கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

சென்னை

Wednesday, July 05, 2023

வசந்த முல்லையும், சுறாப்புட்டும்...


சென்னையில் ஒரு இரவு பயங்கரப் பசியில் இருந்தேன். கடைகள் எல்லாம் பூட்டும் தருவாயில் இருந்தன. ஓர் உணவகத்தில் உணவு ஏதும் எடுத்துக் கொண்டு போய், விடுதியில் ஆறுதலாக இருந்து சாப்பிடலாமென தீர்மானித்திருந்தேன். மெனுவைப் பார்த்தபோது சுறாப்புட்டு வசீகரித்தது. இது பற்றிக் கேள்விப்பட்டிருக்கின்றேனே தவிர அதுவரை தைச் சாப்பிட்டதில்லை. கடைக்காரரிடம், அண்ணா ஒரு சுறாப்புட்டு பார்சல் என்று கூலாக் கூறிவிட்டுக் காத்திருந்தேன். இடையில் சந்தேகம் வர, இதனோடு சாப்பிட ஏதும் கிரேவி வேண்டுமா என்று கேட்டேன்; dry ஆகத்தான் இருக்கும், ஆனால் அப்படியே கூடச் சாப்பிடலாம் என்று அவர் ருசி காட்டினார்.


நான் காத்திருந்த சுறாப்புட்டு கையில் வந்தது. ஆனால் எனக்கு ஒரே அதிர்ச்சி. 300 ரூபாய் சுறாப்புட்டு ஒரு குட்டி டப்பாவில் தரப்பட்டது. நான் யாழ்ப்பாணத்து முட்டைப்பொறியல் பிரட்டித் தரும் புட்டைப் போல அல்லவா, இந்தச் சுறாபுட்டை எதிர்பார்த்திருந்தேன். திகைப்போடு கடைக்காரரிடம், "அண்ணா, சுறா இருக்கிறது, எங்கே புட்டு?" என்றேன். தம்பி இதுதான் சுறாப்புட்டு என்று அவர் அடம்பிடித்தார். எனக்கு அவ்வளவு கோபம். விஜய்தான் சுறா என்று ஒரு படம் நடித்து எங்களை ஏமாற்றினார் என்றால், நீங்கள் புட்டுத்தராமல் சுறாப்புட்டு தந்து என்னை ஏமாற்றிவிட்டீர்கள் என்று கடைக்காரரைத் திட்டிவிட்டு இன்னொரு தெருக்கடையில் பரோட்டாவும், பன்னீர்க்கறியும் வாங்கிச் சாப்பிட்டு என் வயிற்றெரிச்சலைக் கரைத்துக் கொண்டேன்.

இப்படி சுறாப்புட்டோடு சுதாகரித்திருக்க வேண்டும். ஆனால் சிங்காரச் சென்னையை காதலிகளை விடக் கூட காதலித்ததாலோ என்னவோ அடுத்த நாள்,'வசந்தமுல்லை' என்ற படம் பார்க்கப் போனேன். பகலில் சென்னை வெயில் சுட்டெரிப்பதால் மதியக்காட்சிக்கு ஏஸிக்குள் நிம்மதியாய் இருக்கலாம் என்பதும் படம் பார்க்கப் போனதற்கு இன்னொரு காரணம். ஒவ்வொரு பயணங்களிலும் புதிதாய் எதையாவது கற்கவேண்டும், அதுவரை தாண்டாத எல்லைகளைக் கடக்க வேண்டும். இல்லாவிட்டால் ஊர்சுற்றுவதில் என்ன பயன். 'வசந்தமுல்லை'யின் டிரெயிலர் பார்த்தபோது ஒரு அமானுஷ்யப் படம் போலத் தெரிந்தது. நான் இப்படியான அமானுஷ்ய/பேய்ப் படங்கள் பக்கம் போவதில்லை. அவ்வளவு பயம். இம்முறை இப்பயத்தைக் கடந்து -புதுவிடயமொன்றைப் பயணத்தின்போது கற்பதற்காக- வசந்தமுல்லைக்குப் போனேன்.

