சிலவற்றை நிறைய யோசிக்காது செயற்படுத்தியாக வேண்டும்.
"தாய்லாந்து" புதினத்தின் கதைசொல்லி ஒரு நண்பனின் திருணத்துக்காய்
சென்னைக்குப் போவதற்குத் தயார்ப்படுத்துவதுடன் கதை
தொடங்கும். அதுபோல இப்போது நண்பரொருவனின் திருமணம் சென்னையில் நடக்கையில் போவதா
இல்லையா என்ற குழப்பத்தில் இருந்தவனை, கூடவே புத்தகக்
கண்காட்சிக்கும் சேர்த்து சென்னைக்கு இழுத்துக் கொண்டு வந்துவிட்டது.
புனைவு போல ஒரு வாழ்வு!
இந்தக் கண்காட்சியில் நிறைய நண்பர்களைச் சந்திக்கலாமெனினும், சிலரோடு மட்டுமே ஆறுதலாகப் பேச முடியும். ஒரு காலையில் 24 மணித்தியால விமானப் பயணத்தில் வந்து சேர்ந்தவனுக்கு காலநிலை, வாகனங்களின் பேரிரைச்சல்கள், நேரமாற்றங்கள் எல்லாம் சர்ரிலிய அனுபவத்தைக் கொடுக்கும். பிறகு ஊரோடு ஒத்துப்போக எல்லாம் இயல்பாகிவிடும்
'தாய்லாந்து' வெளிவந்திருந்த "எதிர்" நண்பர்கள் உற்சாகமாய் வரவேற்றனர். "மெக்ஸிக்கோ"வை பதிப்பித்த டிஸ்கவரி புக் பாலஸ்" வேடியப்பன், உங்கள் நூல்கள் அனைத்தும் விற்றுவிட்டன. அதற்கான ரோயல்டி தருகிறேன், மெக்ஸிக்கோ இன்னொரு பதிப்பு வெளியிடுவோம் என்று "பொங்கல் போனஸாக" இன்ப அதிர்ச்சி தந்தார். எப்போதும் போல என் தமிழகப் பயணங்களை இலகுவாக்கும் இனிய நண்பர் தளவாய் சுந்தரம் எனக்கான sim card உடன் என்னைச் சந்திக்க வந்திருந்தார்.
ஜீவா பூங்காவிற்கு அருகில் பணம் மாற்றுவதற்காய்ப் போயிருந்தேன். கடந்தமுறை சென்னை வந்தபோதும் ஆடைக் கடைகளுக்கு போய்விட்டு இங்கே வந்திருந்தேன். நடேசன் பார்க் என்றால் அங்கே இருந்து எப்போதும் எழுதிக் கொண்டிருக்கும் அசோகமித்திரனின் படிமம் தோன்றுவதில்லையா? அது போலத்தான் இதுவும். ஒரு தீவிர மார்க்ஸியரான ஜீவாவின் பெயரில் இருந்த பூங்காவின் உள்ளே பிள்ளையார் கோயில் இருந்ததை முதன்முறை இருளில் பார்த்தபோது சற்று வியப்பாயிருந்தது. இம்முறை பகலில் உள்ளே போய்ப் பார்க்கையில் ஒருபக்கம் பிள்ளையாரும், இன்னொரு பக்கம் ஜெய் மாதாவும் பொங்கலுக்கான அலங்காரத்துடன் வீற்றிருந்தனர். உள்ளே சிலர் விஷ்ணுவைப் போல கவலைகள் எதுவுமின்றி நிம்மதியாய்த் தூங்கிக்கொண்டிருந்தனர். இன்னொரு பக்கம் இளஞ்சோடியொன்று ‘instagram reels’ இற்கான காணொளியைச் சளைக்காது திரும்ப திரும்ப எடுத்துக் கொண்டிருந்தனர்.
ஜீவா பார்க்கில் இருந்தபடி பொங்கல் நாளன்று தமிழக தியேட்டர் அனுபவத்தை ஒருமுறை அனுபவித்துப் பார்க்கலாமென்று ‘வாரிசு’க்கும் ‘துணிவு’க்கும் முயன்றபோது நீயெல்லாம் ‘காணும் பொங்கலுக்கே இலாயக்கு’ என்று ஒரு ரிக்கெட்டுக்கும் கிடைக்கவில்லை. ஜீவா பார்க்கிற்கு முன்னால் இருந்த மரங்களில் கிளிகள் மட்டும் பாட்டுப் பாடி என்னைத் தேற்றி அனுப்பி வைத்தன.
மாலையில் நமது செல்வத்தாரின் 'பனிவிழும் பனைவனம்' புத்தக வெளியீட்டு நிகழ்வுக்கு, கனடா மாதிரியில்லாது நேரத்துக்குப் போகவேண்டுமென்று நந்தனம் போயிருந்தேன். செல்வத்தாரின் ரேஞ்சே இப்போது வேறுமாதிரி என்பதால் நாங்கள் போய்ச் சேர்ந்து அரைமணித்தியாலத்துக்குப் பிறகு - அவரின் அன்றைய தலை புரட்சித்திலகம் போல- கூட்டத்துக்கு தாமதமாக வந்து சேர்ந்தார். அதுகூடப் பரவாயில்லை, நாமெல்லாம் காலச்சுவடு அரங்கின் முன்றலில் நிகழ்வு நடக்கப் போகின்றதென்று காத்திருக்க, அவர் இலக்கியம் என்பது உள்வட்டத்துக்கு உரியதென்று காலச்சுவடு அரங்கின் பின்கோடியில் வைத்து பெருந்தலைகளுடன் அதை நடத்தி முடித்தார். அந்தக் கோபத்தில் நான் அவரின் 'பனிவிழும் பனைவனத்தை' வாங்காது பகிஷ்கரிப்புச் செய்தேன். செல்வத்தாரினால் நடந்த ஒரேயொரு நல்ல விடயம், காலச்சுவடு அரங்கில் பத்தினாதனைச் சந்தித்து கொஞ்ச நேரம் ஆறுதலாகப் பேச முடிந்தது என்பதே. எனக்கும் அவருக்கும் சில விடயங்களில் ஒற்றுமை இருக்கின்றதென்று இருவரும் பேசிக்கொண்டோம். ஆனால் அவரை இன்னமும் எந்த நிலப்பரப்பிலும் வேர்கொள்ள விடாத நுண்ணதிகாரத்தின் துயரம் எம்மைப் போன்ற எவராலும் துளியும் உணரமுடியாதது.
செல்வத்தார் தன் இரசிகைகளுக்கு கையெழுத்திட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தபோது, அஜிதனை அறிமுகப்படுத்தி விட்டிருந்தார். அஜிதன் நான் அவரின் 'மைத்ரி'க்கு எழுதிய விமர்சனத்தை யாரோ நண்பர் அனுப்ப வாசித்தேன் எனச் சொன்னார். எப்போதும் தொடக்கத்தில் கொஞ்சம் கறார், பிறகு போகப்போக மனம் கனிந்துவிடும் எனச் சொல்லி, அவரின் வல்லினக் கதையையும் வாசித்தேன் எனச் சொன்னேன். அகழில் அடுத்த கதை வரப்போகின்றதென்றார். என் விமர்சனம் வேறு, ஆனால் அஜிதன் எதையும் சுதந்திரமாகப் பேசக்கூடிய, உடனே நட்பு கொள்ளக்கூடிய ஒருவராகத் தெரிந்தார்.
முதல் நாளன்று சாரு நிவேதிதா கண்காட்சி முடியும்போது காரொன்று வந்து நிற்க ஸ்டைலாக ஏறிப்போனதைக் கண்டிருக்கின்றேன். படையப்பாவில் ரம்யாகிருஷ்ணன் சொல்வதைப் போல, வயதாலும் அந்த ஸ்டைலும் திமிரும் இன்னும் போகவில்லை போல சாரு இருந்தார். இன்று ஜீரோ டிகிரி பதிப்பகத்தில் சாருவின் ஒரு நூலை வாங்கி கையெழுத்திட்டு பாரிஸ் பயணங்கள்/ஆபீதின் கதைகள் பற்றிக் கதைப்போமா என்கின்ற ஆசை வந்தது. ஆனால் எனக்கும் இந்த சர்ச்சைகள்/நிரூபித்தல்கள் போன்றவற்றில் இருந்து விலகிப்போகும் காலம் கனிந்துகொண்டிருப்பதால் சாருவை அருகில் பார்த்தும், மூன்று முறைக்கு மேலாய் அவரைப் புத்தகக் கண்காட்சியில் கண்டபோதும் ஒவ்வொரு முறையும் விலத்தி விலகி வந்திருந்தேன். செல்வத்தாரின் புத்தக நிகழ்வில் இமையம், ‘எழுத்தை மட்டும் வாசித்துவிட்டு எழுத்தாளரைச் சந்திப்பதைத் தவிர்ப்பது’ நல்லதென்ற தொனியில் கூறியதைப் போல சாருவையும் இப்படியே ஒரு தொலைவில் வைத்து இரசிப்பது போதும் போல.
வயசாகிக் கொண்டிருப்பதால் இப்போது புத்தகக் கண்காட்சிக்குள் நடந்து திரிவதே பெரும் கஷ்டமாக இருக்கிறது. பதின்மங்களில் நின்றபடி 8 மணித்தியாலங்கள் வேலை செய்ததால் வந்த முள்ளந்தண்டு வலி இப்போது மீண்டும் உலுக்கியெடுக்கத் தொடங்கியிருக்கின்றது. இனியான காலங்களில் தனியே புத்தகக் கண்காட்சிக்கு என இவ்வளவு தூரம் பயணித்து வருவேனா என்பதில் நம்பிக்கை குறைந்து வருகின்றதென நண்பரிடம் சொன்னேன். செல்வதாரும் இனி இலக்கியத்தால் பயனில்லையென, அவர் வெளியிடும் 'காலம்' புது இதழ் வெளிவந்ததைக் கூட மறந்துவிட்டு, இயக்குநர்கள், பாடகர்களுக்கு கதை/ பாட்டுச் சொல்லிக் கொடுக்கப் போயிருக்கின்றார் என்றொரு கதையும் கேள்விப்பட்டேன். நானும் இனி சென்னைக்கு வந்தால் நடிகைகளை மட்டும் சந்திக்கச் செல்லலாமென நினைக்கின்றேன்
ஆண்ட்ரியாவுக்கு பொங்கல் வாழ்த்துகள்.
*************************
(Jan 16, 2023)
0 comments:
Post a Comment