையும் அப்படியே காவிக் கொண்டு வருகின்றவர்களாகவும் இருக்கின்றார்கள். மரங்களும் நீரோடையும் பறவைகளும் கலந்து ஒரு அருமையான சூழலில், குடித்துக் கொண்டு ஒரு கும்பல் சத்தம் போட்டுக் கொண்டிருந்தது. மது அருந்துவதோ, கொண்டாட்ட மனோநிலையில் இருப்பதோ பிரச்சினையில்லை, ஆனால் இவர்கள் Karaoke இற்கு மைக் வைத்து பாட்டுக்களைப் பாடிக் கொன்று கொண்டிருந்ந்தார்கள். அவர்களுக்கே தாங்கள் என்ன செய்கின்றோம் என்று அறியா நிலை. இதற்குள் அடிக்கடி நிமிடக் குளியலுக்காய் நீச்சல் தடாகத்தில் இறங்குவதும், ஏறுவதுமாகவும் இருந்து, மற்றவர்கள் நிம்மதியாக நீச்சலடிக்க விடாதும் கத்திக் குழறிக் கொண்டிருந்தார்கள்.
இந்த Karaoke சத்தம், இரண்டாம் அடுக்கின் அறைக்குள், நான் பலகணிக் கதவுகளை மூடிய பின்னும் உள்ளே அதிர்ந்து கொண்டிருந்தது. மற்றவர்களின் வெளியைப் பற்றி அக்கறை கொள்ளாது, கொஞ்ச நேரம் இப்படிச் சத்தமாய் களியாட்டம் செய்கின்றார்கள் என்றால் கூட பரவாயில்லை. நான் அந்த விடுதிக்குப் போன பிற்பகலில் இருந்து இரவுவரை அதே அலறல் சத்தத்துடன் இருந்தார்கள். ஏற்கனவே அம்பலகமவின் அடிபட்டு நொந்துவிட்டதால், இங்கே பொறுமை காப்பதென்று எண்ணி மூடிய அறைக்குள் இருந்து இயற்கையை இரசிக்கத் தொடங்கினேன். மேலும் ஸென், சந்தைக் கூச்சல்களுக்குள் தியான மனோநிலையுடன் இருப்பதுதான் முக்கியமெனவும் போதிக்கிறது.
இரைச்சல்களில் இருந்து தப்புவதற்கு குமாரி அருவிக்குப் போவதென்றாலும் கொஞ்சம் உட்பாதைக்குள்ளால் நடக்கவேண்டி இருந்தது. வெயிலும் சாய்ந்து கொண்டிருந்ததால், நீர்வீழ்ச்சி குளிரவும் தொடங்கியிருக்கும். எனவே குமாரியை அடுத்தநாள் காலையில் போய் ஆரத்தழுவது என்று பகலிலே கனவு காணத் தொடங்கினேன்.
**************
(Apr 27, 2023)
0 comments:
Post a Comment