படத்தின் தொடக்கக் காட்சி சத்யம் தியேட்டரில் நடக்கும். அது காட்சிப்படுத்தப்பட்ட சத்யம் தியேட்டரில்தான் நானும் படம் பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு சண்டைக்காட்சி தியேட்டர் washroom இல் நடக்கும். எனக்குப் பிடித்த மசாலா 'டீ' எவ்வளவு இங்கே குடித்தாலும், இனி கழிப்பிடப் பக்கம் போவதில்லையென அப்போதே தீர்மானித்தேன். அநேகமாய் பேய் அங்கிருந்துதான் வெளிவரப் போகின்றதென்று இருக்கையை இன்னும் கைகளால் இறுக்கப் பிடித்தேன்.

அடுத்த காட்சி மூணாறிலோ
, இடுக்கியிலோ எடுக்கப்பட்டிருக்க வேண்டும். மர்மமான சூழல். அதன் பின்னணியில் ஒரு பாடல் நன்றாக ஒளிப்பதிவும் செய்யப்பட்டிருந்தது. மவனே/மவளே நீ எந்தப் பாலினப் பேயாக இருந்தால் என்ன, நானே இடுக்கியில் நள்ளிரவில் ஏலம் கள்ளமாகப் பிடுங்கத் தனியே போயிருக்கின்றேன். உன்னைச் சமாளிக்கத் தயார்' என்று வசந்தமுல்லையில் வரும் பேயைச் சந்திக்க அறைகூவல் விடுத்தேன். மனதுக்குள் வீர சபதம் எடுத்தது, பக்கத்து இருக்கையில் இருந்த பெண்ணுக்கு எப்படிக் கேட்டதோ தெரியாது, "அண்ணா, நீங்கள் நம்ம சீமானின் விடீயோக்கள் தினமும் பார்ப்பீர்களோ" என்று கேட்டார். "இல்லையே, நான் காலையில் கண் விழிப்பதே, என் குரு நித்தியானந்தாவின் சொற்பொழிவுகளோடுதான் என்றேன். அய்யோ, அது இன்னும் ஆபத்தானதே' என்று காலியான இருக்கை தேடி அடுத்த வரிசைக்கு அவர் எழும்பிச் சென்றுவிட்டார்.

எப்படா பேய் வரும் வருமென்று எதிர்பார்த்த எனக்கு, படம் முடியும்வரை பேயே வராதது சுறாப்புட்டில் புட்டு இல்லாதது மாதிரி ஏமாற்றமாக இருந்தது. அதுகூடப் பரவாயில்லை, தூக்கம் ஒழுங்காக இல்லாதுவிட்டால், சிந்திப்பது குழம்பும் என்று 5 நிமிடக் குறும்படத்தில் சொல்லவேண்டிய செய்தியை ஏன் 2 மணித்தியாலப் படத்தில் நீட்டித்துச் சொன்னர்களோ தெரியவில்லை.

இந்தத் துயரத்தை நண்பர் ஒருவருக்குச் சொல்லிக் கொண்டிருந்தேன். வசந்தமுல்லைக்குப் போனபோது கூட பக்கத்து அரங்கில் தீபிகா படுகோனேயின் "பதான்" போய்க் கொண்டிருந்தது. ஏற்கனவே தேசப்பற்று என் இரத்தத்தில் உயர் அழுத்தத்தில் இருப்பதால் பேய்ப்படம் பார்த்து, தைக் கீழே இறக்கத்தான் வசந்தமுல்லைக்குப் போனேன்ஆனால் பேயைக் கண்ணில் காட்டவில்லை என அவருக்குச் சொன்னேன். அவரோ, நீ இலங்கைத் தமிழ்ப் பாடத் திட்டத்தில் 'வசந்தமுல்லை பந்தடித்தல்என்ற காமக் கிறங்கல் பகுதியைப் படித்த ஞாபகத்தில் ஒரு செமி போர்ன் படத்தை எதிர்பார்த்து வசந்தமுல்லை’க்குப் போயிருப்பாய், உன்னை வைத்து நன்கு செய்துவிட்டார்கள் என்று சொல்லிவிட்டு ஹா ஹா எனச் சிரித்தார். 

இறுதியில் ஒரு மோகினியை எப்படியோ  நான் சந்தித்துவிட்டேன் என்று அவருக்குச் சொல்லவில்லை.

 
************


(Feb 13, 2023)

0 comments: